வாகா: இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று(மார்ச் 1) இரவு 9.17 மணிக்கு இந்திய விமான படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில், பாகிஸ்தான் இருமுறை காலதாமதம் செய்து இரவில் தான் ஒப்படைத்தது.
காலை 10 மணிக்குக் குழும ஆரம்பித்த செய்தியாளர்கள், ஊடகங்கள் அபிநந்தன் பற்றிய செய்திகளைத் தந்துகொண்டே இருந்தன. இப்போது வந்துவிடுவார் என்று பலமணி நேரமாக இந்தியர்கள் அபிநந்தனை வரவேற்கக் காத்திருந்தனர்.
ராவல் பிண்டியிலிருந்து லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார் அபிநந்தன். பின்னர் வாகா எல்லையிலிருந்து 8 கி.மீ.,க்கு முன்னதாக படாப்பூர் முகாமில் வைக்கப்பட்டடார். அவர் வருகையில் ஏன் தாமதம் போன்ற விபரங்களை பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து வந்தார்.
இந்திய எல்லையைத் தொட்டவுடன் மக்கள் மகிழ்ச்சியில் ஜெயஹிந்த் கோஷத்தை எழுப்பினர். தமிழகத்தின் அனைத்து முக்கிய செய்தி ஊடகங்களும் இச்செய்தியை நேரலையில் ஒளிபரப்பின. தனித் தமிழகம் கோருபவர்களுக்கு இந்தியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் ஒட்டு மொத்த தமிழக மக்களும் எப்படி ஓன்று சேர்ந்துள்ளார்கள் என்பதை இன்று புரிந்து கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் இந்தியா என்ற தேசம் எக்காலத்திலும் உடைக்க இயலாது என்பதை இன்று தனித்தமிழ் தேசிய கோஷங்களை எழுப்பும் அடிப்படைவாதிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள்.