செய்திகள்

பாலா வி. பாலச்சந்திரன் மறைந்தார்

பிரபல களேபரங்களில் நிஜமான பல பிரபலங்களை மறந்துவிடத் தலைப்படுவது மனித இயல்பு. கடந்த சில நாட்களாக பாலிவுட் போதை, பிரியங்காவின் ஸ்வச் கெஸ்ட் ஹவுஸ், சீன, ஐரோப்பிய எரிபொருள் தட்டுப்பாடு, உள்ளிட்ட விஷயங்களில் ஒரு கல்வியாளர் காலமான செய்தி பின்தங்கிவிட்டது.

பாலா வி.பாலச்சந்திரன். சிறந்த கல்வியாளர், நிர்வாகி, மேலாண்மை ஆசிரியர், முன்னாள் ராணுவ வீரர் என்று பல பெருமைகளைத் தன் வசம் கொண்டவர். 84 வயதில் கடந்த செப்டம்பர் 28ஆம் நாள் காலமானார். Great Lakes Institute of Management என்ற நிர்வாகப் படிப்புக்கான நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி வெற்றிகரமாக சர்வதேசத் தரத்தில் நடத்தி வந்தவர்.

1937, ஜூலை 5 அன்று புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியில் வெங்கட்ராமன் – ஜம்பகம் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்தார். குலபதி பாலையா திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்த பாலச்சந்திரனைத் தன் மைத்துனரின் கருத்துப்படி கிறிஸ்தவப் பள்ளியில் சேர்த்தார் வெங்கட்ராமன். தயங்க வேண்டாம் பையன் மாறிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் கொடுத்த மைத்துனர் தீரர் சத்தியமூர்த்தி. அதன் பிறகு இண்டர்மீடியட் படிப்பை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் முடித்த பாலச்சந்திரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல், கணிதப் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மாமன்னர் கல்லூரியில் NCCல் சேர்ந்து சீனியர் அண்டர் ஆஃபீசர் என்று உயர்ந்தார் பாலச்சந்திரன். அதன் பிறகு முதுகலை முடித்தவுடன் ராணுவத்தில் சேர பயிற்சி மேற்கொண்டார். நாட்டுக்கு உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தில் ராணுவத்தில் சேர முனைந்தார். ஆனால் 1959ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தந்தை சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஆசிரியப் பணியில் சேர்ந்தார். 1962 சீனப் போரின் போது ராணுவத்தில் சேர்ந்து ஆபீசராகப் பணி செய்தார். ஐந்தாண்டுகள் short service commissionல் இருந்து கேப்டனாக உயர்வு பெற்றார். தென்பிராந்திய NCC கமாண்டராக ராணுவம் பாலச்சந்திரனை நியமித்தது.

Prof. Bala.jpg

1966ல் அமெரிக்காவின் புகழ்பெற்ற தரக்கட்டுப்பாட்டு வல்லுநர் டாக்டர் லாண்டிஸ் ஜெஃபார்ட் என்பவர் ஒரு மாதம் சென்னையில் தரக்கட்டுப்பாடு, உற்பத்தி சார்ந்த நம்பகத்தன்மை குறித்த ஒரு பயிற்சி வகுப்பில் பாலச்சந்திரன் பயின்றார். பயிற்சி முடிவில் அவருக்கு கல்விக்கட்டண விலக்கோடு ஆராய்ச்சிப் படிப்புக்கு அமெரிக்கா செல்ல டாக்டர் ஜெஃபார்ட் சிபாரிசில் USAID வாய்ப்பளித்தது. ராணுவத்தில் அனுமதி பெற்று short service commissionல் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா போனார் பாலச்சந்திரன். அங்கே ஒஹையோவில் டேய்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் (குவாலிட்டி இன்ஜினியரிங்) படிப்பை முடித்தார். அங்கேயே 1970ல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் MBA, PhD (Operations Research) முடித்தார். 1973ல் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். (இப்போது அது கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மண்ட் என்று அழைக்கப்படுகிறது). அங்கே பணியாற்றிய 30 ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதினார். நிதி நிர்வாகம், தகவல் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முத்திரை பதித்தார்.

பாலச்சந்திரனுக்கு வசந்தா என்ற மனைவியும் சுதாகர், திவாகர் என்ற மகன்களும் உள்ளனர். சுதாகர் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நிதி/கணக்கியல் பேராசிரியராக இருக்கிறார். திவாகர் டெக்ஸஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் கேன்சர் பிரிவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

2004ல் Great Lakes Institute of Management என்ற கல்வி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி இந்தியாவின் முதல் ஓராண்டு முதுநிலை நிர்வாகப் படிப்பை அறிமுகம் செய்தார். அந்தப்படிப்புக்கு AICTE அங்கீகாரமும் பெற்றார். சிறந்த நிர்வாகக் குழுவிடம் கல்வி நிறுவன நிர்வாகத்தை ஒப்படைத்த போதும் அங்கே கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

இது தவிர IIM-Bangalore & ISB Hyderabad ஆகிய உலகத்தர நிர்வாகக் கல்வி மையங்களைக் கட்டமைக்க பாலச்சந்திரன் உழைத்துள்ளார். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சேவைத் தரத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

2001ல் இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் பாலச்சந்திரன்.

கடந்த மாதம் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலச்சந்திரன் செப்டம்பர் 28ஆம் தேதி காலமானார். தமிழகத்தின் பெருமைமிக்கவர்களில் ஒருவரான பாலச்சந்திரன் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.

(Visited 73 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close