ஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும் – ஹரன் பிரசன்னா
மார்ச் மாதத்தில் தேர்வுகள் முடிவடைந்ததுமே குழந்தைகளைத் திரையரங்குக்கு ஈர்க்கும் நோக்கில் பேய்ப்படங்கள் வரத் துவங்கிவிடும். இந்தமுறை வரும் அனைத்துப் பேய்ப்படங்களையும் என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஹே ராம்! முதல் போணி ஐரா. எப்படியாவது ஒரு ஹிட் பேய்ப்படத்தைத் தந்துவிடுவது என்ற வெறியில் இருக்கும் நயந்தாராவிடம் இன்னும் எத்தனை முறை சிக்கிக்கொள்வோம் என்று தெரியவில்லை.
பேய்ப் படம் என்றால் ஒரு காட்சியில் கூடப் பயம் இருக்கக்கூடாது என்பதே தமிழ்ப் பேய்ப்படங்களின் தலைவிதி. காஞ்சனா, அரண்மனை போன்ற கொடுமைகள் பெற்ற வெற்றி, தொடர்ச்சியாக காமெடிப் பேய்ப் படங்களைக் கொண்டு வந்தன. கொஞ்சம் நல்ல முயற்சிகளான, தமிழின் உருப்படியான பேய்ப்படங்களான பீட்ஸா, மாயா மற்றும் டிமாண்டி காலணி போன்றவை வசூலில் ஒப்பீட்டளவில் பின்தங்கிப் போக, அசட்டு காமெடிப் பேய்ப் படங்கள் வசூலைக் குவித்தன. இந்த ஆசையில் வந்த படங்களுக்கு மத்தியில் ஐரா கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், இதில் அசட்டு காமெடிகூடக் கிடையாது!
கதை என்ற ஒன்று இல்லவே இல்லாமல், ஒரு காட்சி கூடப் பயமே இல்லாமல், ஒரு காட்சி கூடச் சிரிப்பே இல்லாமல் ஒரு படம். அதுவும் பேய்ப் படம். அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அந்த ஃப்ளாஷ் பேக், 1960களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அழுது வடிவதைவிடக் கூடுதலாக அழுது வடிகிறது. அதிலும் அந்த க்ளைமாக்ஸ், ஐயகோ.
நயந்தாராவுக்கு வயதாகிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. உடலைக் கச்சிதமாக வைப்பதன் மூலம் இளமையாகத் தெரிய முயல்கிறார். தெரிகிறார். முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆனாலும் அழகாகவே இருக்கிறார். ஓம் சாந்தி! கருப்பு நயந்தாராவாக அவர் ஓவராக நடிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம். தாங்கமுடியவில்லை.
யோகி பாபு ஏன் வந்தார், குலப்புள்ளி லீலா ஏன் செத்தார் என்பதெல்லாம் படுபயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள். அதைவிட அந்தப் வண்ணத்துப் பூச்சி ஏன் வந்தது என்பதை இயக்குநர் இனி வரும் படத்தில் சொன்னால்தான் உண்டு. வண்ணத்துப் பூச்சியே வெறுத்துப் போகும் அளவு அதை கிராஃபிக்ஸில் காண்பிக்கிறார்கள்.
கருப்பு நிறத் தோல், ராசியற்ற பெண் என்ற கொடுமையையெல்லாம் அப்படியே பொறுமையாக, மெல்ல, நீளமாக, தூக்கம் வருமளவுக்குக் காட்டுகிறார்கள். அந்தக் குழந்தை பிறந்ததும் அப்பா இடி தாக்கி இறப்பதாக எடுக்கவெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனது ஒரு இயக்குநருக்கு இருக்கவேண்டும்.
இதையெல்லாம் தாண்டி சிவப்பு நயந்தாராவை கருப்பு நயந்தாரா ஏன் கொல்ல நினைக்கிறார் என்பதற்குக் காட்டப்படும் காரணம், ஐயையோ ரகம். ஹீரோ கருப்பு நயந்தாராவைக் காதலித்து, இரும்புக் கோடரியைத் தொலைத்தவனுக்கு வனதேவதையின் மூலம் தங்கக் கோடரி கிடைப்பது போல சிவப்பு நயந்தாரா கிடைக்க, ஒரு நிமிடம் பொறாமைப்பட்டுவிட்டேன். ஆனால் இயக்குநர் பொலிடிகல்லி கரெக்நெஸ்ஸைக் கைவிடாமல் இன்னொரு க்ளைமாக்ஸ் வைத்து நம்மை மந்திரித்து அனுப்பிவைக்கிறார்.
மிக சுமாரான படமாக்கம், நாடகம் போன்ற காட்சிகள் என்று எல்லாவிதமான மொக்கைகளும் ஒருங்கே அமைந்த ஒரு திரைப்படம். நயந்தாரா நடிக்காமல் இருந்தால் அழகாக இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயம் வேறு. நம்மைக் கதறடிக்கிறார். அடுத்த பேய்ப் படமாவது நயந்தாராவுக்குச் சரியாக அமையட்டும்.
இந்தக் கொடுமையையெல்லாம் விஞ்சும் இன்னொரு கொடுமையைச் சொல்லாவிட்டால் முழுமையாகாது. ஐராவதம் என்ற யானையின் நினைவு சக்தியை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்தார்களாம். :சுவரில் முட்டிகொள்ளும் ஜிஃப்:
– ஹரன் பிரசன்னா
One Comment