ஏப்ரல் 30 – பாடகி ஹரிணி பிறந்ததினம்
தமிழ்த்திரை இசையில் பின்னணிப் பாடல் முக்கிய இடம் வகிக்கிறது. பல திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு இசையும் பாடல்களுமே காரணமாக இருந்துள்ளன. அந்த வகையில் திரைத்துரையில் பின்னணிப்பாடல் முக்கிய இடம் வகிக்கிறது. பின்னணிப் பாடகர்கள் பாடகிகள் என்ற வரிசையில் தவிர்க்க இயலாத இடம் பிடித்தவர் ஹரிணி.
1979 ஏப்ரல் 30 அன்று சென்னையில் பிறந்த இவர், நான்கு வயது முதல் திருமதி.கௌரி என்ற பாடகியிடமும், பின்னர் எம்.எஸ்.அவர்களின் மகள் திருமதி ராதா விஸ்வநாதனிடமும் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுள்ளார். பத்தாண்டுகள் இவர்களிடம் படித்த பிறகு திருமதி சுதா ரகுநாதனிடம் சில காலமும், திருமதி சுதா புருஷோத்தமன் என்பவரிடமும் இசை கற்றுள்ளார்.
பள்ளியில் படித்த காலத்தில் இசைப்போட்டிகளில் கலந்து கொண்டு பாடி பரிசுகள் பல வென்றார் ஹரிணி. அப்படி ஒரு போட்டியில் பாடிய போது வெற்றி பெற்றவர்களை ஏ.ஆர்.ரஹ்மான் தன் அலுவலகத்துக்கு அழைத்து குரலைப் பதிவு செய்யச் சொன்னார். ஹரிணியும் பதிவு செய்தார். 1995ல் இந்திரா படம் இயக்கிய சுஹாசினி மணிரத்தினம் அந்தப் படத்தின் நிலா காய்கிறது பாடலைப் பாட ஹரிணியை அழைத்தார். 15 வயதில் முதல் திரை இசைப் பாடலைப் பதிவு செய்த ஹரிணி அதன் பிறகு பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.
1997ல் நேருக்கு நேர் திரைப்படத்துக்குப் பாடிய மனம்விரும்புதே என்ற பாடலுக்கு மாநில அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது பெற்றார். அதன் பிறகு பல்வேறு பாடல்களைப் பாடி திரை இசைவானில் ஜொலித்தார் ஹரிணி. பின்னர் 2003ல் பார்த்திபன் கனவு திரைப்படத்துக்காக ஆலங்குயில் என்ற பாடலைப் பாடி மாநில அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது பெற்றார். அதோடு அல்லாமல் சென்னை கல்ச்சுரல் அகாடமி, ITFA, Silver Screen MGR Award, Roja Award, Pace Award என்று பல விருதுகளைப் பெற்றார்.
ஹரிணி பின்னணிப் பாடகர் திப்புவை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திரைஇசை தவிர அம்மன், விநாயகர், பெருமாள் பெயர்களிலும் பக்திப் பாடல்கள் பாடி இசைக் கோவைகளை வெளியிட்டுள்ளார் ஹரிணி.
இசையால் வசமாகார் இதயம் எது! இசைபட வாழ்க!