சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

காதலுக்காக முடி துறந்த அரசன் – எட்டாம் எட்வர்ட் நினைவுநாள் மே 28.

காதலுக்கு கண்ணில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் காதலுக்காக ஒரு பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை உதறித்தள்ளுவது என்பது எல்லோராலும் நினைத்தே பார்க்கமுடியாத ஓன்று. அதிலும் சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அரச பதவியை விட்டு விலகுவது என்றால் அந்தக் காதலின் ஆழம் நமக்குப் புரியவரும்.

இங்கிலாந்து அரசன், தெற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட பெரும்பான்மை ஆப்பிரிக்கா கண்டம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா போன்ற டொமினியன் நாடுகளின் தலைவன், பிளவுபடாத இந்திய துணைக்கண்டத்தின் ( இன்றய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் மியான்மார் ) பேரரசன் என்று உலகத்தின் சரிபாதி நாடுகளின் தலைமைப் பொறுப்பை இரண்டு முறை திருமணமாகி இரண்டு முறையும் விவாகரத்தான ஒரு பெண்மீது கொண்ட காதலால் உதறித்தள்ளியவர் இன்றய நாளின் நாயகன் எட்வர்ட் ஆல்பர்ட் கிறிஸ்டின் ஜார்ஜ் ஆண்ட்ரு பேட்ரிக் டேவிட் என்ற எட்டாம் எட்வர்ட்.

1894ஆம் ஆண்டு யார்க் இளவரசரும் பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் என்ற பெயரில் மன்னரானவருக்கும் முதல் மகனாகப் பிறந்தார். அப்போது இங்கிலாந்து நாட்டை அவர் தந்தையின் பாட்டி விக்டோரியா மஹாராணி ஆட்சி செய்துகொண்டு இருந்தார். விக்டோரியா மஹாராணி காலத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பின்னால் இங்கிலாந்து அரச பரம்பரைக்கு இந்தியாவின் ஆட்சி கை மாறியது. விக்டோரியா மஹாராணிதான் முதல் முதலில் இந்தியாவின் பேரரசி என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்.

இவரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவியேற்ற பின்னர் இவர் வேல்ஸ் இளவரசர் என்று அறிவிக்கப்பட்டார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் இறந்த பின்னர் இவர் எட்டாம் எட்வர்ட் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டின் மன்னராக முடிசூட்டப்பட்டார். அதோடு காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும், இந்தியாவின் சக்ரவர்த்தியாகவும் பிரகடனப் படுத்தப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் அமெரிக்காவைச் சார்ந்த வாலிஸ் சிம்ப்சன் என்ற பெண்ணின் மீது எட்டாம் ஜார்ஜ் காதல் வயப்பட்டார். வாலிஸ் இருமுறை மணமானவர். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து அடுத்த கணவரையும் அவர் விவாகரத்து செய்யும் காலகட்டத்தில் இருந்தவர்.

இங்கிலாந்து மன்னர் ஆங்கில நாட்டு சர்ச்சின் தலைவரும் ஆவார். ஏற்கனவே மணமாகி விவாகரத்தான பெண் ஒருவரை அரசர் மணப்பது என்பது பழமையில் ஊறிய ஆங்கிலேயர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எட்டாம் எட்வர்ட் மன்னருக்கு ஓன்று காதலைத் துறக்கவேண்டும், அல்லது மக்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது காதலிதான் முக்கியம் என்றால் அரசாட்சியைத் துறக்க வேண்டும் என்ற மூன்று வாய்ப்புகள்தான் இருந்தன. காதலிக்காக அரசாட்சியைத் துறந்து விடுவது என்று எட்டாம் எட்வர்ட் முடிவு செய்தார். 1936ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் நாள் தனது உடன்பிறந்தார் முன்னிலையில் தான் அரச உரிமையைத் துறப்பதாகவும், தனது வாரிசுகள் யாருக்கும் அரசாட்சியில் எந்த உரிமையும் இல்லை என்றும் அறிவித்து பதவியில் விட்டு விலகினார். ஆங்கில வரலாற்றில் மிகக் குறுகிய காலமே மன்னராக எட்டாம் ஜார்ஜ் பதவி வகித்தார். அவருக்குப் பின் அவர் சகோதரர் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராகப் பதவி ஏற்றுக்கொண்டார். ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மகள்தான் தற்போதைய இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத்.

ஆங்கிலேய சர்ச் எட்வர்டின் திருமணத்தை நடத்தி வைக்க மறுத்ததால் அவர் வாலிஸை பிரான்ஸ் நாட்டில் உள்ள கிருஸ்துவ தேவாலயம் ஒன்றில் மணந்து கொண்டார். பதவி இழந்த எட்வர்டுக்கு வின்சர் பிரபு என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை இங்கிலாந்து நாட்டிற்கு வெளியே கழித்த எட்வர்ட் தொண்டையில் உருவான புற்றுநோய் காரணமாக 1972ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு பதினான்கு ஆண்டுகள் கழிந்து 1986ஆம் ஆண்டு அவர் காதல் மனைவி வாலிஸ் காலமானார்.

காரண காரியங்களை தாண்டியது காதல் என்பது எட்டாம் எட்வர்ட் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.

(Visited 240 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close