இது பயோபிக் என்று சொல்லப்படும் சுய சரிதை சினிமாக்களின் காலம். மன்மோகன்சிங் ஆட்சி காலத்தை மையப்படுத்திய ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த வாரம் பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராம ராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியானது.
என்.டி.ஆர் -கதாநாயகடு என்ற பெயரில் வெளிவந்த இப்படத்தில் என்.டி.ஆரின் மகனும் தெலுங்கு தேசம் கட்சி சட்ட மன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணாவே தன் தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்தார். என்.டி.ஆரின் திரைப் பயணம், சொந்த வாழ்க்கை தொடங்கி அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை கிட்டத்தட்ட காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் இந்த படம் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கூட்டணிக்கு சிக்கலையும் தர்மசங்கடமான சூழ்நிலையையும் உண்டாக்கியுள்ளது.
என்.டி.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத்தான் தெலுங்கு தேசம் கட்சியையே உருவாக்கினார். படத்தில் இது தொடர்பான காட்சிகளும் வசனங்களும் காங்கிரஸ் கட்சிக்கும் , டெல்லி தலைமைக்கும் எதிராக இருக்கிறது. ஆனால் இப்போது நாயுடு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார். இந்த சூழலில் ஆந்திர எதிர்கட்சிகள் நாயுடுக்கு எதிராக இந்த படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் ஆரம்பித்தது இருப்பதாக தெரிகிறது.