சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

இந்தியப் புலிகளின் காவலன் – பாதேஹ் சிங் ரத்தோர் – ஆகஸ்ட் 10

ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்திய புலி வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பாதேஹ் சிங் ராத்தோரின் பிறந்ததினம் இன்று.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புர் மாவட்டத்திலுள்ள சோரடியா கிராமத்தைச் சார்ந்தவர் ரத்தோர். இவரது தாத்தா ஒரு ராணுவ வீரர். இவர் தந்தை காவல் அதிகாரி. டெஹ்ராடூனில் பள்ளிப்படிப்பையும் ராஜ்புதான பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார் திரு ரத்தோர். படிப்பைக் காட்டிலும் நாடகத்திலும் விளையாட்டிலும் மனதை பறிகொடுத்தார் ரத்தோர். கல்லூரி படிப்பை முடித்த ரத்தோர் ராஜஸ்தான் மாநில வனத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத் மஹாராணியும் அவர் கணவர் இளவரசர் பிலிப்பும் 1961ஆம் ஆண்டு பாரதம் வந்திருந்தபோது அவர்கள் வேட்டையாட ரத்தம்பூர் காடுகளுக்கு வந்தனர். அவர்களை உபசரிக்கும் பொறுப்பு ராத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதுதான் முதன்முதலில் ஒரு புலியை ரத்தோர் நேரில் பார்த்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு காடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார் ரத்தோர்.

தொடர்ச்சியான வேட்டைகளால் இந்திய புலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. அரசு இந்திய காடுகளில் வேட்டையாடுவதை தடை செய்தது. புலிகளைக் காக்கும் Project Tiger என்னும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. ஒரு காட்டில் புலி இருக்கிறது என்றால் அங்கே பல்லுயிர் பெருக்கம் சரியாக உள்ளது என்று பொருள். அடர்ந்த காடுகளில்தான் பொதுவாக புலிகள் வசிக்கும். Ecological Pyramid என்னும் சுற்றுச்சூழல் அமைப்பின் உச்சியில் புலி உள்ளது. புலிகளை பாதுகாப்பது என்பது மொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்பதே ஆகும்.

பாரத நாட்டின் ஒன்பது வனப்பகுதிகளை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. ரத்தம்பூர் சரணாலயமும் அதில் ஓன்று. அந்த சரணாலயத்தின் பொறுப்பாளராக ரத்தோர் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த வனப்பகுதிக்குள் மக்களின் வசிப்பிடங்களும் இருந்தது. விவசாயத் தேவைக்காக மக்கள் காட்டு மரங்களை வெட்டியும், அங்கே உள்ள நீர்நிலைகளை தூர்த்தும் வந்தனர். பதினாறு கிராமங்களில் வசித்துவந்த ஏறத்தாழ பத்தாயிரம் குடும்பங்களை வனப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் பொறுப்பு ராத்தோரிடம் வந்தது. பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாறிச் செல்லுமாறு செய்வது என்பது மிகக் கடினமான செயல். அது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் வேலை. கடினமான இந்த வேலையை மிகத் திறமையாக ரத்தோர் செய்து முடித்தார்.

மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், காடு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளத் தொடங்கியது. மரங்கள் வளர ஆரம்பித்தன. புலிகளின் காலடித்தடங்கள் தெரியத் தொடங்கின. ஒரு நாள் ஒரு எருமைமாடு கொல்லப்பட்டு இருந்ததை ரத்தோர் பார்த்தார். அது ஒரு புலியாலதான் வேட்டையாடப்பட்டு இருக்கும் என்று கணித்த ரத்தோர் ஒரு மரத்தின்மீது அமர்ந்து புலிக்காக காத்துக் கொண்டு இருந்தார். ஒரு பெண்புலி தன் குட்டிகளோடு அந்த எருமையை உண்ண வந்தது. மீண்டும் மீண்டும் பல்வேறு நேரங்களில் அதே பெண் புலியை ரத்தோர் பார்க்க நேர்ந்தது. அந்தப் புலிக்கு அவர் தனது மகளின் பெயரான பத்மினி என்று பெயர் சூட்டினார். அந்த வனப்பகுதியில் இருந்த எல்லாப் புலிகளையும் அவரால் தனித்தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும். பத்தாயிரம் புலிகளுக்கு நடுவே என் புலிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அவர் பெருமையாகக் கூறுவது வழக்கம்.

வனவிலங்குகளின் உடலுறுப்புகள் அகில உலக கள்ளச் சந்தையில் பெருமதிப்பு உடையவை. எனவே சட்டத்தை மீறி வேட்டையாடுவது இன்றும் தொடர்கிறது. அதுபோன்ற கயவர்களால் பலமுறை ரத்தோர் தாக்கப் பட்டதும் உண்டு. பொதுவாக நாடோடிகளாகவும், வேறு தொழில் எதுவும் தெரியாதவர்காளாகவும் உள்ள மக்களே வேட்டைக்காரர்களுக்கு உதவி செய்வது வழக்கம். எனவே அப்படியான இனக்குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு வேறு வருமானம் வரும் கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தால் சட்ட விரோதமான வேட்டைகளைக் குறைக்கலாம் என்று கருதிய ரத்தோர் தனது சேவை அமைப்பின் மூலம் அதனை முன்னெடுத்தார். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்த முடியாது. எனவே வனவிலங்கு பாதுகாப்பில் பொதுமக்களையும்   பங்குதாரர்களாக ரத்தோர் இணைத்துக் கொண்டார்.

தனது நீண்ட ஐம்பதாண்டு கால வனப்பாதுகாப்பு சேவைக்காக புலி பாதுகாப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை அன்றய பிரதமர் குஜரால் ரத்தோர் அவர்களுக்கு வழங்கினார்.  இந்திய புலிகளை நேசித்த, அவைகளை பாதுகாக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட திரு ரத்தோர் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி காலமானார்.

(Visited 31 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close