ஜீவா என்றோர் மானிடன் – ஆகஸ்ட் 21
தமிழகம் கண்ட தன்னலம் இல்லா தலைவர்களில் முக்கியமான தோழர் ஜீவா என்ற ப ஜீவானந்தத்தின் பிறந்தநாள் இன்று. காந்தியவாதியாகத் தொடங்கி பொதுவுடைமை போராளியாக பரிணமித்த தலைவர் ஜீவா. இந்த நாடுதான் எனது சொத்து என்று காந்தியிடம் ஜீவா கூற, இல்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்று காந்தியால் புகழப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும், அறியாமையால் கம்பனையும் திராவிட இயக்கங்கள் அவதூறு செய்த காலத்தில், மேடைதோறும் பாரதியையும் கம்பனையும் முழங்கி அவர்களை மக்களிடம் சேர்த்த இலக்கியவாதி தோழர் ஜீவா.
நாகர்கோவில் மாவட்டத்தில் பூதப்பாண்டி நகரில் பட்டத்தார் பிள்ளை – உமையம்மாள் தம்பதியரின் மகனாக 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்தவர் இவர். சிறுவயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பள்ளிக்காலத்திலேயே தனது எழுத்தின் மூலம் காந்தியைப் பற்றியும் கதர் பற்றியும் கவிதைகளும் நாடகங்களும் எழுதி அதனை மேடையேற்றவும் செய்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அப்போதுதான் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். போராளிகளின் மரணம் நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டு செய்தது. சிறையில் இருந்த ஜீவானந்தம் பொதுவுடைமை கருத்துக்களால் கவரப்பட்டார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் ? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அதற்காக மீண்டும் சிறைப்பட்டார். புத்தகத்தை வெளியிட்ட ஈ வே ரா மன்னிப்பு கோரி சிறை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டார். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி ஜீவா சிறையில் இருந்தார்.
1938ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஜீவா தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவரோடு தேர்வானவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோர். வழக்கம் போல உள்கட்சி பூசலால் 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இவரை கட்சியில் இருந்து நீக்கியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
அதன் பிறகு தனது வாழ்க்கை முழுவதும் பொது உடைமைவாதியாகவே ஜீவா வாழ்ந்தார். ஆங்கில அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. எனவே சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 1952ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றினார்.
இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி ‘தாமரை’ இலக்கிய இதழை தொடங்கினார். ‘ஜனசக்தி’ நாளிதழையும் தொடங்கினார்.
இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாலும், துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா.
கருத்துரீதியில் எதிரணியில் இருந்தாலும் எளிமையும், தூய்மையும், தேசபக்தியும் இணைந்து வாழ்ந்த மாமனிதன் தோழர் ஜீவாவின் வாழ்வு பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடமாகும்.