மகாமுனி – திரைப்பார்வை – ஹரன் பிரசன்னா
Spoilers ahead.
‘மௌன குரு’ எடுத்த இயக்குநரின் படம் என்பதாலேயே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மௌன குரு எதிர்பார்ப்பே இல்லாமல் வந்த நல்ல படம். மகாமுனிக்கு இதுவே ஒரு பெரிய அழுத்தத்தைத் தந்திருக்கும். ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் (என்று நினைக்கிறேன்) என்பது கத்தி மேல் நடப்பது.மிகக் கவனமாக இதைச் செய்ய நினைத்திருக்கிறார் சாந்தகுமார். பட சுவரொட்டிகளிலெல்லாம் உலகத் தரத்தில் ஒரு திரைப்படம் என்றெல்லாம் போட்டிருந்தார்கள். எனக்கு கமலின் சூரசம்ஹாரம் நினைவுக்கு வந்தது! நல்லவேளை, இது அந்த அளவுக்கு இல்லை.
இரன்டு முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகள். அரசியல் கொலைகளில் அடியாழம் வரை தொட்டிருக்கிறார். ஆணவக் கொலையில் கொஞ்சம் மட்டுமே பேசி இருக்கிறார். எனவே அரசியல் தொடர்பான காட்சிகள் முதலில் சவசவ எனத் தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் வேகம் பிடிக்கின்றன. முனி தொடர்பான காட்சிகள் அப்படியே ஏதோ போகின்றன.
எத்தனை பெரிய இயக்குநரும் ஏன் இந்த இரட்டை வேடக் கதைகளில் விழுந்துவிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசியில் அத்தனையும் இந்த ஆள்மாறாட்டத்துக்கா என்றாகும்போது சே என்றாகிவிடுகிறது. இதை முதலிலேயே காண்பித்துவிடுகிறார்கள். சஸ்பென்ஸ் என்றெல்லாம் வைத்து காதில் பூ சுற்றவில்லை. ஆனால் எப்படியும் இப்படித்தான் ஆகப்போகிறது என்னும்போது, இத்தனை நாள் எத்தனையோ தடவை தமிழ்த் திரையுலகம் சப்பிப் போட்ட மாங்கொட்டையை மீண்டுமா என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆர்யா நன்றாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியாக வரும் நடிகையும் நன்றாக நடிக்கிறார். இளவரசு வழக்கம்போல நல்ல நடிப்பு. மற்றவர்கள் யாருமே ஒட்டவில்லை. மௌன குருவில் இருந்த ஒரு கச்சிதம் இதில் இல்லை என்பதே பெரிய குறை. படம் ஆணவக் கொலை அரசியல் கொலை என்றெல்லாம் சுற்றினாலும் யாரையும் எந்த மதத்தினரையும் புண்படுத்தவேன்டும் என்ற எண்ணமெல்லாம் சாந்தகுமாருக்கு இல்லை என்பது ஆசுவாசம். மலினமான கேலிகள், வம்பிழுத்தல் என எதுவும் இல்லை. முதல் காட்சியில் வழுக்கைத் தலையுடன் கருப்புக் கண்ணாடி போட்டிக்கொன்டு மஞ்சள் துண்டுடுன் ஒருவர் தமிழ்ச் செய்யுளில் ஆரம்பிக்கவும் ஆகா என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் இல்லை.
வசனங்களைக் குறைத்து, நடிகர்களின் நடிப்பைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி ஒரே ஒரு கதையை மட்டும் ஆழமாகப் பேசி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கவேண்டிய படம் இப்போது எங்கேயோ தேங்கி நிற்கிறது. மற்றபடி உலகத் திரைப்படம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
பின்குறிப்பு: நடிகை ரோஹிணி நடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு வசனம் மட்டுமே. சாந்தகுமாரின் இந்த முன்னெச்சரிக்கையைப் பாராட்டவேன்டும்.
ரொம்பச் சின்ன ஸைஸ் விமர்சனமா இருக்கே. ஸ்க்ரீன் ஸைஸ் சின்னதாக உள்ள செல்ஃபோனில் படம் பார்த்துவிட்டு எழுதி இருப்பாரோ ?