வளர்ச்சி அரசியலுக்கு வித்திட்ட மகான் தீனதயாள் உபாத்தியாயயா:
2014ஆம் ஆண்டு பதவியேற்ற பாஜக அரசாங்கம் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் பெயரை சூட்டியது. மேலும் அவரது வாழ்வு மற்றும் சாதனைகளை விளக்கும் வண்ணம் 15 புத்தகங்களின் தொகுப்பையும் பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிட்டார். இன்று அவரது நூற்றி மூன்றாவது பிறந்தநாள். பண்டிட் தீனதயாள் அவர்களின் அரசியல் கொள்கை தன்னலமற்ற தியாக வாழ்வு மற்றும் சித்தாந்தங்கள் இந்த கட்டுரையில் விவாதிக்கப்படுகின்றன.
அரசியல் சிந்தனை மற்றும் கொள்கை:
சுமார் 15 ஆண்டுகள் பாரதிய ஜன சங்கத்தின் தேசிய செயலாளராகப் பணியாற்றிய தீன்தயாள் அவர்கள் ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்ல சிறந்த சிந்தனைவாதி, பொருளாதார மேதை , பத்திரிக்கையாளர், தத்துவஞானி ,சமூகவியலாளர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பதை தாண்டி அவர் மிகச்சிறந்த சிந்தனாவாதியாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காக அர்ப்பணம் செய்தவர். சமூகப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு மக்களின் கஷ்டங்களை உணர்ந்தார். இந்த தேசத்தின் இயற்கை அமைப்பு, பண்பாடு, தர்மம் மற்றும் ஆன்மிகத்தை தெளிவாக கற்றுணர்ந்தார்.
சுதந்திரத்துக்குப் பிறகும் கூட நமது அரசியல் கட்சிகளின் சிந்தனை மேற்கத்திய சிந்தனையாகவே தொடர்ந்தது. இந்தியர்களின் மனம் மற்றும் சிந்தனை ஓட்டம் பாரதிய தன்மை கொண்டதாக இருக்கவில்லை. இந்திய அரசியலில் காணப்பட்ட மேற்கத்திய தன்மை மற்றும் ஊழல்கள் அவரை மிகவும் கவலை அடையச் செய்தன. இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல் கோட்பாடுகள் செயற்கையானவை என்று கருதினார். இவை பாரத தேசத்திற்கு ஒவ்வாதவை என்று எடுத்துரைத்தார். அரசியலிலிருந்து தர்மத்தை அதாவது அறநெறியை பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை கொள்கை ஆக்கினார். அவர் வலியுறுத்தியவை : அரசியலில் தூய்மை, எளிமையான வாழ்க்கை மற்றும் நேர்மை, தர்மம், கலாச்சாரத்தை விட்டுவிடாது கடைபிடித்தல். இத்தகைய சிந்தனைகள் அரசியல் தளத்திற்கு ஒரு புத்துணர்வை கொடுத்தது. 1965 ஆம் ஆண்டு புனேயில் நடைபெற்ற பாரதிய ஜன சங்க கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் இந்த தீர்க்கமான கொள்கையை முன்வைத்தார். இந்த விளக்கங்கள் ஏகாத்ம மானவ வாதம் என்ற கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏகாத்ம மானவ தரிசனம் என்பது மேற்கத்திய சிந்தனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும். மேற்கத்திய கோட்பாடுகள் பெரும்பாலும் உலகியல் மற்றும் பொருள் வாழ்க்கை சார்ந்ததாகவே இருக்கின்றது. பொருளாதார வளர்ச்சி வளர்ச்சியை மட்டுமே மையமாகக்கொண்டு உள்ளவை. ஒரு தனி மனிதனை கூட பொருளாதார கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்றன. மனிதனது சமூகத் தொடர்புகள், கலாச்சார சூழ்நிலை மற்றும் மனமகிழ்ச்சி போன்றவை நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் பாரத தேசத்தின் ஆன்மீகம் மற்றும் தர்மம் ஒரு தெளிவான பார்வையயை முன்வைக்கின்றது. அறம் இல்லாத பொருளாதாரம் மற்றும் ஒழுக்கமில்லாத அரசியல் ஒரு சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்றார் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா. பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் கோட்பாடுகளும் மக்களின் பரம்பரியம் , கலாச்சாரம், இயற்கை வளங்கள் மற்றும் அவர்களின் எண்ண ஓட்டங்களை ஒட்டி அமைய வேண்டும். அதாவது தர்ம- காம -அர்த்த-மோக்ஷ என்ற நான்கு சாராம்சங்களை முன்நிறுத்தினார் . இவற்றுக்கிடையே சமநிலையில் இருக்கும்போது சமுதாயத்தில் சமத்துவம் இருக்கும் .
மேற்கத்திய ரிலிஜியன் (Religion) என்பது நமது தர்மம் என்பதன் அர்த்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தர்மம் என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் அவனைச் சுற்றியுள்ள ஒட்டு மொத்த சமுதாயத்தை சார்ந்தது. ஆனால் ரிலிஜியன் என்பது தனிமனித நம்பிக்கை. ரிலிஜியன் மேற்கத்திய கோட்பாடு. கடவுள் நம்பிக்கை மட்டுமே அதன் பிரதானம். ஒரு சமுதாயம் ரிலிஜியன் இல்லாமல் இயங்க முடியும். ஆனால் தர்மம் இல்லாமல் இயங்க முடியாது . தர்மம் என்பது ரிலிஜியனை விட மேலானது. இதுவே தீனதயாள் அவர்களின் ஏகாத்ம மானவவாதம் எனும் பாரதிய சித்தாந்தம்.
காங்கிரஸ் இல்லாத அரசாங்கத்தின் அஸ்திவாரம் :
1960இல் தீன்தயாள் அவர்கள் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையை உருவாக்க ஆரம்பித்தார். காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளும் இயக்கங்களும் எழுந்தன. காங்கிரஸ் அல்லாத ஒரு இயக்கத்தை கட்டமைக்க இவரே அடித்தளம் இட்டார். சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக 1977ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை உருவாக்க வழிகோலினார். இந்த ஜனநாயக நாட்டில் பன்முகத் தன்மைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்; ஒரே கட்சி ஒரே தலைவர் ஒரே கொள்கை இருக்கக் கூடாது என்று விரும்பினார். இந்திய நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இவை அரசியலோடு இணைந்தே இருக்கவேண்டும் என்றார். இவரது அணுகுமுறைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலில் மென்மையான போக்கை கடைப்பிடித்தாலும் கொள்கை ரீதியாக சமரசம் செய்யாதவராக இருந்தார். ஜமீன்தார் முறை ஒழிப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட 6 சொந்தக் கட்சி எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கினார். எண்ணிக்கையை விட தரம்தான் முக்கியம் என்பது அவரது கொள்கை.
சப்கா சாத் – சப் கா விகாஸ் எனும் நரேந்திர மோதியின் சுலோகம் பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்களது தூண்டுதலால் ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல. மக்களை தன் சொந்த காலில் நிற்கச் செய்ய வளர்ச்சி ஒன்றே வழி. 1960 காலகட்டத்தில் கூட தொழில்துறை வளர்ச்சி, கிராமப்புற மக்களின் வாழ்வில் முன்னேறம் மற்றும் தற்சார்பு பொருளாதாரம் போன்றவற்றை முக்கியப்படுத்தினார். பண்டிட் தீனதயாள் அவர்களது கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் இன்றைய காலகட்டத்திற்கு மிகப் பொருத்தமானவை. அவர் எதை உபதேசம் செய்தாரோ அதன் வழியில் வாழ்ந்து காட்டினார். இன்றைய அரசியல்வாதிகள் தீனதயாள் உபாத்தியாயா அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பண்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
முனைவர். சந்தோஷ்குமார் முத்து