சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள் – அக்டோபர் 20

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். சாகித்ய அகாடெமி விருது பெற்ற அந்தப் படைப்பாளியின் பிறந்தநாள் இன்று. 

இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை’, `நெல்லைப்பள்ளு’ போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.

இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். தொமுசியின் முதல் சிறுகதை பிரசன்ன விகடன் என்ற பத்திரிகையில் வெளியானது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொமுசி சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் தினமணி மற்றும் முல்லை என்ற இலக்கிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி’ என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார்.இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்’ என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்’ நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்’ என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். 

1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்’ நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. மாக்ஸிம் கார்க்கியின் படைப்பான தாய் என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். 

தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் ரகுநாதன் காலமானார். 

(Visited 162 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close