திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி, மனுக்குறள்? (பகுதி 1) | முனைவர் செ.ம. மாரிமுத்து
திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. காரணம் இருக்கிறது.
அன்வர் செரிபு என்று எனக்கொரு நண்பர். என்போலவே மார்க்ஸீய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டு, மதம் என்னும் பேய் பிடிக்காத, மதம் கடந்து சிந்திக்கும் அகண்ட பார்வை கொண்டவர். தொழிற்சங்கத் தோழர். பல எதிர்ப்புகளை மீறித் தன் மகளுக்குக் கேரளப் புரட்சி வீராங்கனையான அஜிதாவின் பெயரை வைத்தவர். தமிழில் மிக நல்ல புலமை கொண்டவர். என் திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட்டிருப்பதைப் பார்த்து இவர் ஆச்சரியப்பட்டுவிட்டுச் சொன்னார்.
‘எதைப் படித்தாலும் முழுசாய்ப் படிக்க வேண்டும். ஆழ அகலப் படிக்க வேண்டும். இங்கே அங்கே ஒரு பாட்டை உருவிப் பார்த்தால் இப்படித்தான். திருக்குறள் இன்றைக்கு இந்துத்வாவாதிகள் பரப்பிவரும் பிற்போக்கு மனுவாதக் கருத்துகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூசகமாய் வித்திட்ட ஒரு நூல். எத்தனை பெரியார் வந்தாலும் மீட்கமுடியாத, தமிழர்களுடைய மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமான நூல் இதுதான்’ என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆத்திரம் பொங்கிவர, ‘என்னப்பா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறாய்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைச் சொல்லும் திருக்குறள் எங்கே, பிறப்பால் பேதம் கற்பிக்கும் வர்ணாஸ்ரமத்தைத் தூக்கிப் படிக்கும் ஆரிய மனுவாத நூல்கள் எங்கே?’ என்றேன்.
‘முதல் அடியைச் சொல்லிவிட்டு அடுத்த அடியை விட்டுவிட்டால் எப்படி? சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்று தொழில்ரீதியாக மனிதர்களைப் பிரிப்பதே மனு தர்மம்தானே’ என்ற நண்பர், மேலும், ‘வள்ளுவர் பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பு, இழிபிறப்பு, (மேல்பிறந்தார், கீழ்ப்பிறந்தார்) பிறப்பொழுக்கம், குலவொழுக்கம் போன்ற ஆதாரமான வர்ணாஸ்ரம நம்பிக்கை கொண்டவர்தான்; ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரமே இதற்கு உதாரணம்; ஒழுக்கம் என்றால் நன்னடத்தை (டிஸிப்லின்) என்ற பொருளில் இங்கே சொல்லவில்லை, அவனவன் ‘குலதர்ம’ப்படி, சாதிவழக்கப்படி ஒழுகுவதையே இங்கே ஒழுக்கம் என்கிறார். ‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’ என்ற குறளுக்கு அடுத்து, பார்ப்பானின் பிறப்பொழுக்கம் குன்றக்கூடாது என்று அவர் சொல்வதிலிருந்து உயர்ந்த பிறப்பு, இழிந்த பிறப்பு என்ற கேடுகெட்ட நம்பிக்கையைத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.
’இப்படி ஆரிய வேதநூலுக்கு விளக்கம் சொல்லவந்த தமிழ்நூலே திருக்குறள்’ என்றும் சொன்னார். அவர் என்னை மேலும் ஆழ்ந்து படிக்கச்சொன்ன பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் முதலிய பலர் எழுதிய உரைகளையும், தொடர்புடைய பல நூல்களையும் தேடிப் படித்தேன்.
படிக்கப்படிக்க எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அந்தணர் (பிராமணர்), அரசர் (சத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) ஆகிய நான்கு வர்ணத்தார்க்கும் உரிய கடமைகளைப் புகழ்ந்துபாடி அவர்கள் அவற்றை விட்டுவிடாமல், தொடர்ந்து செய்வதுதான் உத்தமமான செயல் என்று தெள்ளத் தெளிவாய்ச் சொல்வதோடு, அவர்ணாக்கள் (குலமிலர், பஞ்சமர்) என்போரைக் ‘குடியிலார்’ என்றும், ‘கீழ்’ என்றும் சொல்லும் இந்த நூலா உலகப்பொதுமறை என்று இத்தனை காலம் சொல்லப்பட்டு வந்திருக்கிறது!
இதை ஓர் அபாண்டக் குற்றச்சாட்டாக பலர் நினைக்கலாம். ஆனால் ஆதாரங்கள் இருக்கிறதே.
மனுநூலின் தமிழ்வடிவே திருக்குறள்!
“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…”
(பெருந்தொகை – 1543 )
அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்ததைச் செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.
வழக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே எனது என்று இருப்பார் அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன் கோடல் முதலிய பதினெட்டு பதத்ததாம்.
தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும், வழக்க நெறியினும் வழீஇயனாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.
இவற்றுள் வழக்கமும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பு இலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதுதான் நால்வகை நிலைத்தாய் (நால்வகை நிலையாவன: பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆசிரமங்கள்) வருணந்தோறும் வேறுபாடு உடைமையாயின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம், துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.
- இது திருக்குறள் உரையின் முன்னுரையில் (உரைப்பாயிரம்) பரிமேலழகர் சொல்வது. திருவள்ளுவரின் இதயம் கண்டவர் என்று தமிழ்ப்புலவர்களால் வானளாவப் புகழப்படும் பரிமேலழகர், சுற்றிவளைத்து இங்கே குறள் சொல்லும் அறம் என்பது மனு தர்மமே என்றும், அதனைப் பொது இயல்பு பற்றிப் பெரும்பான்மைக்குத் திறம்பட திணித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.
ஏதோ பரிமேலழகர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் என்று கருதவேண்டியதில்லை. அவர் இந்த முடிவுக்கு வந்ததன் ஆதாரங்களை வள்ளுவர் வாய்மொழி மூலமே பார்க்கலாம்.
பிராமண தர்மத்தைப் போற்றிச் சொல்வது:
பல குறள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தின் முன்னுரையிலேயே பரிமேலழகர் சொல்வது: அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல்.
(அதாவது அவரவர் வர்ணாஸ்ரம தர்மப்படி ஒழுகுவது)
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
மறந்தவழி இழிகுலத்தனாம் ஆதலின் மறக்கலாகாது என்னும் கருத்தான், மறப்பினும் என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.
பரிதியார் உரை:
பிராமணன் வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம். ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அநுபவிக்க வேண்டும்.
அதாவது மற்றவன் எப்படிக் கெட்டாலும், பிராமணன் குலத்தொழிலை விட்டுவிடக்கூடாது என்று பார்ப்பன ஜாதிய பீடங்கள் கவலைப்படுவதைவிட இது மோசமாக அல்லவா இருக்கிறது!
(தொடரும்..)