ஸ்ரீ மத் அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் (பூர்வாசிரம) ஜன்ம தினம் – 13 நவம்பர்
பாரத நாட்டில் சநாதன தர்மம் என்று அறியப்படும் நம் தேசத்தின் தொல் அறம் (சநாதனம் => தொன்மையான; தர்மம் => அறம்) பல்வேறு வழிபாட்டு மரபுகளையும் முறைமைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. பொது சகாப்தம் எட்டாவது நூற்றாண்டில் அவதரித்த ஆதிசங்கர பகவத்பாதர் நம் தொல் வழிபாட்டு முறைகளைத் தொகுத்து ஆறு தரிசனங்களாகத் தந்தார். அவர் வகுத்தளித்த ஆறு தரிசனங்கள், அத்வைத வேதாந்தக் கோட்பாடு, இவற்றில் மக்களை வழிநடத்த பாரத தேசத்தின் நான்கு திசைகளில் நான்கு ஆம்நாய பீடங்களை நிறுவினார். அவற்றில் தென் திசையில் நிறுவப்பட்ட பீடம் ஸ்ரீஸ்ரீ சங்கராச்சார்ய ஸமஸ்தானம் தக்ஷிணாம்னாய ஸ்ருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஆகும்.
இந்த தக்ஷிணாம்னாய ஸ்ருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை அலங்கரித்த ஆச்சார்ய பெருமக்களில் பனிரண்டாவது குரு மஹா ஸந்நிதானம் ஸ்ரீஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தைத் தோற்றுவித்த ஹரிஹரர், புக்கர் இருவருக்கும் குருவாக விளங்கி அந்நியப் படையெடுப்புக்கு எதிரான போர்களில் வழி நடத்தியவர். தர்மத்தைக் காக்கவும் மக்களிடம் தர்மத்தின் அடிப்படையிலான வாழ்வை உபதேசித்து வழிநடத்தவும் தக்ஷிணாம்னாய ஸ்ருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் பல்வேறு வழிகளில் பணி செய்து வருகிறது.
இந்தப் பீடுடைய பீடத்தின் 35ஆவது ஜகத்குருவாக விளங்கியருளியவர் அனந்தஸ்ரீவிபூஷித அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். இவர் 1917ஆம் ஆண்டு தீபாவளி தினமான நவம்பர் 13 அன்று பெங்களூருவில் அவதரித்தார். இவரது தந்தையார் ராம ஸாஸ்த்ரி என்பார் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தார். தாயார் வெங்கடலக்ஷ்மி அம்மையார். மகனுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயரிட்டனர்.
ஐந்து வயதில் ஸருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில் உபநயனம் முடித்து வேத பாடசாலையில் வேதக் கல்வியும் கணிதமும் பயின்றார் ஸ்ரீநிவாசன். தக்ஷிணாம்னாய ஸ்ருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை அலங்கரித்த 34ஆவது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் தரிசனம் ஸ்ரீநிவாச ஸாஸ்த்ரியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவரது வழிகாட்டுதலில் பயின்று சிறப்பாக தேர்ச்சி பெற்று ஸாஸ்த்ரி பட்டம் பெற்று ஸ்ரீநிவாச ஸாஸ்த்ரி என்று மிளிர்ந்தார்.
சிறந்த வேதாந்தியாக விளங்கியதோடு ஹடயோகத்தில் விற்பன்னராகத் திகழ்ந்தார் ஸ்ரீநிவாச ஸாஸ்த்ரி. இவரது 14ஆவது வயதில் தமக்கு அடுத்ததாக ஸ்ரீ சாரதா பீடத்தில் அமர்ந்து வழிநடத்த இவரைத் தேர்வு செய்தார் சத்குருநாதர் ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்.
1931, மே மாதம் 22ஆம் நாள் ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் என்ற யோகபட்டம் அளிக்கப்பட்டு தக்ஷிணாம்னாய ஸ்ருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை அலங்கரிக்கத் தொடங்கினார். குருநாதர் உத்தரவின்படி தர்மப் பிரச்சாரம், வேத, வேதாந்தக் கல்வி, ஹடயோகம் இவற்றையும் பயிற்றுவித்து வந்தார். மடத்தின் நிர்வாகத்தில் குருநாதருக்கு உதவியாக இருந்தார்.
இந்நிலையில் 1954, செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் சித்தியடைந்தார். இதன் பின்னர் தக்ஷிணாம்னாய ஸ்ருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை நிர்வகிக்கும் முழுப்பொறுப்பும் ஸ்ரீஸ்ரீ அபிநவ விதயாதீர்த்த மஹா ஸந்நிதானத்திடம் வந்தது.
ஸ்ரீஸ்ரீ மஹா ஸந்நிதானம் மடத்தின் நிர்வாகத்தை நவீனப்படுத்தினார். மடத்தின் வளாகத்தில் வருகை தரும் மக்கள் தங்குவதற்கான இருப்பிடங்களை சீரமைத்தார். மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும் மூங்கில் காட்டைத் திருத்தி விவசாய நிலமாக ஸ்ருங்கேரி வாழ் மக்களுக்கு அளித்தார். ஸ்ருங்கேரி பகுதிக்கு சாலை வசதிகளை மேம்படுத்தினார். ஸ்ரீசாரதா தந்வந்திரி மருத்துவமனை கட்டி மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ஞானோனதயா கல்விக்கூடம் அமைத்து கல்விக்கண் திறந்தார்.
ஆதிசங்கர பகவத்பாதர் நிறுவிய நான்கு ஆம்நாய பீடங்களின் ஆச்சார்யர்களை ஸ்ருங்கேரிக்கு அழைத்து நவீனமயமான காலத்தில் தர்மம் சார்ந்த வாழ்வு குறித்த விவாதங்கள் நடத்தினார். வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இந்த விவாதங்கள் போற்றப்பட்டன.
1974ல் தம் சீடர் ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயலு என்ற பிரம்மச்சாரியை தமக்கு அடுத்து பீடத்தை வழி நடத்த தேர்ந்தெடுத்தார். அவருக்கு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்தர் என்ற யோகபட்டம் அளித்தார்.
1988ல் ஸ்ருங்கேரியில் துங்கபத்ரா நதியின் குறுக்கே பாலம் ஒன்றை அமைக்க ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் முயற்சி எடுத்தார். பாலம் அவரது சீடர் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
1989 செப்டம்பர் 21ஆம் நாளன்று ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் சித்தியடைந்தார்.
இவரது பெயரில் ஸ்ரீ வித்யா தீர்த்த ஃபௌண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வேதக்கல்வி, பாரம்பரிய கலைகள், நவீன கல்விக்கான உதவித்தொகை வழங்கல் என்று பல்வேறு தொண்டுகள் செய்து வருகிறது.
குருவின் திருவடி குலத்தைக் காக்குமே
குருவின் காலடி பணி
என்ற கவி வாக்கின் படி சத்குருநாதர் காலடி பணிவோம். வாழ்வாங்கு வாழ்வோம்.