சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

உத்தம்சிங் என்றோர் உத்தம வீரன் – டிசம்பர் 26.

எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது இயக்கவியலின் விதி. அந்த எதிர்வினை எப்போது நடைபெறும் என்பதுதான் வரலாற்றின் வினா. பாரத மண்ணில் நடைபெற்ற வினைக்காக இருபத்தி ஒரு ஆண்டுகள் காத்திருந்து லண்டன் மாநகரத்தில் எதிர்வினையாற்றிய மாவீரன் உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.

அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து ஆயுதம் எதுவும் இல்லாமல் கூடிய பாரத மக்களை ” சுட்டேன் சுட்டேன் குண்டு தீரும்வரை சுட்டேன்” என்று படுகொலை செய்த பாதகன் ஜெனரல் ரெஜினால்ட் டயர். அவனுக்கு அனுமதி அளித்து இந்த படுகொலைக்கு பின்புலமாக இருந்தவன் அன்றய பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயர். இந்த வினைக்கு எதிர்வினையாக சிந்திய பாரத ரத்தத்திற்கு பதிலாக லண்டன் நகரில் மைக்கெல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.

1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தின் சுனாம் கிராமத்தில் சர்தார் முக்தாசிங் – ஆஷாகபூர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஷேர்சிங் என்பதாகும். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஷேர்சிங்கையும் அவர் சகோதரரையும் சீக்கிய மத குருமார்கள் தாங்கள் நடத்தும் விடுதியில் அடைக்கலம் கொடுத்து வளர்த்தனர். அங்கேதான் இவருக்கு உத்தம்சிங் என்று பெயரிடப்பட்டது. நாடெங்கும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கருத்து உருவாக்கிக்கொண்டு இருந்த காலம் அது. வீரத்திற்கும், தியாகத்திற்கும், நாட்டுப் பற்றுக்கும் பேர் போன சீக்கிய இனக்குழுவில் பிறந்து வளர்ந்தவர் உத்தம்சிங். அவரும் தியாக சீலராக வளர்வதில் வியப்பென்ன இருக்க முடியும் ?

அப்போதுதான் சீக்கியர்களின் முக்கியமான பண்டிகையான பைசாகி திருநாள் அன்று ஜாலியன்வாலாபாகில் கூடிய மக்களை ஜெனரல் டயர் சுட்டுக் கொன்றான். நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கிய படுகொலை இது. இந்தக் கொலைக்கு பழிவாங்கிய தீரவேண்டும் என்ற முனைப்பு பல தேசியப் போராட்ட வீரர்களுக்கும் உருவானது. அதில் உத்தம்சிங்கும் ஒருவர். இந்த கனல் அவரை பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட வைத்தது. தென்னாபிரிக்கா, நைரோபி ஆகிய நாடுகளில் பல்வேறு பணிகளில் இருந்து விட்டு பின்னர் உத்தம்சிங் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் இருந்து பாரத சுதந்திரத்திற்கு லாலா ஹர்தயாள் போன்றவர்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் கதர் இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்ற உத்தம்சிங் 1927ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைப்பட்ட உத்தம்சிங் சிறையில் பகத்சிங் முதலான வீரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் காவல்துறை அவர்மீது கண் வைத்தபடியே இருந்தது. எனவே காஷ்மீர் சென்று ஜெர்மன் வழியாக உத்தம்சிங் லண்டன் சென்று சேர்ந்தார். நாட்டின் எதிரியை அவன் நாட்டிலேயே கொன்று பழி தீர்ப்பதுதான் அவரின் லட்சியமாக இருந்தது.

1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் நாள் கூட்டம் ஒன்றில் மைக்கெல் டயர் பேச வருவதாகத் தகவல் கிடைத்தது. ஏற்கனவே லண்டன் நகருக்குள் தான் கடத்தி வந்த கைத்துப்பாக்கியோடு உத்தம்சிங்கும் அந்த கூட்டத்திற்கு சென்றார். கூட்டத்தில் நேருக்கு நேராக உத்தம்சிங் மைக்கேல் டயர் மீது குறிபார்த்துச் சுட்டார். டயரின் நெஞ்சை ஒரு குண்டு துளைக்க, இரண்டாயிரம் பாரத மக்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்த ஆங்கிலேயன் அங்கேயே மரணமடைந்தான். இருபது ஆண்டுகளும், உலகமெங்கும் சுற்றி, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு நாட்டின் கறையை ஆங்கில குருதிகொண்டு துடைத்தார் உத்தம்சிங்.

ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை. வழக்கம் போல் காந்திஜி அவரது செயலைக் கண்டித்தார். ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது

லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. தன்னை ராம் முஹம்மது சிங் ஆசாத் என்று அறிமுகம் செய்துகொண்டார் உத்தம்சிங். பாரத நாட்டின் முக்கியமான மதத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது விடுதலை என்ற பொருளில் இந்தப் பெயரை அவர் பயன்படுத்தினார். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட உடனே உத்தம்சிங் வெடித்தார். “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நீதிமன்றத்திற்குத் என்னை விசாரிக்கும் உரிமையோ தகுதியோ கிடையாது. மைக்கேல் ஓ.டயரைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்த தண்டனை அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதே. நான் மரணத்திற்குப் பயப்படவில்லை. என் தாய் நாட்டை விடுவிக்க உயிர் துறப்பதற்காக பெருமைப்படுகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்திற்கு என் தேசத்தின் மக்கள் வருவார்கள். உங்களை அவர்கள் விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவிற்கு வருவீர்கள். பிறகும் பிரிட்டனுக்குத் திரும்பி பிரபு ஆவீர்கள். நாடாளுமன்றத்திற்குப் போவீர்கள். நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரத தேசத்திலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுக்குநூறாக உடைந்து சிதறும்.” என்று முழங்கினார்.

உத்தம்சிங்கை ‘சாகும்வரை தூக்கில் போடவேண்டும்’ என்று தீர்ப்பெழுதிப் பேனாவை முறித்தார் வெள்ளைக்கார நீதிபதி ஹட்கின்ஸன். நீதிமன்றத்திலிருந்து உடனே அவரை இழுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டார். ‘வந்தேமாதரம்! ‘ என்று நீதிமன்ற அறையே அதிரும் வகையில் முழங்கிச் சென்றார் உத்தம்சிங். 1940 ஜூலை 31ந்தேதி தூக்குத்தண்டனைக்கான நாளாகக் குறிக்கப்பட்டது. லண்டனில் உள்ள பென்டோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தம்சிங் புன்னகை ததும்பிய முகத்துடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். வந்தேமாதரம் சொல்லி பாரதமாதாவை வாழ்த்தினார். பிரிட்டிஷ் வழக்கப்படி வெண்ணிற துணியைப் போட்டு முகத்தை மூடி தூக்கிலிட்டனர். சொந்த தேசத்து மக்களைக் கொன்றவனை ஒரு வேள்வியைப் போல 21 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்து விடுதலை வீரரின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது.

லண்டன் பென்டோவில் சிறை வளாகத்தில் உத்தம்சிங் புதைக்கப்பட்டு இந்திய மாவீரன் உடலால் ஆறடிமண் இங்கிலாந்தில் ஆக்கிரமிக்கப்பட்டது வரலாற்றின் மைல்கல். முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவரது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

நாட்டின் சேவைக்காக பலிதானியான தியாகிகளை என்றும் நினைவில் கொள்வோம். அவர்கள் வழியில் நடப்போம்.

(Visited 133 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close