யோக விளக்கம்: அர்ஜுனன் தனது உறவினர்களையும் ஆச்சாரியப் பெருமக்களையும் கண்டு பந்த பாசத்தினால் கட்டுப்பட்டு அவர்களுக்கு அழிவு ஏற்படுமே என்று கலங்கி போர் புரிய மறுத்தான். விஷாதம் என்றால் மனச்சோர்வு அல்லது கலக்கம் என்று பொருள். கண்ண பரமாத்மா அர்ஜுனனின் இந்தக் கலக்கத்தை ஒரு நிமித்தமாகக் கொண்டு பகவத் கீதை என்னும் ஒரு அற்புதமான உபதேசத்தைச் செய்கிறான். அந்தப் பவித்திரமான கீதையின் முன்னுரையாக இந்த யோகம் அமைகிறது.
திருதராஷ்டிரனுக்கு தனது புதல்வர்கள் குருக்ஷேத்திரத்தில் என்னவிதம் நடந்துகொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் “தர்மபூமியான குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்வதற்காக கூடியிருந்த என் மக்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?” என்று கேட்கிறான். சஞ்ஜயன் அதற்கு பதில் சொல்கிறான். வியாஸபகவான் ஞானதிருஷ்டி அளித்து போர்க்களத்தில் நடப்பவைகளை முன்னும்-பின்னும், பகல்-இரவு, வெளிப்படையாக-மறைமுகமாக, மனதில் வகுக்கும் திட்டங்கள் முதற்கொண்டு உனக்குத் தெரியும் என்று அருளினார். சஞ்ஜயனுக்கு களைப்போ அல்லது வேறு ஆயுதங்களால் ஆபத்தோ கிடையாது என்றும் வரமளித்தார்.
இந்த பகவத் கீதை முழுவதுமே கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்க அது முழுவதும் சஞ்ஜயன் வாங்கிக்கொண்டு பத்து நாள்களுக்கு முன்னர் நடந்தவைகளை ஓட்டிப் பார்த்து திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். Over to Sanjaya! இனி இவையனைத்தும் சஞ்ஜயன் திருதராஷ்டிரனிடம் சொல்வதாக அமைகிறது.
துரியோதனன் ஆசாரியர் அருகில் வந்தான். வணக்கம் செலுத்தினான்.
“ஆச்சாரியரே! திருஷ்டத்யும்னனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் பாண்டவ சேனையைப் பார்த்தீரா? பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒப்பான யுயுதானன் (சாத்யகி) , விராடன், துருபதன், த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், சைப்யன், யுதாமன்யு, உத்தமௌஜஸ், ஸுபத்திரா புத்திரன் அபிமன்யு, திரௌபதியின் மைந்தர்கள் ஐவர் என்று அனைவரும் மஹாரதர்கள். நம்மிடையே இருப்பவர்களை உமக்குத் தெரியும். இருந்தாலும் நான் இப்போது ஒருமுறை சொல்கிறேன்.
தேவரீர், பீஷ்மர், கர்ணன், க்ருபர், அஸ்வத்தாமா, விகர்ணன், சோமதத்தரின் குமாரன் பூரிஸ்ரவஸ் மற்றும் பலர். இவர்கள் அனைவரும் எனக்காக உயிரை விடத் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களது சேனையைவிட பீஷ்மரால் காக்கப்பட்ட நம் சேனை பெரிதல்ல என்று நினைக்கிறேன். நீங்கள் எல்லோரும் உங்கள் இடங்களை விட்டுக்கொடுக்காமல் பீஷ்மரைக் காக்க வேண்டும்”
இதைக் கண்ட பீஷ்மர், துரியோதனன் தளர்ந்து போய்விட்டான் என்று தெரிந்துகொண்டு அவனை உற்சாகப்படுத்துவதற்காக சிம்மநாதம் செய்துகொண்டு சங்கத்தை ஊதினார். அவரிடமிருந்து ஓசை எழுந்தபிறகு படையின் பல இடங்களிலிருந்து சங்கநாதம் விண்ணை அதிரச் செய்தது.
இதைக் கேட்டதும் கிருஷ்ணார்ஷுனர்கள் தங்களது சங்கங்களை ஊதினார்கள். கிருஷ்ணனின் பாஞ்சஜன்யமும் அர்ஜுனனின் தேவதத்தமும் பீமனின் பௌண்ட்ரமும் அநந்தவிஜயத்தை யுதிஷ்டிரரும் ஸுகோஷத்தை நகுலனும் மணிபுஷ்பகத்தை சகதேவனும் ஒருசேர ஊதினார்கள். அவர்களது சங்கொலி குருக்ஷேத்திரத்தையே கிடுகிடுக்கவைத்தது. இவர்களது சங்கமுழக்கம் அடங்கியபிறகு சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், சாத்யகி, துருபதன், திரௌபதி குமாரர்கள், அபிமன்யு ஆகியோர் தனித்தனியாக தங்களது சங்கங்களை ஊதினார்கள். இவ்வளவு சங்கொலிகளும் திருதராஷ்டிர புத்திரர்களின் இதயங்களை பிளந்தது.
இப்போது அர்ஜுனன் வில்லைக் கையில் எடுத்துவிட்டான். திருதராஷ்டிரரே! உமது புத்திரர்கள் இருக்கும் திசையை நோக்கி நின்றவன் ஹ்ருஷீகேசரிடம்……
“அச்சுதரே! என்னுடைய தேரை இரண்டு சேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தும். நான் இருசேனைகளையும் முழுவதும் பார்க்கவேண்டும். இந்த கெட்டபுத்தியுள்ள துரியோதனனுக்காக யாரார் வந்திருக்கிறார்கள் என்பதை நான் ஒருமுறை பார்க்கிறேன்”
அர்ஜுனனின் சொல்லுக்கு இணங்க ரதத்தைச் செலுத்திய ஸ்ரீகிருஷ்ணர் இரு சேனைகளுக்கும் நடுவில் சென்று பீஷ்மருக்கும் துரோணருக்கும் எதிரே நிறுத்தினார்.
“அர்ஜுனா! கூடியிருக்கும் இந்தக் கௌரவர்களைப் பார்!” என்றார்.
தகப்பன்மார்கள், பிதாமஹர்கள், ஆசார்யர்கள், மாமன்கள், சகோதரர்கள், புத்திரர்கள், பௌத்திரர்கள், ஸ்நேகிதர்கள், மாமனார்கள் என்று எல்லோரையும் ஒருமுறை கண்ணைச் சுழற்றிப் பார்த்தான் பார்த்தன். கண்களில் ஒருவிதமான சோகம் அப்பிக்கொண்டது. தேர்த்தட்டில் அமர்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்தான்.
“கிருஷ்ணா! சொந்தங்களான இவர்களைப் பார்த்து என்னுடைய அவயங்கள் சோர்வடைகின்றன. வாய் வறண்டு போகிறது. மேனி நடுங்குகிறது. மயிர்க்கூச்சல் எடுக்கிறது. காண்டீவம் கை நழுவுகிறது. நிற்கக்கூட முடியாமல் சக்தியின்றி சோர்வாகவும் தளர்வாகவும் உணர்கிறேன். என் மனம் சுழல்கிறது.”
காண்டீவத்தைக் கீழே இறக்கிவிட்டான்.
“கிருஷ்ணா! எதிரில் நிற்பவர்கள் என் ஜனங்கள். என் சொந்தங்கள். இவர்களைக் கொன்று நான் அடையும் ராஜ்ஜியத்தால் என்ன பயன்? எவர்களுக்காக ராஜ்ஜியமும் தனமும் சுகமும் எங்களால் விரும்பப்பட்டதோ அதோ அவர்களே ஆசார்யர்களாகவும் தகப்பன்மார்களாகவும் பிதாமஹர்களாகவும் சகோதரர்களாகவும் மாதூலர்களாகவும் மாமனார்களாகவும் புத்திர பௌத்திரர்களாகவும் எதிரே நிற்கிறார்கள். அவர்கள் எங்களைக் கொல்ல விரும்பினாலும் இவர்களைக் கொன்று நான் மூவுலகத்திற்கும் ராஜாவாவேன் என்றாலும் நான் அதைச் செய்யமாட்டேன். இந்தப் பூமியின் நிமித்தமாக நான் அவர்களைக் கொல்லமாட்டேன்.
உறவினர்களைக் கொன்றால் எங்களைப் பாதகமே வந்தடையும். பந்துங்களுடன் கூடியவர்களை நான் கொல்லேன். இது குலநாசத்தை உண்டு பண்ணப்போகிறது. குலம் நாசமடைந்தால் குலதர்மங்கள் கெட்டுப்போகின்றன. தர்மம் அழிந்தால் குலத்தை அதர்மம் கவ்விக்கொள்கிறது. அதர்மம் தலையெடுத்தால் குலஸ்திரீகள் கெட்டுப்போகிறார்கள். மாதர்கள் கற்பழிந்தால் ஒரு ஜாதியோடு இன்னொரு ஜாதி கலக்கிறது. இவர்களுடைய பித்ருக்கள் பிண்டங்களை இழந்து நகரத்தில் விழுகிறார்கள். வர்ணபேதம் உண்டுபண்ணுகிற பாபிகளினால் ஜாதிதர்மங்களும் குலதர்மங்களும் அழிக்கப்படுகின்றன.
குலதர்மம் இழந்த மனிதனுக்கு நரகத்தில் நிரந்தரமான வாசம் உண்டு. ராஜ்ஜிய சுகத்தினால் நாங்கள் எங்களுடைய ஜனங்களையே கொல்லும் பாதகத்திற்கு முயற்சித்துவிட்டோம். அந்தோ!! கஷ்டம்!!! அதோ கையில் ஆயுதம் ஏந்தி நிற்கும் அவர்கள் என்னைக் கொன்றாலும் எனக்குக் கவலையில்லை. அப்படி என்னைக் கொன்றுவிட்டால் அது என் குலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாகும். “
இதைச் சொன்ன அர்ஜுனன் தனது வில்லையும் அம்பையும் கீழே எறிந்துவிட்டான். இருசேனைக்குமிடையே ரதம் நிற்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் மூச்சுவிடாமல் பேசிவிட்டு வில்லையெறிந்து நிராயுதபாணியாக அர்ஜுனன் நிலைகுலைந்து தேர்த்தட்டில் உட்கார்ந்துவிட்டதைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
ஒரு பாசுரம்:
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும்? அன்னைமீர்,
ஓர்ப்பால் இவ் ஒள்நுதல் உற்ற நல்நோய் இது தேறினோம்,
போர்ப் பாகுதான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.
நம்மாழ்வார் திருவாய்மொழி – நான்காம் பத்து – ஆறாம் திருவாய் மொழி – முதல் பாடல்
அன்று ஐவருக்காக மாயப்போர் புரிந்து வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனை நினைத்து இவள் உருகுகிறாள். இந்த நோயை எப்படித் தீர்ப்பது? யாரிடம் போவது? என்று தோழி கேட்பதாக அமைகிறது இப்பாடல்.
அர்ஜுனனுக்கு இங்கே மனச்சோர்வு நோய். எதிரில் நிற்பவர்களோடு போர் புரியமாட்டான். இந்த நோயைத் தீர்ப்பதற்கு அருகிலேயே அந்த மாயப்போர்த் தேர்ப்பாகன் நிற்கிறான். அவன் அர்ஜுனனின் நோயைத் தீர்க்க வல்லவன். தோழி கேட்கும் அந்த நோயையும் அவன்தானே தீர்க்கவேண்டும்?
ஸ்வாமி தேசிகன் பாசுரம்:
உகைவயைடந்த உறவுடையார் பொரலுற்றவந்நாள்
தகவுடனன்பு கரைபுரளத் தருமத்தளவில்
மிகவுளமஞ்சி விழுந்தடி சேர்ந்த விசயனுக்கோர்
நகையுடனுண்மையுரைக்கவமைந்தனன் நாரணனே
பதம் பிரித்து:
உகவை அடைந்த உறவுடையார் பொரலுற்ற அந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத் தளவில்
மிக உளம் அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கோர்
நகையுடன் உண்மை யுரைக்க அமைந்தனன் நாரணனே
பொருள்:
சந்தோஷமாகக் களித்திருந்த பந்துக்கள் போருக்காக கூடிய அந்நாளில் அன்பு கரை புரள கொல்வது தர்மம் அல்ல என்றெண்ணி உள்ளம் அஞ்சி தன்னுடைய மலரடியை சரணாகதியடைந்த விசயனாகிய அர்ஜுனனுக்கு புன்னகையுடன் உண்மையை உரைக்க அங்கே நின்றான் நாராயணன்.
முக்கிய குறிப்பு:
ஒரு வித்தியாசமான முயற்சியாக, இன்னும் கொஞ்சம் கூடுதல் இன்பம் கிடைக்கவேண்டும் என்பதின் முயற்சியாக இதுபோல பாசுரம் சேர்க்கப்படுகிறது. இது மிகச்சரியாக பொருந்துகிறதா? சரியா? என்றெல்லாம் பட்டிமண்டபம் நடத்த வேண்டாம் என்று தயைக்கூர்ந்து கைக்கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். கீதையோடு சேர்ந்து ஒரு பாசுரத்தையும் அனுபவிப்பதாக மெய்யன்பர்கள் எடுத்துக்கொண்டு இந்த சிறியவனை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஸ்வாமி தேசிகன் “கீதார்த்தசங்கிரகம்” என்று பகவத் கீதையின் சாரத்தை அத்யாயத்திற்கு ஒரு பாசுரமாக அருளியிருக்கிறார். அந்தப் பாசுரமும் இவ்வுரையோடு சேர்க்கப்பட்டிருக்கிறது.
============ அர்ஜுன விஷாத யோகம் நிறைவுற்றது ==========
இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs