விண்வெளி வீர மங்கை – கல்பனா சாவ்லா – மார்ச் 17
மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே விண்வெளியும், அதில் பறப்பதும் மனிதனுக்கு கிளர்ச்சியூட்டும் கனவாகவே இருந்து வந்துள்ளது. விண்வெளியில் கால்பதித்த முதல் பாரத பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கல்பனா சாவ்லாவின் பிறந்ததினம் இன்று.
மேற்கு பஞ்சாபில் ( இன்றய பாகிஸ்தான் ) முல்தான் பகுதியைச் சார்ந்த பனாரசிலால் சாவ்லா நாட்டின் பிரிவினையின் போது இன்றய ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அவர் பல்வேறு சிறு தொழில்களைச் செய்து வந்தார். சவாலான ஒரு காலகட்டத்தை அந்தக் குடும்பம் கடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நான்கு குழந்தைகளில் இளையவராக 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் கல்பனா பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே படிப்பிலும், ஓவியம் வரைவதிலும், நடனமாடுவதிலும் சிறந்து விளங்கினார் கல்பனா. மொட்டை மாடியில் அமர்ந்தவாறு வானத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதிலும், விண்மீன்களை எண்ணுவதும் அவரின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த கல்பனா 1982ஆம் ஆண்டு சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் ( Aeronautical Engineering ) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அன்று இந்தத் துறையில் சேர்ந்த ஒரே பெண் மாணவி கல்பனாதான். அதனைத் தொடர்ந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
கல்பனாவின் கனவு விண்வெளிப் பயணம்தான். 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பதினைந்து நாட்கள் 252 முறை பூமியைச் சுற்றி ஒரு கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் என்று விண்வெளியில் பறந்த முதல் பாரதப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 அனுப்பி வைக்கப்பட்டது.கல்பனா உள்பட ஏழு விண்வெளி வீரர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்காக இந்த விண்கலத்தில் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி 1ஆம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர்.
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, அவர் பார்க்க விரும்பிய முக்கியமானவர்களில் ஒருவர் கல்பனா சாவ்லா. விண்ணில் இருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு அழகாகத் தெரிந்தது என்று கல்பனா பிரதமரிடம் குதூகலமாகக் கூறினார்.
ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, விண்வெளியில் மிதந்து பாரத மக்களின் விடா முயற்சியை, எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை உலகெங்கும் பறைசாற்றிய கல்பனா சாவ்லாவின் இறப்பு என்பது பாரத நாட்டின் தேசிய துயரமாக அனுசரிக்கப்பட்டது.
பாரதம் விண்ணில் ஏவிய வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோளுக்கு கல்பனா என்ற பெயர் சூட்டப்பட்டது. பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி, ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திரா நகரில் அமைந்துள்ள கோளரங்கம், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மௌலானா அபுல்கலாம் ஆஜாத் தொழ்ல்நுட்ப பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவ விடுதிகள் இன்று கல்பனா சாவ்லாவின் பெயரில் அழைக்கப்படுகின்றன. பாரதத்திலும், அமெரிக்காவிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவர் பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்குகின்றன.
வீர தீர சாகசச் செயல்களைப் புரியும் பெண்களுக்கான பரிசு கல்பனா சாவ்லா பெயரில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இன்னும் பல ஆண்டுகளுக்கு பாரதநாட்டின் பெண்களுக்கு கல்பனா சாவ்லாவின் வாழ்வு உத்வேகம் தருவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை