ஆன்மிகம்செய்திகள்

பகவத்கீதை – பன்னிரெண்டாம் அத்யாயம் – பக்தியோகம்

யோக விளக்கம்:

பகவானின் மீது பக்தி செய்வதற்கான பலவிதமான சாதனைகளைப் பற்றியும் பகவான் மீது பக்தி செலுத்துவது பற்றியும் அப்படி பக்தி செய்யும் பக்தர்களின் லக்ஷணங்கள் பற்றியும் இந்த அத்யாயத்தில் சொல்லப்படுகின்றன.


அர்ஜுனன் கேட்கிறான்.

“பகவானே! வேறொன்றிலும் நாட்டமில்லாமல் உம்மையே சரணடைந்த பக்தர்களில் இருவகையினர் உள்ளனர். ஒரு சாரோர் பஜனையிலும் தியானத்திலும் ஈடுபட்டு உம்முடைய சகுண ரூபத்தை வழிபடுகிறார்கள். இன்னொரு சாரோர் சத்சித் ஆனந்தமயமான உம்முடைய உருவமற்ற பிரம்மத்தை வழிபடுகிறார்கள். இவற்றில் எது சிறந்தது?”

“அர்ஜுனா! எப்போதும் மனதை என்னிடத்தில் நிலை நிறுத்தி என்னை வழிபட்டும் தியானம் செய்தும் ஈடுபடும் பக்த ஜனங்கள் என்னுடைய சகுண ரூபத்தை அவர்களது ஈஸ்வரனாக சிரத்தையுடன் வழிபடுகிறார்கள். யோகிகளிலேயே அவர்கள் மேலானவர்கள்.

ஆனால் புலன்களை அடக்கி மனம் புத்திகளுக்கு அப்பாற்பட்டு எங்கும் நிறைந்த பரப்பிரம்மாய் சொற்களால் விளக்கமுடியாத, நித்தியமானது, அசையாதது, இயக்கமற்றது உருவமற்றது, அழிவற்றது சத்சித் ஆனந்த பிரம்மம் என்றெல்லாம் நினைத்து எப்பொழுதும் ஒன்றிய பாவனையோடு தியானம் செய்து உபாசிப்பவர்கள் எல்லா உயிரினங்களின் மீதும் நன்மையிலேயே ஈடுபாடு கொண்டவர்கள், எல்லாவற்றிலும் சமமான நோக்குள்ள யோகிகளான அவர்களும் என்னையே அடைகிறார்கள்.

உடலில் பற்றுள்ளவர்கள் உருவமற்ற என் பிரம்ம ஸ்வரூபத்தை தியானித்து அடையும் மார்க்கம் மிகவும் சிரமமானது. சாதனையில் உழைப்புள்ளவர்கள் சத்சித் ஆனந்தமயமான என்னுடைய பிரம்ம ஸ்வரூபத்தில் மனதை ஈடுபடுத்தும் ஆற்றல் உள்ளவர்கள்.

என்னையே கதியாகக் கொண்ட பக்தர்கள் தங்களின் எல்லாக் கர்மாக்களையும் என்னிடமே அர்ப்பணம் செய்து சகுணமான பரமாத்மாவான என்னையே பக்தியோகத்துடன் இடைவிடாது தியானம் செய்துகொண்டு உபாசிக்கிறவர்கள் என்னிடம் மனதை ஈடுபடுத்தி பிரேமையுடன் பக்தி செலுத்துபவர்களை நான் சீக்கிரமே மரண வடிவான சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றுகிறேன்.

நீ என்னிடத்தில் மனதை செலுத்து. என்னிடமே புத்தியை நிலை நிறுத்து. பின்னர் என்னிடமே நீ நிலையாய் வாழ்வாய். இதில் சந்தேகமேயில்லை.

அத சித்தம் ஸமாதாதும் ந ஸக்நோஷி மயி ஸ்திரம் |

அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய !!

“அர்ஜுனா! என்னிடத்தில் உன்னால் மனதை நிலைநிறுத்த முடியவில்லை என்றால் பகவந்நாம சங்கீர்த்தனம் செய். என்னுடைய திருநாமங்களை ஓது. இப்படிப்பட்ட பயிற்சிகளினால் நீ என்னை அடைய விரும்பு. இப்படிப் பயிற்சி செய்யவும் முடியவில்லை என்றால் எனக்காகவே கடமைகளை ஆற்றுகிறாய் என்ற லட்சியத்தோடு இரு. என் பொருட்டாகவே எல்லா காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறாய் என்பது கூட என்னை அடைவது என்ற உன் லட்சியத்தை நிறைவேற்றும். அப்படி என்னை அடைவது என்ற யோகத்தையும் சார்ந்து நிற்பதற்கு திறமையற்றவனாக இருந்தால் மனம் புத்தி முதலியவற்றை அடக்கி வெற்றி கண்டு செய்கின்ற எல்லா கர்மங்களின் பயனைதும் துறந்துவிடு.

சாஸ்திரமாக அதன் பொருள் தெரியாமல் என்னை அடையும் பொருட்டுச் செய்யப்படும் பயிற்சியைக் காட்டிலும் அதனால் அடையும் ஞானம் பெரியது. அந்த ஞானத்தை விட என் ஸ்வரூபத்தை தியானம் செய்தல் சிறந்தது. அந்த தியானத்தைக் காட்டிலும் கர்மத்தின் பலனை துறந்துவிடுவது மிகச்சிறந்தது.

எல்லா உயிர்களினிடத்தும் வெறுப்பு இல்லாதவன்,  சுயநலமில்லாமல் எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துபவன், இரக்கம் காட்டுவதற்கு காரணம் தேடாதவன், தான் என்ற அகந்தையும் திமிரும் இல்லாதவன், இன்பதுன்பங்களை சமமாகப் பாவிக்கும் யோகி, எப்பொழுதும் எல்லாவிதத்திலும் திருப்தியோடிருப்பவன்,  மனம் புத்தியோடு இருக்கும் உடலை தன் வயப்படுத்தியவன், என் மீது திடமான நம்பிக்கையுடவன், என்னிடத்திலேயே மனம் புத்தி ஆகியவற்றை அர்ப்பணம் செய்தவன் எவனோ அந்த என்னுடைய பக்தன் எனக்குப் பிரியமாகிறான்.

எவனால் எந்த ஜீவனுக்கும் பாதிப்பில்லையோ, எவன் எந்த ஜீவனாலும் பாதிப்பு அடையமாட்டானோ, எவனொருவன் மகிழ்ச்சி, பொறாமை, பயம் அவற்றால் பாதிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனோ அந்த பக்தன் எனக்குப் பிரியமானவன்.

தான் செய்யும் செயல்களில் “நான் செய்கிறேன்” என்ற பிடிமானத்தை அபிமானத்தை நீக்கியவன் என் பிரியத்துக்குரியவன். எதையும் எதிர்பார்க்காமல் அகத்திலும் புறத்திலும் தூய்மையாக இருப்பவனும் என் பிரியமானவனே.

எவன் எப்போதும் மகிழ்வதில்லையோ வெறுப்பதில்லையோ துயரப்படுவதில்லையோ ஆசைப்படுவதில்லையோ நல்லது தீயது ஆகிய செயல்களைத் துறந்து என்னிடம் பக்தியுடைவன் எனக்குப் பிரியமானவன். பகைவன் மற்றும் நண்பன், சுகம் மற்றும் துக்கம், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவைகளில் சமபுத்தி உடையவனும், இகழ்ச்சி புகழ்ச்சி போன்றவற்றையும் சமமாகப் பாவித்து தான் வசிக்கும் இடத்தில் தனது என்று சொந்தம் கொண்டாடாமல் பற்றற்று இருப்பவன் நிலையான புத்தியுடைவனும் பக்தியுள்ளவனுமான அந்த மனிதன் என்னால் பிரியம் செய்யத் தகுந்தவன்.

ஆனால், எவர்கள் என்னிடம் முழு நம்பிக்கையோடு என்னையன்றி யாருமில்லை என்று மேலான கதியாகக் கருதி இதற்கு முன்னர் கூறப்பட்ட தர்மமாகிய அமுதத்தைப் பயன் கருதாது அன்புடன் அனுஷ்டிக்கிறார்களோ அந்தப் பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்”

கிருஷ்ணபரமாத்மா தனக்கு யார் பிரியமானவர்கள் என்று பட்டியலிட்டதைக் கேட்டு மகிழ்ந்து போனான் அர்ஜுனன். பகவானைப் பிரார்த்திப்பது இன்பமென்றால் இப்படியெல்லாம் இருந்தால் எனக்குப் பிரியமானவன் என்று அவனே பேசிக் கேட்பது எப்பேர்ப்பட்ட இன்பம்! அர்ஜுனன் அந்த பக்தி யோக இன்பத்தை அங்கே அனுபவித்தான். ஆனாலும் சில சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தது. அதைக் கேட்பதற்காக தலையைத் தூக்கி அங்கே நிற்கும் பரமாத்மாவைப் பார்க்கிறான்.

ஒரு பாசுரம்

கூத்தர் குடம் எடுத்து ஆடில், கோவிந்தனாம் எனா ஓடும்,
வாய்த்த குழல் ஓசை கேட்கில், மாயவன் என்று மையாக்கும்,
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!

-திருவாய்மொழி – 4 – 4 – 6 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்

ஊரில் குடமெடுத்து ஆடும் கூத்தர்களைக் கண்டால் “என் கோவிந்தன் ஆடுகிறான்” என்றும் வேணுகானம் கேட்டால் “என் மாயவன் குழலூதுகிறான்” என்றும் ஆய்ச்சியர் வெண்ணைகளை உருட்டி வைத்த்தைக் கண்டால் “இது அவன் உண்ட வெண்ணை” என்றும் அந்த பேய்ச்சி முலை சுவத்தவனின் மீது பக்தியால் கொண்ட பித்தே என் பெண் மீது ஏறியிருக்கிறது.

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – பக்தி யோகச் சாரப் பாசுரம்:

தன் கழலில் பக்தி தாழாததும் அதன் காரணமாம்
இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும் –
தன் கருமங்கள் அறியாதவர்க்கு இலகு நிலையும்
தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினான் பார்த்தனுக்கே

பொருள்:

தன்னுடைய திருவடிகளில் சரணாகதியடைந்து பக்தி யோகத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு அருளும் கண்ணன் தனது குணத்தை நினைப்பவர்களும் இதைச் செய்ய அறியாதவர்களுக்கும் தனது பகவத் கைங்கர்யமாக விதிக்கப்பட்ட கர்மங்களைக் கூட அறியாதவர்க்கும் இலகுவான உபாயமாகிய பக்தியோகத்தைப் பற்றி பார்த்தனுக்கு உபதேசித்தான்.

===== பக்தி யோகம் நிறைவடைந்தது ====

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 65 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close