ஆன்மிகம்செய்திகள்

பகவத்கீதை – பதிமூன்றாம் அத்யாயம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

யோக விளக்கம்: 

க்ஷேத்ரமாகிய உடலும் க்ஷேத்ரயக்ஞனாகிய ஆத்மாவும் வெவ்வேறானவை. ஆனால் இரண்டும் ஒன்று போல அஞ்ஞானிகளுக்குத் தெரிகிறது. க்ஷேத்ரம் அழிவது. ஆத்மா அழிவில்லாதது. இந்த அத்யாயத்தில் இவையிரண்டையும் அர்ஜுனனுக்கு விரிவாக உபதேசிக்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.


பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருளுரை தொடர்ந்துகொண்டிருந்தது. ஒரு சரியான சிஷ்யனுக்கு குருக்ஷேத்திரம் போன்ற போர்க்களம் கூட குருகுலம் போலானது. அர்ஜுனனுக்கு பல சந்தேகங்கள் முளைவிடத் துவங்கியது. ஒவ்வொன்றாக பரமாத்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறான்.

“கேசவரே! க்ஷேத்ரம் க்ஷேத்ரயக்ஞன் என்றால் என்ன?”

“அர்ஜுனா! இந்த உடல் க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. இதை முழுவதும் அறிபவன் க்ஷேத்ரயக்ஞன் என்று அழைக்கப்படுகிறான். எல்லா க்ஷேத்திரங்களிலும் இருக்கும் க்ஷேத்ரயக்ஞன் அதாவது ஜீவாத்மாவும் நானே என்று தெரிந்துகொள். மேலும் அந்த க்ஷேத்ரம் எத்தகையது? எந்த விகாரங்களையுடையது? அந்த க்ஷேத்ரயக்ஞன் என்பவன் யார்? அவனுடைய பெருமைகள் என்ன? இவையெல்லாம் சுருக்கமாக என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்

க்ஷேத்ர க்ஷேத்ரயக்ஞனின் தத்துவம் பல ரிஷிகளால் கூறப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் தனியாகப் பிரித்தும் சொல்லியிருக்கிறது. பிரம்மசூத்திரத்தின் பதங்களும் இவைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.

இந்த க்ஷேத்ரமானது நுண்ணிய ஐம்பெரும் பூதங்களாலும் அகங்காரம் புத்தி மூலப்பிரகிருதி பத்து புலன்கள் மனம் மற்றும் புலன்கள் நுகரக்கூடிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தும் மற்றும் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடற்கட்டு, சைதன்ய சக்தி மற்றும் உறுதி ஆகியவைகளின் மாறுபாடுகளை உடையது. இதுவே க்ஷேத்ரத்தைப் பற்றிய சுருக்கம்.

ஞானம் என்றால் என்ன என்று தெரிந்துகொள். தற்பெருமை இல்லாதிருத்தல், தம்மிடம் இல்லாத திறமையை நற்குணங்களை இருப்பதாக போலியாகக் காட்டிக்கொள்ளமல் இருப்பது, உலகத்திலிருக்கும் எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமல் இருப்பது, பொறுமையைக் கடைபிடித்தல், மனம் நினைப்பதை வாக்கால் பேசும் நேர்மை, பெரியோர்களுக்கு சிரத்தையுடன் பக்தி கலந்து பணிவிடை செய்தல், அகத்தினுள்ளும் புறத்திலும் தூய்மையாக இருத்தல், உறுதி கொண்ட உள்ளம், மனம் புலன்களோடு அலைபாயும் உடலைக் கட்டுப்படுத்துதல், இவ்வுலகம் மற்றும் பரலோக போகங்கள் அனைத்திலும் துளிக்கூட பற்றில்லாமல் இருத்தல், அகங்காரமென்பதே இல்லாமல் இருத்தல், பிறப்பிலும் இறப்பிலும் மூப்பிலும் நோயிலும் உள்ள துக்கங்களையும் குறைபாடுகளையும் திரும்பத் திரும்பச் சிந்தித்துப் பார்த்தல்….”

பரமாத்மா ஞானம் என்பதின் விளக்கத்தினைக் கூறக் கூற அர்ஜுனன் மனம் லயித்தான். இத்தனையும் இருப்பவன்தான் ஞானியோ? என்ற எண்ணம் அவனுள் எழுந்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தொடர்கிறார்….

“மனைவி, மக்கள், வீடு, செல்வம் ஆகியவற்றில் பற்றில்லாமல் இருத்தல், மமகாரமான ‘என்னுடையது’ என்ற எண்ணமில்லாமல் இருத்தல், விரும்பியது விரும்பாதது என்று எதை அடைந்தாலும் ஒரே சமமான மனதோடு ஏற்றுக்கொள்ளுதல், பரமேஸ்வரனான என்னிடத்தில் பிறழாத பக்தியோடு இருத்தல், தனிமையிலும் தூய்மையாக இருத்தல், லோகாதய விஷய்ங்களில் ஈடுபாடு கொண்டுள்ள மனிதர்களிடமிருந்து விலகி இருத்தல், அத்யாத்ம ஞானமான பிரம்மத்தில் எப்போதும் நிலையாக இருத்தல், தத்துவத்தின் பொருளான பரமாத்மாவையே தரிசனம் செய்வது ஆகியவையெல்லாம் ஞானம் என்று சொல்லப்படுகிறது. இவை இல்லாது அஞ்ஞானம் ஆகும்.

எதை மனிதன் அறியவேண்டும் எதை அறிந்தால் அவன் பரமானந்தம் அடைகிறான் என்பதையும் சொல்கிறேன் கேள். ஆதியந்தமில்லாத பரப்பிரம்மத்திற்கு சத் என்றும் அசத்தென்றும் இல்லை.

அந்தப் பரப்பிரம்மத்திற்கும் எங்கும் கண் உண்டு. பார்த்துகொண்டேயிருக்கிறது. யார் பேசினாலும் கேட்கும். எங்கும் காதுகள் இருக்கிறது. அதுபோலவே கைகளும் கால்களுமிருக்கின்றன. எங்கு காணினும் அதன் முகம். அதுவே இவ்வுலகனைத்தையும் வியாபித்திருக்கிறது.

எல்லா ருசிகளையும் அறியும் ஆனால் அது புலன்கள் அற்றது. எதிலும் பற்றில்லாதது. இருந்தாலும் எல்லாவற்றையும் தாங்குகிறது. காக்கிறது. அதற்கென்று குணவிசேஷங்கள் இல்லையென்றாலும் குணங்களை அனுபவிக்கிறது. எல்லாப் பிராணிகளின் உள்ளேயும் வெளியேயும் அதுவே நிறைந்திருக்கிறது. அது அசைவனவாகவும் அசையாத ஜடப்பொருளாகவும் இருக்கிறது. மிகவும் நுண்ணிய பொருளாக இருப்பதால் யாராலும் எளிதில் அறியமுடியாதது. உன்னருகில் இருக்கிறது. உனக்கு தூரமாகவும் இருக்கிறது.

பரப்பிரம்மம் அந்த ஆகாயத்தைப் போல பிளவில்லாமல் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனாலும் எல்லாப் பிராணிகளிடமும் பிரிக்கப்பட்டு இருப்பதாக காணப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணுவின் ரூபமாகக் காப்பதும், ருத்ரனாக அழிப்பதும், பிரம்மாவாக படைப்பதும் அந்தப் பரப்பிரம்மம்தான். அது ஒளிகளுக்கெல்லாம் ஒளிதரக்கூடியது. மாயைகளுக்கு அப்பாற்பட்டது.

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுஸ்யதே!

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்!!

அது ஞானவடிவானது. அறியப்பட வேண்டிய அது தத்துவ ஞானத்தின் மூலமே அடையமுடிவது. எல்லோருடைய இருதயத்திலும் அதுவே இருக்கிறது.

இதுதான் பரமாத்ம ஸ்வரூபம். இப்போது நான் உனக்குச் சொன்ன க்ஷேத்ரம் க்ஷேத்ரயக்ஞன் ஞானம் பரமாத்மா ஸ்வரூபம் ஆகியவற்றை அறிந்து கொண்ட பக்தனான நீ என்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறாய்.

பிரகிருதியாகிய இயற்கையும் புருஷனான ஆன்மாவிற்கும் ஆரம்பம் கிடையாது. விருப்பு வெறுப்பு சத்வ ரஜஸ் தமோ குணங்கல் அனைத்தும் பிரகிருதியிலிருந்து உண்டானவையே. எந்த காரியத்தையும் அதன் காரணத்தையும் பிரகிருதியே உண்டாக்குகிறது. சுக துக்கங்களை அனுபவிப்பது ஜீவாத்மா. பிரகிருதியில் இருந்துகொண்டே பிரகிருதியில் உண்டான முக்குணங்கள் உள்ள பொருள்களை அனுபவிக்கிறான். எந்ததெந்த குணங்களில் ஈடுபடுகிறானோ அதுவே அந்த ஜீவாத்மாவை நல்லது தீயதுமான பிறவிகளுக்குக் காரணமாகிறது.

இந்த உடலில் இருக்கும் ஜீவாத்மா என்ற புருஷன் இந்த தேகத்தில் இருப்பினும் அவனே பரமாத்மா. அவன் சாட்சியாக இருக்கும்போது ‘உபத்ரஷ்டா’ என்று அழைக்கப்படுகிறான். அப்படிப்பட்ட அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவிடம் ஒரு அனுமதி கேட்டு கொடுக்கப்பட்டால் அதே அந்தர்யாமி ‘அநுமந்தா’ என்றழைக்கப்படுகிறது. அதுவே காக்கும் போது ‘பர்தா’, ஹவிஸ்களை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும்போது ‘போக்தா’, பிரம்மா ஈஸ்வரன் முதலியோரை ஆக்கும் அழிக்கும் சக்திகளோடு படைத்து ஈடுபடுத்தும் போது ‘மஹேஸ்வரன்’, அவர் எல்லாக் குணங்களையும் கடந்து நிற்பதால் ‘பரமாத்மா’ ஆகிறர்.

இவ்வாறு இந்த குணவிசேஷங்களுடன் கூடிய பிரகிருதியை எவன் தத்துவரீதியாக அறிகிறானோ அவன் மறுபடியும் பிறப்பதில்லை.

இதே பரமாத்மாவை தியானத்தின் மூலமாக உள்ளத்தினுள் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். சிலர் ஞானயோகத்தின் மூலமாகவும் இன்னும் சிலர் பக்தியோகத்தின் மூலமாகவும் அடைகிறார்கள். மந்த புத்தியுள்ளவர்கள் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு உபாசனை செய்கிறார்கள். கேட்டறிந்த அந்த உபதேசத்தையே கதியாகக் கொண்டு அடைய பயிற்சி செய்பவர்கள் சம்சாரக் கடலை நிச்சயமாகக் கடக்கிறார்கள்.

அர்ஜுனா! இவ்வுலகத்தில் எத்தனையெத்தனை அசையும் அசையாப் பொருள்களும் பிராணி வர்க்கங்களும் உண்டாகின்றதோ அவையனைத்தும் க்ஷேத்ரம் க்ஷேத்ரயக்ஞன் ஆகிய சேர்க்கையால் உண்டாகிறது என்று அறிந்துகொள். இவ்வுலகத்தில் எல்லாம் அழியக்கூடியது. ஆனாலும் பரமேசுவரன் அழியாதவன் என்று பார்ப்பவனே பார்வை உடையவனாகிறான். எல்லாக் கர்மாவும் பிரகிருதியினால் செய்யப்படுகிறது ஆத்மா கர்த்தா அல்லன் என்று பார்க்கிறவனே உண்மையைப் பார்க்கிறவனாக அறியப்படுகிறான்.

ஒரு மனிதன் இவ்வுலகத்தின் அனைத்து தனித்தன்மையும் பரமாத்மாவிடமே இருக்கிறது அந்த பரமாத்மாவிடமிருந்தே உலகம் விரிவடைந்தது என்றும் தெரிந்த மனிதன் சத்சித் ஆனந்தமயமான பரமாத்மாவை அடைகிறான்.

அர்ஜுனா! இந்த உடலிலேயே பரமாத்மா ஒட்டியிருக்கிறது. ஆனால் அனாதி. அதற்கென குணங்கள் இல்லா நிர்குண வடிவம். உண்மையில் அது ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டியிருப்பதுமில்லை. எங்கும் நிறைந்திருக்கும் ஆகாயம் எதிலும் ஒட்டுவதில்லை. அதுபோலவே ஆத்மா இவ்வுடலெங்கும் நிறைந்திருப்பதால் எங்கும் ஒட்டுவதில்லை. இன்னும் புரியும்படிச் சொல்கிறேன். சூரியன் எப்படி இவ்வுலகமனைத்தையும் பிரகாசிக்கச் செய்வது போல ஆத்மாவே க்ஷேத்ரமாகிய இவ்வுடலை பிரகாசிக்கச்செய்கிறது.

இவ்விதம் க்ஷேத்ரம் க்ஷேத்ரக்ஞன் பிரகிருதி அதன் செயல்கள் இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை தத்துவரீதியாக ஞானக்கண்ணால் அறியும் அந்த மகாத்மாக்கள் பரப்பிரம்ம பரமாத்மாவை நிச்சயம் அடைகிறார்கள்”

அர்ஜுனன் இந்த அமிர்தம் பருகி சொக்கிப்போய் அமர்ந்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் இன்னும் தொடர தயாராக இருந்தார்.

*க்ஷேத்ரம் – உடல், க்ஷேத்ரக்ஞன் – ஆத்மா

ஒரு பாசுரம்:

உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறர்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம்
உணர்வை பெற ஊர்ந்து இறவெறி யானும் தானாய் ஒழிந்தேனே

-திருவாய்மொழி 8 – 8 – 3 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்

ஞானத்தில் சிறந்த அமரர்பதியான ஒருவனை அவனது அருளால் பெற எனது உணர்வில் அவனை இருத்தினேன். அப்படி அவனை எனது உணர்வில் இருத்தியதும் அவனது அருளினாலே நடந்தது. அப்படி உணர்வில் நிறுத்திய ஞானம், இந்த உயிர், இவ்வுடல் போன்ற பல தத்துவங்களும் உறுதியில்லை. இப்படி நான் அறிந்துகொள்ளும்படி அவனே செய்தான். என்னையும் அவனின் ஒரு பகுதியாக்கி என்னுள்ளே அவனும் ஒன்றானான்.

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகச் சாரப் பாசுரம்

ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
ஞானம் பெறுவகையும் ஞானம் ஈன்ற உயிர்ப் பயனும்
ஊன் நின்றதற்கடியும் உயிர் வேரிடும் உள் விரகும்
தேன் நின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே

பொருள்

தேன் தங்கும் திருவடித்தாமரைகளையுடையவன் வில்லேந்திய பார்த்தனுக்கு ஊனாகிய சரீரத்தின் படியும் அந்த சரீரத்திலிருந்து பிரிந்து உயிராக நிற்கும் ஜீவாத்மாவையும், அப்படி ஆத்மாவை அடைந்தவர்கள் பெறும் ஞானத்தையும் அந்த ஞானத்தைப் பெறும் வகைகளையும் அப்படி அடையப்பட்ட ஆத்மாவை அறிந்த பயனும் சரீரம் நிற்பதற்கான சம்சாரத்தின் காரணமும் ஆத்மா நிலைபெறுவதற்கு மனதினால் செய்யப்படவேண்டிய உபாயங்களையும் உபதேசித்தான். 

====== க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் =====

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 43 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close