புத்தக விமர்சனம்

The Sympathy Wave – நூல் விமர்சனம்

70 ஆண்டுகளுக்கு மேலாக தூணிலிருந்து துரும்பு வரை பார்த்துப் பார்த்து ஆள்வைத்து அணு அசைந்தாலும் அவர்களுக்கோ அவர்கள் வைத்த ஆட்களுக்கோ தகவல் போய் அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஒரு சர்வ வல்லமை படைத்த லேசில் தகர்க்க முடியாத eco system பற்றிய உள் விவரம் தெரிந்த அந்த eco system மீது அசையாத நம்பிக்கையும், அதைக் கதையில் கூட தோற்கவிடாத வெறித்தனமான பற்றும் கொண்ட நபரால் எழுதப்பட்ட கதை The Sympathy Wave.

P R Ganapathy என்பவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியின் மகன். IIMல் படித்து அமெரிக்கா சென்று இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உதவும் Stanford SEED என்ற NGO அமைப்பின் இந்திய பிராந்திய இயக்குநராக இருப்பவர். இவர் 2012ல் Anza Deception என்ற நாவலை எழுதினார். இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் அடுத்த ரகசிய தீவிரவாத தாக்குதலும் அதை உளவு அமைப்புகள் முறியடிக்கும் விதம் பற்றியும் சொல்லும் கதை.

2013ல் தனது அடுத்த நாவலாக The Sympathy Wave என்ற கதையை எழுதினார். பெயர்கள் மாற்றப்பட்டாலும் யார் யாரைச் சொல்கிறார் எழுத்தாளர் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

கதைச்சுருக்கம் இது தான்.
——————————————————-
இந்திய ஆளும் கூட்டணி அரசை ஒரு ஓய்வு பெற்ற வெளியுறவுத்துறை அதிகாரி பிரதமராக இருந்து நடத்துகிறார். முக்கியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முக்கியக் குடும்பத்தின் தலைவி தன் மகனை அடுத்த பிரதமராக்கத் திட்டம் போடுகிறார். அவரது மகள் ஒரு ரியல் எஸ்டேட் வணிகனை கட்டாயத்தின் பேரில் மணந்து கொண்டு வாழ்கிறாள்.


மருமகனின் கொலைத் திட்டத்தை மாற்றிச் செயல்படுத்த குடும்ப அதிகாரி கையாளும் வழிமுறைகள், பயன்படுத்தும் அரசு இயந்திர பாகங்கள் தலைசுற்ற வைக்கின்றன.

மகன் அரசியலில் விருப்பம் இல்லாமல் உலகம் சுற்றி வருகிறான். கொலம்பியாவில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளை மணந்து கொண்டு அங்கேயே இருக்கிறேன், விட்டுவிடுங்கள் ஓடிப்போகிறேன் என்ற அளவிலே இருக்கிறான். ஆனால் தாயின் கட்டாயத்தால் அரசியல் கூட்டம் பேசிக்கொண்டு அவ்வப்போது வெளிநாடுகளுக்குப் போய் வருகிறான்.

இந்நிலையில் குடும்பத்தின் அரசியல், பண, பிற விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அந்தக் குடும்பத்தின் மருமகன் மகனைக் கொன்று, அனுதாப அலையில் தன் மனைவியைப் பிரதமராக்கி, அதன் மூலம் தான் இன்னும் அதிகம் சம்பாதிக்க திட்டமிட்டதை மோப்பம் பிடிக்கிறார். திட்டத்தை சற்றே மாற்றி அவர் ஆடும் ஆட்டம், அதைத் தொடரும் சம்பவங்கள் என்று கதை போகிறது. நேர்மையான முன்னாள் ராணுவத்தினர், இந்நாள் போலீஸ்/உளவு அதிகாரிகள் சிலரை குடும்பத்தினர் பகைத்துக் கொள்ள அவர்கள் குடும்பத்தின் ஆட்டங்களை ஒடுக்க களமிறங்குகிறார்கள். கடைசியில் யார் யாரை மாட்டிவிடுகிறார்கள் என்று முடிகிறது கதை.

அந்தக் குடும்பத்தின் ஆள் என்பது தவிர வேறு பதவி இல்லாமல் இப்படி எப்படி செயல்படுகிறார் என்றால் அந்தக் குடும்பத்தின் தாத்தா காலத்துப் பிடி நாட்டின் மீதும் கட்சியின் மீதும் எவ்வளவு வலியதாக உள்ளது என்பது புரிகிறது. அவர்கள் வைத்ததே சட்டம் என்பது வாழ்க்கை நடைமுறை போல நடத்தப்படுகிறது. காரணம், அவர்கள் வைத்த ஆட்கள், அந்த ஆட்களின் சொம்புகள் என்று அனைத்து மட்டங்களிலும் பிடி இறுக்கமாக உள்ளது.

இப்படிப்பட்ட eco system மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் அதை மீறி வேறு ஒரு கட்சி தேர்தலில் வெல்ல முடியாது என்றும் நம்பி 2013ல் எழுதியிருக்கிறார் கணபதி இந்தக் கதையை. என்ன செய்தாலும் அந்தக் குடும்பம் நாட்டில் 40-50 % ஆதரவு பெறும் என்கிறார். பாராளுமன்றத்தில் 40 சீட்டுகள் என்பதை எப்படிச் சீரணித்தாரோ தெரியவில்லை. 18+ காட்சி வர்ணனைகள் ஆங்காங்கே விலாவாரியாக உள்ளன.

“ஆறு வருஷமாச்சு. 300க்கு மேல சீட்டு. ஆணி புடுங்கின கணக்கு என்ன?” என்று கேட்டு “அடுத்த எலக்ஷன்ல மவனே” என்று மோடி ஒளிக கூச்சலோடு சமூக வலைத்தளங்களில் பொங்கல் வைக்கும் விராட் கோழியின் முட்டைகள், கிளாசிக் (க்ரோனிக்?) இந்துத்வர்கள், திடீர் தேசியவாதிகள், அரச மரத்தை நேரில் கண்டால் அடையாளம் தெரியாத, ஆனால் “அரச மரத்தை சுத்தியாச்சு. அடிவயித்துல ஒண்ணும் காணுமே?” என்று விண்ணாளம் பேசும் ஏட்டுச் சுரக்காய்கள், இவர்களைத் தவிர்த்து நிஜமாகவே தேசம் பற்றிக் கவலை கொண்டு ‘இவ்வளவு இருந்தும் ஏன் நம்மால முடியலை’ என்று அடிவயிறு பிசைய கண்ணீர் மல்க யோசிக்கும் நல்லார் படித்து வல்லார் ஆகத் தேவையான விஷயங்களைப் புரிந்து கொள்ள இந்தக் கதைப்புத்தகம் கொஞ்சம் உதவும்.

Amazon kindle unlimitedல் படித்துத் திருப்பித்தரும் வகையில் கிடைக்கிறது. விலைக்கு வாங்க 300₹ பக்கம் ஆகிறது.

https://www.amazon.in/SYMPATHY-WAVE-P-R-GANAPATHY-ebook/dp/B00HKKW042

(Visited 106 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close