சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

தொழிலதிபர் லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் – ஜூன் 20.

புதுமையான பல தொழில்களை பாரத நாட்டில் உருவாக்கியவரும், கிர்லோஸ்கர் குழுமத்தின் நிறுவனருமான லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

அன்றய மும்பாய் ராஜதானியின் அங்கமாக இருந்த பெல்காம் மாவட்டத்தில் வசித்துவந்த வேத பண்டிதரான காசிநாத் பண்ட் என்ற மஹாராஷ்டிர பிராமணரின் மகனாக 1869ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் நாள் பிறந்தவர் திரு லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர். தன்னைப் போலவே தன் மகனும் வேத விற்பன்னராக இருப்பான் என்று தந்தை நினைக்க, லக்ஷ்மண்ராவின் விருப்பமோ ஓவியங்கள் வரைவதிலும், இயந்திரப் பொருள்களை உருவாக்குவதிலும்தான் இருந்தது. 

தனது மூத்த சகோதரர் ராமண்ணா பொருளுதவி செய்ய லக்ஷ்மணராவ் மும்பையில் உள்ள ஜே ஜே நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் படிக்கச் சென்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரது பார்வையில் ஏற்பட்ட குறைபாட்டால் அவர் அந்தத் துறையை விட்டு விட்டு இயந்திரங்களை உருவாக்கத் தேவையான ஓவியங்களை வரைவது பற்றிய படிப்பிற்கு மாற்றிக்கொள்ள நேரிட்டது. படிப்பை முடித்த பிறகு அவர் விக்டோரியா ஜூபிலி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். பல்வேறு இயந்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்கிவரும் வெளிநாட்டுப் புத்தகங்களை வாசிப்பதன் மூலமும், கல்வி நிலையத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் அந்த மாதிரிகளை உருவாகிப் பார்ப்பதன் மூலமும் லக்ஷ்மணராவ் தன்னை செதுக்கிக் கொண்டார். 

இதற்கிடையில் 1890களில் ராமண்ணா – லக்ஷ்மணராவ் சகோதர்கள் பெல்காம் நகரில் ஒரு மிதிவண்டி விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்கள். மும்பையில் இருந்து லக்ஷ்மணராவ் மிதிவண்டிகளை வாங்கி அனுப்ப, ராமண்ணா அதனை விற்பனை செய்துகொண்டு இருந்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் விதை இந்த விற்பனை நிலையத்தில்தான் ஊன்றப்பட்டது. தகுதி இருந்தும் லக்ஷ்மன்ராவுக்கு கல்வி நிலையத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை, அது ஒரு ஆங்கிலோ இந்தியருக்கு அளிக்கப்பட்டது. மனம் நொந்த லக்ஷ்மணராவ் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பெல்காம் திரும்பினார். சகோதர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து காற்றாடி ஆலைகளை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கினார். ஆனால் அதற்கான வாடிக்கையாளர்கள் அதிகமாக இல்லை. 

பாரதம் போன்ற விவசாய நாட்டில் விவசாயத்துறைக்கான இயந்திரங்களுக்கு நல்ல தேவை இருக்கும் என்பதைக் கணித்த லக்ஷ்மணராவ் இரும்புக் கலப்பைகளை உருவாக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் விவசாயிகள் அதனை பயன்படுத்தத் தயங்கினர். தொடர்ச்சியாக  விவசாயிகளோடு  பேசி, இரும்புக் கலப்பையின் சாதகங்களை எடுத்துக் கூறி லக்ஷ்மணராவ் அதனை விற்பனை செய்தார். அதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டுகளாக வெட்டும் இயந்திரம் ஒன்றை லக்ஷ்மன்ராவ் வடிவமைத்தார். 

லக்ஷ்மணராவின் இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ குறுநில மன்னர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் முதல் தொழில்சாலை அங்கே நிறுவப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வெளியாகும் பல  பத்திரிகைகளைத் தொடர்ச்சியாகப் படிக்கும் லக்ஷ்மணராவ், அதுபோலவே தொழிலாளர்களுக்கான எல்லா வசதியும் உள்ள குடியிருப்புகளோடு தனது தொழில்சாலையை உருவாக்கினார். அன்றய காலகட்டத்தில் தனது தொழில்சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தீண்டாமையை பின்பற்றக் கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். அதுபோலவே தனது நிறுவனம் தயாரிக்கும் எல்லாப் பொருள்களும் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதிலும் லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கர் உறுதியாக இருந்தார். 

மிகச் சாதாரணமாக மிதிவண்டி விற்பனை செய்வதில் தொடங்கிய பயணம் இன்று பல்வேறு இயந்திரங்களை உருவாகும் மிகப் பெரும் தொழில் குழுமமாக கிர்லோஸ்கர் குழுமம் வளர்ந்துள்ளது. 

தொழில்துறையில் திரு லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கரின் சாதனைகளை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கூறுகிறது. 

(Visited 114 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close