மேஜர் பத்மநாப ஆச்சார்யா பிறந்ததினம் – ஜூன் 21
அது 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் நாள். ஹைதராபாத் நகரில் உள்ள மேஜர் பத்மநாப ஆச்சாரியாவின் வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அதனை எடுத்தவர் மேஜர் ஆச்சாரியாவின் மனைவி சாருலதா. அவர் அப்போது ஆறு மாதம் கர்ப்பம். சாருலதா தன்னை அறிமுகம் செய்து கொண்ட உடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைப்பு, அப்போதும் எடுத்தவர் சாருலதா. மீண்டும் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்தமுறை அழைப்பை எடுத்தவர் மேஜர் பத்மநாப ஆச்சார்யாவின் தந்தை விங் கமாண்டர் ஜெகநாத ஆச்சார்யா. பாரத விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அவர். பாகிஸ்தானோடு நடைபெற்ற 1965 மற்றும் 1971ஆம் நடைபெற்ற போர்களில் பங்குபெற்றவர். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அவர் ராணுவ ஆராய்ச்சி சாலையில் பணியாற்றிவந்தார்.
எந்த ராணுவவீரரின் குடும்பத்தினரும் கேட்க விரும்பாத செய்திதான் தொலைபேசி வழியே பகிரப்பட்டது. ” உங்கள் மகன் மேஜர் பத்மநாப ஆச்சார்யா தீரத்துடன் போரிட்டார். வரலாற்றில் தனக்கான இடத்தை தன் உயிரைக் கொடுத்து அவர் பெற்றுக்கொண்டார்” என்று பத்மநாப ஆச்சார்யாவின் வீரமரணத்தைப் பற்றிய தகவல் அவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் பத்மநாப ஆச்சார்யா அவர்களின் பிறந்ததினம் இன்று. அவரின் பலிதானத்தை கௌரவிக்கும் வகையில் பாரதநாடு அவருக்கு ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மகாவீர் சக்ரா விருதை அளித்தது.
ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த பத்மநாப ஆச்சார்யா இன்றய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் வளர்ந்தவர். அவரது தந்தை ஜகந்நாத் ஆச்சார்யா பாரதநாட்டின் விமானப்படை அதிகாரியாக சேவை செய்தவர். 1969ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் நாள் பிறந்த பத்மநாப ஆச்சார்யாவும் தனது தந்தையைப் பின்பற்றி பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையில் தனது சேவையைத் தொடங்கினார்.
1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் டோலோலிங் மலை உச்சியில் இருந்த பகைவர்களை விரட்டி அந்த இடத்தைக் கைப்பற்றும் பொறுப்பு மேஜர் ஆச்சார்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐயாயிரம் அடி உயரத்தில் இருந்த முகாம் அது. உச்சியில் இருக்கும் பகைவர்களைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவது என்பது நேரடியாக மரணத்தைச் சந்திக்கும் வேலை. ஆனால் அந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது. கடுமையான உயிரிழப்பை தாங்கி ராஜ்புதான துப்பாக்கிப் படை மலையின் உச்சியை அடைந்தது. படையை முன்னிருந்து நடத்திய ஆச்சார்யா எதிரியின் குண்டுகளால் படுகாயம் அடைந்தார். ஆனாலும் மருத்துவ சிகிச்சை பெறாமல், முன்னேறிச் சென்று தனது படையினரோடு எதிரிகளை சர்வநாசம் செய்து தனக்கு இடப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தார். அதற்கான களத்தில் அவர் பணயமாக வைத்தது அவரது உயிரை.
எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் நாட்டின் மரியாதையும், பாதுகாப்பும் முதலில், நான் நடத்திச் செல்லும் படையின் பாதுகாப்பு அடுத்ததாக, எனது பாதுகாப்பு அதற்கும் பின்னால்தான், பாரத ராணுவத்தில் பணியாற்றச் சேரும் அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உதிரத்தால், உயிரால் காப்பாற்றிய வீரர் மேஜர் பத்மநாப ஆச்சார்யா.
தன் தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காதவர் மேஜர் ஆச்சார்யாவின் மகள் அபராஜிதா. அவர் தன் தந்தையின் நினைவாக அவரது படங்களும், அவர் எழுதிய கடிதங்களையும் தொகுத்து மேஜர் ஆச்சார்யாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். மேஜர் ஆச்சார்யாவின் மனைவி சாருலதா, போரில் பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உளவியல் சவால்களைச் சரிசெய்யும் சேவை அமைப்பை நடத்தி வருகிறார்.
பத்மநாப ஆச்சார்யாவின் இளைய சகோதர் பத்மசாம்ப ஆச்சார்யாவும் பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையின் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
நம்பற்குரியர் அவ்வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக விளங்கும் மேஜர் பத்மநாப ஆச்சார்யா உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.