கால்பந்தாட்ட விளையாட்டின் மீது தீராக்காதலை உருவாக்கிய பெயர் என்றே கூறலாம். கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி என்றிருந்த இந்தியரகள் பலரை கால்பந்தாட்ட ரசிகர்களாக மாற்றிய பெருமை டியேகோ ஆர்மண்டோ மாரடோனாவையேச் சேரும். 1986களில் வண்ணத் தொலைக்காட்சி பிரபலமாகிக் கொண்டிருந்த வேளையில் கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ், ரவிசாஸ்திரி ஆட்டத்தில் மெய்மறந்திருந்த இந்திய ரசிகர்கள் பலரையும் இங்கிலாந்துக்கு எதிராக மாரடோனா போட்ட ஒரே ஒரு கோல் கால்பந்தாட்ட ரசிகர்களாக்கியும் விட்டது! மைதானத்தில் பந்துடன் அவர் ஓடி கோல் போடும் தருணங்களை நகம்கடித்துக் கொண்டே படபடப்புடன் காத்திருந்த இந்திய இதயங்கள் பல. உலகின் மறுகோடியில் இருந்த அர்ஜென்டினா நாட்டைப்பற்றியும் மாரடோனாவைப் பற்றிய செய்திகளையும் படிப்பதில் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டினார்கள். விளையாட்டின் மேல் அவருக்கிருந்த காதலை அர்ஜென்டினா மக்களுக்கு அடுத்தபடியாக கொண்டாடியவர்கள் நாம். தங்களுக்குப் பிடித்தவர்களைத் தெய்வமாகவே கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்தார்கள்.
2008ல் தனியார் கால்பந்து அகாடமி ஒன்றை திறப்பதற்காக கொல்கத்தாவிற்கும்,2012ல் நகைக்கடை திறப்புவிழாவின் சிறப்பு விருந்தினராக கேரளாவிற்கும், 2017ல் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கொல்கத்தாவிற்கு வருகை தந்த போது ஆரவாரமாக வரவேற்று அவரை கவுரவித்தார்கள் அபிமானிகள். அவரும் மகிழ்ச்சியுடன் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். முந்தைய தலைமுறை இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தவரின் மரணச்செய்தியில் கால்பந்தாட்ட உலகம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
சுருட்டை முடியும் , கட்டையான குட்டையான உருவமுமாய் அணியின் வெள்ளை நீல நிறச் சட்டையில் வெறியுடன் பந்தை விரட்டி வரும் அந்த முகத்தை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. தன்னுடைய 60வது வயதில் மாரடைப்பால் இறந்த செய்தி இந்திய ரசிகர்கள் பலரையும் மனவருத்ததில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்