சட்டவிதிமுறைகளை மீறிக் கொண்டு வந்த சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமா? நேருவின் ஆட்சி செய்த பிழை திருத்தப்படுமா? இந்திய மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 35 A நீக்கப்படுமா? அல்லது நீடிக்குமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று (26ஆம் தேதி) மற்றும் 28ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு அந்தஸ்தான 35A சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனு மீதான விசாரணை பிப்ரவரி 26 மற்றும் 28ஆம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, எந்த மாதிரியான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்குமோ என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு தேசம் முழுமைக்கும் உள்ளது.
சட்டப் பிரிவு 35 A என்றால் என்ன?
14 மே 1954 ல் அவசர அவசரமாக ஜம்மு & காஷ்மீரில் ஒரு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதை பார்லிமென்ட் சட்டப்பிரிவு 368 ன் கீழ் , நேருவின் அரசு எந்தத் திருத்தமும் செய்யவில்லை. பார்லிமென்ட் நடைமுறையை மீறி அச்சட்டம் அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் 35A சட்டப்பிரிவு அமலுக்கு வருகிறது. இது பார்லிமென்ட் சட்டத்தில் அப்பெண்டிக்சாக மட்டும் 35A உள்ளது.
” ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குடிமக்கள் மட்டுமே அந்த மாநிலத்தின் பிரஜ்ஜைகள். மற்றவர்கள் அந்த மாநிலத்தின் பிரஜ்ஜையாக முடியாது. உதாரணத்திற்கு மற்ற மாநில மக்கள் அந்த மாநிலத்தில் குடியுரிமை கோர முடியாது. அந்த மாநில மக்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை அந்த மாநிலத்தின் சட்டசபையே தீர்மானித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.”
இந்த சிறப்பு சட்டப்பிரிவை நிரந்தர குடியுரிமை சட்டம் என்று கூறுவதும் உண்டு. அதாவது அந்த மாநிலத்தின் பிரஜ்ஜைகளாக இல்லாதவர்கள் நிரந்தரமாக அந்த மாநிலத்தில் குடியேற முடியாது. அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது.
“அரசு வேலைகளில் பணியாற்ற முடியாது. அரசு கல்வி உதவிகளோ, ஸ்காலர்ஷிப்போ கிடைக்காது.”
* இந்த சட்டம் பெண்களுக்கு எதிரானது என்றும் சிலர் கூறுவதும் உண்டு. இதற்குக் காரணம் அந்த மாநிலத்தின் குடியுரிமை பெற்ற பெண்கள், நிரந்தர குடியுரிமை அல்லாத ஒருவரை திருமணம் செய்யும்பட்சத்தில், அந்தப் பெண் தனது குடியுரிமையை இழக்க நேரிடும்.
* அதேசமயம், கடந்த 2002, அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அதாவது, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்யும் ஜம்மு காஷ்மீர் பெண் குடியுரிமையை இழக்க மாட்டார். ஆனால், அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு காஷ்மீர் குடியுரிமை கோர முடியாது என்று தீர்ப்பு அளித்து இருந்தது.
* கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தங்களது குழந்தைகளின் உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்து இருந்தனர்.
கடந்த 2017ல் இந்த சட்டப்பிரிவு குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ”35Aவுக்கு எதிரான மனு மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளை எழுப்பியுள்ளது”’ என்று அப்போதைய தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இருவரிடமும் அட்வகேட் ஜெனரல் கே. வேணுகோபால் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு 2018, மே 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம், இந்த விஷயத்தில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
மனுதாரரின் சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ”பாகிஸ்தானில் இருந்து வரும் ஒருவர் காஷ்மீரில் குடியேறலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காலம் காலமாக வசித்து வரும் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை” என்று வாதிட்டார்.
இதற்கிடையே இதுகுறித்து வாதிட்ட ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக மூத்த தலைவர் சுரிந்தர் அமாபார்டர் கூறுகையில், ”அரசியலமைப்புச் சட்டத் தவறுக்கு உட்பட்டது 35A சட்டப்பிரிவு . ஜனாதிபதி உத்தரவின்பேரில் தான் அரசியலமைப்புச் சட்டத்தில் இது சேர்க்கப்பட்டது. நாடாளுமன்றம் வழியாக சேர்க்கப்படவில்லை” என்று தெரிவித்து இருந்தார்,
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ”எந்தப் புரளியையும் நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள்” என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார். முன்னதாக ரேஷன் வழங்குதல், மருத்துவர்கள் மற்றும் போலீசாரின் விடுப்புகளை ரத்து செய்தல், பெட்ரோல் டீசல் வழக்குதல் என்று அனைத்து முக்கிய வேலைகளிலும் மாநில நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்த மாநிலத்தில் பதுங்கி இருந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.