சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

சோசலிச சித்தாந்தவாதி ராம்மனோகர் லோகியா நினைவுதினம் – அக்டோபர் 12

பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில், விடுதலையான நாட்டில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எப்படி உயர்த்துவது, வறுமையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மக்களை எப்படி வெளியே கொண்டுவருவது என்பது பற்றிய விவாதங்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தன. வெளிநாடுகளில் படித்து பட்டம் வாங்கிய, ஆனால் நாட்டு மக்களின் நலனைப் பற்றி மட்டுமே யோசித்த பல தலைவர்கள் இருந்தார்கள். அதில் முக்கியமானவர் ராம்மனோகர் லோகியா. சோசலிச சித்தாந்தத்தை நமது நாட்டுக்கு ஏற்றதுபோல மாற்றி அமைத்துத் தந்த தன்னலமற்ற அந்தத் தலைவரின் நினைவுதினம் இன்று. 

இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அக்பர்பூர் நகரில் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் மார்வாரி சமூகத்தைச் சார்ந்த ஹிராலால் – சாந்தா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்த லோகியாவை அவரது தந்தையே வளர்த்து வந்தார். மும்பையிலும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திலும் அதனைத் தொடர்ந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்று அதனைத் தொடர்ந்து பொருளாதாரத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஜெர்மனி சென்றார். அங்கே ஆங்கிலேயர்கள் பாரத நாட்டில் விதித்த உப்பின் மீதான வரியைப் பற்றிய ஆராய்ச்சி அவருக்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது. 

தாயகம் திரும்பிய லோகியா காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஏற்கனவே அவருக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரோடு நேரடித் தொடர்பு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே சோசலிச காங்கிரஸ் கட்சி என்ற பிரிவை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்ற பத்திரிகையை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நடத்தி வந்தார். 1936ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வெளியுறவுத் துறையின் செயலாளராக ஜவஹர்லால் நேருவால் நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஆறுதான். விடுதலை பெற்ற நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய கொள்கை விளக்கத்தை அவர் அப்போது தயாரித்தார். 

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, போரில் இங்கிலாந்து நாட்டிற்கு உதவாமல், நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக லோகியா கைது செய்யப்பட்டார். மாணவர்களின் எதிர்பால் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் காந்தியின் ஹரிஜன் பத்திரிகையில் இன்றய சத்தியாகிரகம் என்ற கட்டுரையை எழுதி, அதில் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினார் என்று மீண்டும் கைது செய்யப்பட்டார். 1941ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது லோகியாவும் விடுதலையானார். 

1941ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். லோகியா தலைமறைவானார். உஷா மேத்தா என்பவரோடு இணைந்து மூன்று மாதங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து ரகசிய வானொலியை நடத்தியும், அருணா ஆசப் அலியோடு இணைந்து காங்கிரஸின் இன்குலாப் என்ற மாதாந்திரப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார். இதெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தபோது செய்தவை. 

ஆங்கில அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவர் நேபாளத்தில் சில காலம் வாழ்ந்துவந்தார். மீண்டும் பாரதம் திரும்பிய லோஹியா ஆங்கில அரசால் சிறை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சித்திரவதைக்கு ஆளான லோகியாவின் உடல்நிலை சீர்கெட்டது. உலகப் போர் முடியும் தருவாயில் லோகியா விடுதலையானார். 

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிரஜா சோசலிச கட்சியை உருவாக்கினார். ஒரே நேரத்தில் முதலாளிகளின் ஏகாதிபத்யத்தையும் தொழிலார்களின் சர்வாதிகாரத்தியும் விலக்கி, நமது சூழலுக்கு ஏற்ற சோசலிச சித்தாந்தத்தை உருவாக்கி அதனை பரிந்துரைத்தார். 

நாட்டின் பொது மொழியாக ஆங்கிலம் அல்ல ஹிந்தியே இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. ஆங்கிலம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆங்கில மொழி நமது அசலான சிந்தனைகளை தடை செய்கிறது என்பது அவர் எண்ணம். அதே நேரத்தில் பிராந்திய மொழிகள் வளர்ச்சி அடைய ஆங்கிலம் பெரும் தடையாக இருக்கும் என்றார். மாநிலங்கள் தங்கள் மொழிகளில் மத்திய அரசோடு தகவல் பரிமாற்றம் செய்யும், மத்திய அரசு அந்தந்த மாநிலங்களோடு அவர்கள் மொழியில் பதில் தரவேண்டும். இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கவேண்டும் என்பது அவர் சிந்தனை. 

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் பிரச்சனையில் கேரளாவில் இருந்த பிரஜா சோசலிச அரசு பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலியானார்கள். இதற்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலகவேண்டும் என்று லோகியா கூறினார். கட்சி அதனை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து லோகியா கட்சியில் இருந்து விலகினார். 

மகளிர் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் முன்னேற்றம், ஒற்றை கட்சி ஆட்சி எதிர்ப்பு என்று லோகியாவின் பணி பல்வேறு தளங்களில் இருந்தது. பல்லாண்டுகள் நாட்டுக்காக பணியாற்றி இருக்கவேண்டிய ராம் மனோகர் லோகியா தனது 57ஆம் வயதில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் காலமானார். 

லோகியாவின் சிந்தனைகளும் கட்டுரைகளும் ஒன்பது தொகுதிகளாக வெளியாகி உள்ளன. 

(Visited 46 times, 1 visits today)
+2
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close