பிப்ரவரி 3 – உஸ்தாத் அல்லா ரக்கா கான் நினைவு தினம்
தபேலா ஒரு தவிர்க்க இயலாத இந்திய தாள வாத்தியக் கருவி. தென்னிந்தியாவில் பாரம்பரிய இசையில் மிருந்தங்கம் போல வடக்கே தபேலா பக்கவாத்தியம் இல்லாத கச்சேரியே இருக்காது. தபேலா கலைஞர்களில் முக்கியமானவர் உஸ்தாத் அல்லா ரக்கா கான். இவர் ஜம்முகஷ்மீரில் 1919ல் பிறந்தார். பனிரண்டு வயதில் தபேலாவின் நாதத்தில் மனதைப் பறிகொடுத்த அல்லா ரக்கா உள்ளூர் வித்வான்கள் சிலரிடம் பயின்றார். ஆனாலும் இவரால் திருப்தி அடைய முடியவில்லை.
வீட்டை விட்டு ஓடி பஞ்சாபுக்குப் போனார். அங்கே பட்டியாலா கரானா என்ற சாஸ்திரிய சங்கீத வித்வான்கள் நிறைந்த பகுதியில் மியான் காதர் பக்ஷ் என்பவரிடம் தபேலா கற்க சேர்ந்தார். அதோடு அங்கேயே ஆஷிக் அலிகான் என்பவரிடம் வாய்ப்பாட்டும் ராக வித்தையும் கற்றார். ஆனால் இவர் தபேலா வாசித்துப் பழகும் நேரமும் பயிற்சியும் கண்டு இவரது குரு காதர் பக்ஷ் இவரை தபேலாவில் முழு கவனம் செலுத்தச் சொன்னார். பின்னர் லாகூரில் கச்சேரிகளில் பக்கவாத்தியக்காரராக வாசிக்கத் தொடங்கினார் அல்லா ரக்கா.
சிலகாலம் சென்ற பின் 1940ல் பம்பாய் ஆல் இந்திய ரேடியோவில் பணிக்குச் சேர்ந்தார். இவருக்கு அப்போது திருமணமாகி இருந்தது. தபேலாவில் முதல்முதலாக தனி ஆவர்த்தனம் வாசித்து ஆல் இந்திய ரேடியோவில் சாதனை செய்தார். பிறகு 1947-48ல் சில இந்திப் படங்களுக்கு இசை அமைத்தார். ஆனாலும் தபேலா வாத்தியக்காரர் என்ற நிலையில் தொடர்ந்தார்.
உஸ்தாத் படே குலாம் அலிகான், உஸ்தாத் அலாவுதீன்கான், உஸ்தாத் விலாயத் கான், பண்டிட் ரவிஷங்கர், பண்டிட் வசந்த் ராய், உஸ்தாத் அலிஅக்பர் கான் ஆகியோருக்கு பக்க வாத்தியக்காரராக தபேலா வாசித்தார் அல்லா ரக்கா. அதோடு பல சீடர்களுக்கும் தபேலா கற்றுக் கொடுத்தார். யோகேஷ் சம்ஸி, ஆதித்ய கல்பாண்புரி, உதய் ராம்தாஸ், ஷ்யாம் கானே, நிஷிகாந்த் பரோட்கர் உள்ளிட்ட பிரபலங்கள் இவரது சீடர்கள். இவரது மகன் ஜாகீர் உசேனும் இவரது பிரதம சீடர் ஆவார்.
பண்டிட் ரவி சங்கருடன் சேர்ந்து இவர் உலக அளவில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, அமெரிக்காவின் ராக் அண்ட் ரோல், இசைகளில் இவர் நிபுணராக இருந்தார். பீட்டில்ஸ் இசைக்குழுவில் இவர் கொண்டாடப்பட்டார். ஜாஸ் டிரம் இசைக்காரர் பட்டி ரிச்சுடன் இவர் வாசித்த ரிச் அ லா ரக்கா என்ற இசைத்தட்டு மிகப் பெரிய சாதனை படைத்தது.
அரசு இவருக்கு 1977ல் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது. 1982ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார்.
2000, பிப்ரவரி 2ஆம் தேதி இவரது மகள் ரசியா மரணமடைந்த செய்தி வந்தது. அதில் அதிர்ச்சி அடைந்தவர் அன்றிரவு நெஞ்சுவலிக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிப்ரவரி 3 ஆம் தேதி இவர் காலமானார்.
இந்திய இசை வரலாற்றில் முக்கியமான தாளவாத்தியக் கலைஞர்களில் ஒருவரான அல்லா ரக்கா கானுக்கு இன்று அஞ்சலி செலுத்துவோம்.