பிஜேபியின் மெகா திட்டம்; 2014 ல் கோட்டை விட்ட மாநிலங்களில் வெற்றி பெற கையாளும் யுக்தி பலிக்குமா?
பிஜேபி கடந்த2014 லோக்சபா தேர்தலில் 282 இடங்களை தனித்தே வென்றது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக காங்கிரஸ் வெர்சஸ் பிஜேபி மாநிலங்களில் பெரும்பாலும் காங்கிரஸ் துடைத்தெறியப் பட்டது. மேலும் உத்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் 2/3 க்கும் அதிகமான இடங்களைக் கைப்பிடித்தது. ஆகையால் தான் பாஜக எளிதாக தனி மெஜாரிட்டி என்ற நிலையை எட்ட முடிந்தது.
தற்போது பாஜகவின் கணக்குப்படி, உத்திரப்பிரதேசத்தில் எந்த வகையான தேர்தல் வியூகம் அமைக்கப்போகிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. மேலும் அயோத்தியா விஷயத்தில் நீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தது. உ.நீ.மன்றமும் வழக்கை விசாரிக்காமல் காரணங்களைக் காட்டி வழக்கு விசாரணையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறது. பீகாரிலும், மகாராஷ்டிராவிலும் அதிக இடங்களை நிச்சயம் பெற இயலும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இருப்பினும், உத்திரப்பிரதேசம், காங்கிரஸ் வெர்சஸ் பாஜக மாநிலங்களில் அதற்கு சிறிய இழப்புகள் ஏற்படும் என்பதை பாஜக உணர்ந்தே உள்ளது.
தேர்தல் நெருங்கும் பட்சத்தில் மோடியின் செல்வாக்கும், கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பு போன்றவற்றின் மூலமாக காங்கிரசுடன் நேரடிப் போட்டியுள்ள மாநிலங்களில் 90% ஈடுகட்ட முடியுமென பாஜக கருதுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டி இடுவதால் , (குறிப்பாக உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணி வலுவாக இருப்பதால் ) 40 -50 இடங்களை இந்த மாநிலங்களில் இழக்க வேண்டி வருமே என்று பாஜக உணர்ந்தே உள்ளது.
இதையெல்லாம் ஈடுகட்ட பாஜக கண் வைத்திருக்கும் மாநிலங்கள் தான் ஒடிஸா, மேற்கு வங்காளம் , வடகிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்கள் போன்றவை. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்காளம், ஒடிஸா, வட கிழக்கு மாநிலங்கள் மூன்றையும் சேர்த்து வரும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 88. இந்த 88 இடங்களில் பாஜக பெற்ற இடங்கள் 11. இந்த இடங்களின் எண்ணிக்கையைக் கூட்ட பாஜக கடும் முயற்சியை மேற்கொள்கிறது. ஒடிசாவிலும், மேற்கு வங்காளத்திலும் அதிக அளவு எண்ணிக்கையைப் பெற்றே தீர வேண்டும் என்ற கணக்கில் செயல்படுகிறது பாஜக.
மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை மமதாவிற்கும் மோடிக்கும் இடையே நேரடிப்போட்டி என்ற களத்தை உருவாக்குவது, இதன் மூலமாக கம்யுனிஸ்ட்கள் மற்றும் காங்கிரசை ஓரம்கட்டுவது என்பது பாஜகவின் திட்டமாக உள்ளது. மேலும் மமதாவிற்கு எதிரான வாக்குகளை பாஜகவை நோக்கிக் குவியச் செய்வது, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை வைத்து சில தொகுதிகளில் பலத்த நம்பிக்கை பெறுவது . இததான் பாஜகவின் மெகா திட்டம். இதே திட்டத்தைத் தான் ஒடிசாவிலும் அரங்கேற்ற செய்யும் பணிகளைத் தொடங்கி விட்டது பாஜக. அங்கும் நவீன் பட்நாயக்கிற்கும் பாஜகவிற்கும் தான் நேரடிப் போட்டி என்பதன் வாயிலாக காங்கிரசை ஓரங்கட்டுவது. மேலும் பிரதமர் வேட்பாளர் என்ற அந்தஸ்துடன் தேர்தலை எதிர்கொள்வதன் வாயிலாகக் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களைப் பெற முடியும் என நம்புகிறது பாஜக.
வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் 8 மாநிலங்களில் 7 மாநிலங்களில் காங்கிரசின் ஆட்சியை அப்புறப்படுத்தியுள்ளது பாஜக. பாஜக தலைமையிலான ஆட்சி, பாஜகவிற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பாஜகவின் கணக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் மற்ற எந்த ஆட்சியும் கொடுக்காத பல்வேறு நலத்திட்டங்களை மோடி அரசு செய்துள்ளது என்பதே. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடப்பதால், தேர்தலுக்குப் பின்பும் வட கிழக்கு மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவாவது பாஜகவை ஆதரிப்பார்கள். ஏனெனில் மத்தியில் ஆளும் அரசைப் பொறுத்தே மாநிலத்திலும் கட்சிகள் ஆட்சிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் வைத்துப் பார்க்கும் போது அங்குள்ள மாநில கட்சிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைவதே. இதைத் தான் பாஜக தற்போது யுக்தியாகவும் பயன்படுத்தப்பார்க்கிறது. ஏற்கனவே திரிபுரா, அஸ்ஸாமில் தங்களது ஆட்சியே நடப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
தென் மாநிலங்களான தமிழ்நாடு , ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்த்தால் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 130. இந்த 130 தொகுதிகளில் பாஜகவின் எண்ணிக்கை 21மட்டுமே. தென் மாநிலங்களில் பாஜகவின் திட்டமே தமிழகத்தில் வலுவான அணி அமைப்பது என்பதுதான். கடந்த தேர்தலில் தமிழகம் (1), தெலுங்கானா (1), ஆந்திரா (2), கர்நாடகா (17), கேரளா (0), புதுச்சேரி (0) இடங்களைப் பாஜக பெற்றது. தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு பாஜகவின் எண்ணிக்கை உயர்த்த இயலும் என எதிர்பார்க்கிறது. திமுகவைக் காட்டிலும் பலமான அணியை அதிமுகவும் பாஜகவும் இணைந்து அமைக்கும் பட்சத்தில் இதனால் பாஜக பலம் அடைய வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு 15 இடங்கள் கிடைத்தால் கூட ஆட்சி அமைக்க அது பெருமளவு உதவும் என்று பாஜக திட்டமிடுகிறது.
கேரளாவில் இந்த முறை 2 இடங்களையாவது பிடிக்கத் திட்டமிடுகிறது பாஜக. ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜகவால் கூட்டணி அமைக்க இயலாத காரணத்தால் அங்கு இடங்களைப் பெற இயலாது என்பதை பாஜக உணர்ந்தே உள்ளது. ஆனால் இந்த இரு மாநிலங்களைப் பற்றியும் பாஜக கவலைப்படுவதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற புள்ளியில் சந்திரசேகர் ராவும், ஜெகன் மோகன் ரெட்டியும் தேர்தலுக்குப் பின்பு தங்களைத் தான் ஆதரிப்பார்கள் என்று திடமான நம்பிக்கையில் உள்ளது பாஜக. அது உண்மையும் கூட. ஏனெனில் சந்திரசேகர் ராவிற்கும் , ஜெகன் மோகன் ரெட்டிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால், தமது மாநிலத்தை எப்படியேனும் அபகரிக்க காங்கிரஸ் அத்தனை யுக்தியையும் கையாளும் என்பதை உணர்ந்து செயல்படுவார்கள் என்பதே அரசியல் யதார்த்த சூழலாக உள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தாலும் சில பாராளுமன்ற தொகுதிகளில் நேரடிப் போட்டி என்பது காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் இடையே தான். அந்த இடங்களை மீண்டும் பெறுவதன் வாயிலாக குறைந்த பட்சம் கடந்தமுறை பெற்ற இடங்களை எப்படியாவது பிடிக்கத் திட்டமிடுகிறது பாஜக. தென் மாநிலங்களைப் பொறுத்த மட்டில் பாஜக கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் இழப்பதற்கு பெரிதாக எதுவுமில்லை. கர்நாடகாவை நீக்கி விட்டுப் பார்த்தால் 102 இடங்களுக்கு 4 இடங்களை மட்டுமே பாஜக பிடித்திருந்தது. ஆகையால் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக தனித்து இழப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இதை விட அதிகமாகக் கிடைத்தால் லாபம் என்ற வகையில்தான் திட்டமிடுகிறது.
இந்தத் திட்டத்தை மனதில் வைத்தே மோடி கடந்த இரு மாதங்களாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்து விட்டார். காங்கிரஸ் வெர்சஸ் பாஜக மாநிலங்களில் பாஜகவின் நிலை என்ன, அதற்கான பலம் பலவீனங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.