பூட்டி இருந்த வீட்டிலிருந்து மாயமாக மறைந்த சேஷாத்ரி ஸ்வாமிகளை ஊரெங்கும் தேடியும் கிடைக்கவில்லை. சித்தப்பாவும் சித்தியும் துடிதுடித்துப் போனார்கள். சில நாட்களில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் சேஷாத்ரி இருப்பதாய்த் தகவல் கிட்டி அங்கு சென்று பார்த்தால் அங்குள்ள முக்தீஸ்வரர் கோயிலில் சேஷாத்ரி ஸ்வாமிகள் தங்கி இருந்தார். வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். அவர் தம்பி தினந்தோறும் அவருக்கு உணவு எடுத்துச் சென்று கொடுத்து வந்தார். கோயிலில் இருந்த பாம்பு அவர் கழுத்தில் மாலையாக ஏறிக்கொண்டு அவர் தலை மேல் குடையாக ஏறிக்கொண்டு படம் பிடித்துக்கொண்டு நிற்கும். அனைவரும் பயந்து அலறுவார்கள். ஆனால் சேஷாத்ரி ஸ்வாமிகளோ வாயைத் திறக்கவே மாட்டார். வந்தது போல் தானாகவே அந்தப் பாம்பு போய்விடும். தமக்கு உண்பதற்கு அளிக்கப்படும் உணவை லிங்கமாகச் செய்து அர்ச்சனை செய்து கோயில் குளத்தில் கழுத்தளவு நீரில் இருப்பார். அவர் மனதில் பாசபந்தங்கள் அகன்று வைராக்கியம் வந்துவிட்டதை அவர் முகம் காட்டியது. சித்தப்பா அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.
அவருடைய தவ வலிமை பிரபலமடைய நாளாவட்டத்தில் அக்கம்பக்கத்தில் இருந்து எல்லாம் மக்கள் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகவே நாளாவட்டத்தில் ஒருவருக்கும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். நாட்கள் ஆக ஆகப் பேச்சையும் குறைத்துவிட்டார். முக்கியமான விஷயங்களாக இருந்தால் எழுதிக் காட்டுவார். மௌன ஸ்வாமிகள் என்னும் பெயரை மக்கள் சூட்டினார்கள்.
திண்டிவனம் கோயிலின் யாகசாலையில் தவம் இருக்க வேண்டும் என்று உள்ளே சென்று அமர்ந்தவர் நான்கு நாட்களாகியும் வெளியே வராமல் போகவே குருக்கள் பயந்து போய்க் கதவைத் திறந்து பார்த்தார். பார்த்த குருக்களுக்கு சேஷாத்ரி ஸ்வாமிகள் சமாதி நிலையில் தவம் இருந்தது பிடிக்காமல் அவரை வேறே எங்காவது போகச் சொன்னார். அங்கிருந்து கிளம்பிய சேஷாத்ரி ஸ்வாமிகள் தாம் திருவண்ணாமலைக்குப் போவதாக எழுதிக் காட்டிவிட்டுக் கிளபி விட்டார். சில மாதங்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சுற்றினார். படவேடு ரேணுகாம்பாளைத் தரிசித்து அவள் அருளாட்சியில் மூழ்கித் திளைத்தார். வழியில் சந்நியாசிப் பாறையைத் தரிசித்துவிட்டு அருணையம்பதிக்கு வந்து சேர்ந்தார் சேஷாத்ரி ஸ்வாமிகள்.
தாம் கடைசியாக வந்து சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டார் சேஷாத்ரி ஸ்வாமிகள். தன்னிலை மறந்து தான் என்பது கரைந்து தானும் அதுவும் ஒன்றாகி அதில் கரைந்தார். இவ்வுலகைத் துறந்து தன் உடலையும் மறந்து கிட்டத்தட்ட உன்மத்தராய் ஒரு பித்தராய்த் தெருக்களில் அலைந்து திரிந்தார். சித்தப்பா ராமசாமி ஜோசியருக்கு சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவண்ணாமலையில் இருப்பது தெரிய வரவும் அவர் உடனே கிளம்பி வந்தார்.
எப்படியேனும் சமாதான வார்த்தைகள் சொல்லிப் பிள்ளையை அழைத்துச் செல்லவேண்டும் என்னும் எண்ணத்தோடு வந்திருந்தார். இங்கு வந்து பார்த்தால் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஒரு பிச்சைக்காரனைப் போல் பரட்டைத்தலையோடும் , ஒட்டிய கன்னங்களோடும், குழி விழுந்த கண்களோடும், வாடிய வயிற்றோடு தனக்குத் தானே பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு மனம் கலங்கினார். அங்கேயே தங்கி சேஷாத்ரியைத் தன்னோடு அழைத்துச் செல்லப் பல வகைகளிலும் முயன்றார். முடியவில்லை. கடைசியில் அங்கிருந்த அன்னச் சத்திரக்காரரிடம் சேஷாத்ரிக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு போடும்படி வேண்டிக்கொண்டு விட்டுக் கிளம்பினார்.
சேஷாத்ரி ஸ்வாமிகள் கம்பத்து இளையனார் சந்நிதியிலோ அல்லது திரௌபதி அம்மன் கோயிலிலோ அல்லது ஈசான்ய மடம், துர்க்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களிலேயே அமர்ந்து தவத்தில் ஈடுபடுவார். மலை மேல் ஏறிச் சென்று தவம் செய்யப் போனதில்லை. மலை அடிவாரத்திலேயோ பாதாள லிங்க சந்நிதியிலேயோ அமர்வார்.
தமது பத்தொன்பதாவது வயதிலே 1889 ஆம் ஆண்டில் அருணாசலத்துக்கு வந்து சேர்ந்தார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அருணாசல க்ஷேத்திரத்தைக் குறித்து சேஷாத்ரி ஸ்வாமிகள் கூறுவதாவது: “இந்த க்ஷேத்திரத்தில் தான் அம்மையும் அப்பனும் இணைந்து இவ்வுலகத்து மாந்தர் அனைவரையும் அழைத்து முக்தி கொடுக்கின்றனர். அந்தக் கிருஷ்ணனோ எனில் தன் சுதர்சனச் சக்கரத்தைக் கூடக் கீழே வைத்துவிட்டுப் புல்லாங்குழலை எடுத்து அதில் இசைக்கும் கீதங்களுக்கு ஈசன் வெளியே வந்து நடனமாடுகிறான். ” என்பாராம். சேஷாத்ரி ஸ்வாமிகள் அங்கே வந்து சேர்ந்து சரியாக ஆறு வருடங்களுக்குப் பின்னர் அங்கே இன்னொருவரும் வந்து சேர்ந்தார். அவர் தான் ரமண மஹரிஷி! ரமண மஹரிஷியைப் பாதாள லிங்கக் குகைகளில் தவம் செய்கையில் முதலில் கண்டவர் சேஷாத்ரி ஸ்வாமிகள் தான். அவரைச் சின்ன சாமி என்று அழைப்பாராம். மேலும் ரமணரைக் குறித்து உலகுக்கு அறிவித்தவரும் சேஷாத்ரி ஸ்வாமிகள் தான்.
ரமணரைப் பல விதங்களிலும் சேஷாத்ரி ஸ்வாமிகள் பாதுகாத்து வந்தார். அதைக் கண்ட மக்கள் சேஷாத்ரி ஸ்வாமிகளை “அம்பாள்” எனவும் ஸ்ரீரமணரை “சுப்ரமணியர் அவதாரம்” எனவும் அழைத்தனர். இன்னும் சிலர் சேஷாத்ரி ஸ்வாமிகளைப் பெரிய சேஷாத்ரி எனவும் ரமணரைச் சின்ன சேஷாத்ரி எனவும் அழைத்தனர். இது ஒன்றையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத சேஷாத்ரி ஸ்வாமிகளோ அனைவருமே பைத்தியம் எனச் சொல்ல அதைக் கேட்ட ரமணரும் சிரித்துக்கொண்டே, “இந்த அருணாசலத்தில் மூன்று பைத்தியங்கள். ஒன்று அந்த அருணாசலேஸ்வரன், இன்னொன்று நீர்(சேஷாத்ரி ஸ்வாமிகள்) மூன்றாவது தாம் (ரமணர்) என்று கூறுவாராம். ஆனால் சில பக்தர்களோ அருணாசலத்தில் மூன்று லிங்கங்கள். ஒன்று அருணாசலேஸ்வரர், இன்னொருவர் சேஷாத்ரி ஸ்வாமிகள், மூன்றாமவர் ஸ்ரீரமணர் என்று கூறுவார்களாம்.