வரும் மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் அதிமுகவும் காங்கிரசும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன. அதிமுக சார்பாக சு.வேணுகோபால் போட்டியிடுகிறார். வேணுகோபால் 2009 லிருந்து திருவள்ளூர் தொகுதியில் எம்பி யாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் என்பது இவருக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.ஜெயக்குமார் என்பவர் களம் இறங்குகிறார். கடந்த 2014 தேர்தலில் திமுக விசிக கூட்டணியில் விசிகவின் ரவிக்குமார் களம் கண்டார்.
2014 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி. ஆனால் இந்த முறை நடக்கும் 2019 தேர்தல் வித்தியாசமானது. தினகரன் அதிமுகவின் வாக்குகளில் எத்தனை சதவீதம் பிரிக்கும், கமலின் மய்யம் எத்தனை சதவீதம் பெரும், சீமான் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது புதிது. மேலும் தமிழகத்தில் 1.75 கோடி புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எந்தக் கூட்டணி வெற்றி பெரும் என்பதை ஓரளவுக்கு அடையாளம் காண இயலும். அதை மட்டும் இங்கு தருகிறேன். 2014 தேர்தலை நான் கணக்கில் கொள்ளவில்லை. ஏனெனில் அத்தேர்தலில் திமுகவிற்கு எதிரான மனநிலை, காங்கிரசிற்கு எதிரான மனநிலை காரணமாக திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. மேலும் ஜெயலலிதா மிகுந்த வலிமையுடன் காணப்பட்டார். எனவே 2014 தேர்தல் முடிவுகளை நான் கணக்கில் கொள்ளவில்லை.
என்னுடைய கணிப்பிற்கு முன்பாக சில விஷயங்கள் சொல்லி விடுகிறேன். 2016 சட்டசபை தேர்தல் முடிவுகளைக் கணக்கில் கொள்ள சில காரணங்கள் உள்ளன. அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை காங்கிரசுடன் கூட்டணி வைத்து எதிர்கொண்ட திமுகவால் அதிகபட்சம் 90 இடங்களைத் தான் பிடிக்க முடிந்தது. அதிமுக தனித்து வேறு தேர்தலை எதிர்கொண்டுள்ளது. 2006 தேர்தலில் இருந்து திமுகவால் அதிமுக அளவிற்கு தனித்துப் பெரும்பான்மை பெற இயலவில்லை. ஆகையால் திமுகவிற்கான வாக்குகள் அதிகபட்சம் 2016 சட்டசபை தேர்தலில் கிடைத்த வாக்குகளே ஆகும். எனவே தான் திமுகவிற்கு சாதகமான 2016 சட்டசபை தேர்தலையே கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவுகள் எப்படி அமையலாம் என்று கணிக்கிறேன்.
அதற்கு முன் 2016 சட்டசபை தேர்தலை எப்படி கட்சிகள் சந்தித்ததன என்பதை பார்த்து விடலாம்.
- திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்தித்தன.
- பாஜக, பாமக தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளன.
- அதிமுகவும் தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளது.
- மக்கள் நலக்கூட்டணியில் விசிக, இந்திய கம்யுனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், மதிமுக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில் முதல் நான்கு கட்சிகளும் தற்போது திமுக கூட்டணியிலும் , தேமுதிக, தமாகா ஆகிய இரு கட்சிகளும் அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் உள்ளது.
2016 சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை கூட்டணி வாக்குக் கணக்கைப் பார்க்கலாம்.
அதிமுக அணி : 52.36%
திமுக அணி : 42.85%
வித்தியாசம் : 9.51%
அதிமுக அணி அரித்மெட்டிக் படி அதிமுக கூட்டணி 9.51% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம், திருவள்ளூர்,பூந்தமல்லி ஆகும்.
திருவள்ளூர் லோக்சபாவிற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 7,23,000
திமுக கூட்டணி வாக்குகள் 6,03,000. (ம.ந.கூ பெற்ற வாக்குகளில் 2/3 பங்கை திமுக கூட்டணிக்குக் கொடுத்துள்ளேன்)
வாக்கு வித்தியாசம் – 1,20,000 (அதிமுக அணி அதிகமாக பெற்றுள்ள வாக்குகள்).
சட்டமன்ற தொகுதிகளை கணக்கில் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளது. ஏனெனில் வாக்காளர் தேர்வு கூட அதிமுக, திமுகவின் வெற்றியில் பங்கு வகித்துள்ளன. அதனால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதை தமிழகம் முழுவதும் பார்க்க முடிகிறது. ஆனால் ஒவ்வொரு தொகுதியும் எந்த கட்சிக்கு சாதகமானவை என்று ஓரளவுக்கு யூகிக்க முடியும். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்றவை அதிமுகவிற்கு சாதகமானவை. ஆவடி, மாதவரம் திமுகவிற்கு சாதகமாக உள்ளது.
தற்போதைய தேர்தலில் காங்கிரசிற்கு இத்தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக கூட்டணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக, பாமக, தேமுதிகவிற்கு அதிக அளவு வாக்கு வங்கி உள்ள தொகுதியாக இருப்பதும்,வேணுகோபால் எம்பியாக இருப்பதும் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது. இத்தொகுதியில் தினகரன் பெருமளவிற்கு தாக்கம் செய்ய இயலாது. எனவே இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. திருவள்ளூர் அதிமுக வெற்றி பெரும் தொகுதி என்பதே எனது பார்வை.