புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியா விவகாரம் குறித்த வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணையை நடத்த 5 பேர் அமர்வு கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது . உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வழக்கை விசாரிக்க, புதிதாக 2 நீதிபதிகளை அமர்வில் சேர்த்துள்ளார் .
அயோத்தியா வழக்கு கடைசியாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, நீதிபதி யூ.யூ.லலித், ‘இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நான் முன்னர் ஆஜராகியுள்ளேன். எனவே, என்னால் இந்த வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது’ என்று கூறிவிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் 5 பேர் கொண்ட அமர்வில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். முன்னர் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையில் அயோத்தியா விவகாரம் விசாரிக்கப்பட்ட போது, இந்த இரண்டு நீதிபதிகளும் அமர்வில் இடம் பெற்றிருந்தனர் .
வரும் செவ்வாய் கிழமை அயோத்தியா வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இந்த வழக்கை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளை சேர்த்து தலைமை நீதிபதி கோகாய் மற்றும் நீதிபதிகள் சந்திராசூட், போப்டே ஆகியோர் விசாரணை செய்வார்கள்.
லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ஆளும் பாஜக-வின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் வலதுசாரி அமைப்புகளும், மத்திய அரசு சிறப்பு அவசரச் சட்டம் கொண்டு வந்து ராமர் கோயில் கட்டுமானப் பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு அரசு தரப்பு, வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அதை நிராகரித்த நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் வழக்கு விசாரணையை கையில் எடுத்தது.
வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக நினைப்பதற்குக் காரணம், லோக்சபா தேர்தலின் நெருக்கம்தான். அப்படிச் செய்வதன் மூலம், தேர்தலுக்கு முன்னரே கோயிலை எழுப்பி இந்து சமூகத்தினரின் ஓட்டுகளைப் பெறலாம் என்று பாஜக திட்டமிடுகிறது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ராமர் கோயில் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கு சொல்லப்படும் தீர்ப்பை அடுத்துத்தான் அரசு தனது நடவடிக்கையை எடுக்கும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.