31 ஜனவரி – வீரத்திருமகன் சோம்நாத் ஷர்மா பிறந்தநாள்
பரம் வீர் சக்ரா விருது ராணுவத்தில் மிக உயர்ந்த விருதாகும். சாதாரண குடிமக்கள் செயர்க்கரிய செயல்களை ஆற்றும் போது பாரத ரத்னா என்று கௌரவிக்கப்படுவார்கள். அதுபோலவே ராணுவ வீரர்கள் செயற்கரிய செயல்களை ஆற்றும் போது பரம் வீர் சக்ரா என்ற பதக்கம் கொடுத்து கௌரவிக்கப்படுவார்கள். நம் நாட்டின் முதல் பரம் வீர் சக்ரா பதக்கம் பெற்ற வீரத்திருமகன் மேஜர் சோம்நாத் ஷர்மாவின் பிறந்ததினம் இன்று.
1923 ஜனவரி 31ல் பஞ்சாபில் இருந்த (தற்போது இமாசலப்பிரதேசத்தில் உள்ளது) கங்க்ரா பகுதியில் தத் என்ற ஊரில் பிறந்தார் சோம்நாத். இவரது குடும்பமே ராணுவத்தில் பணியாற்றிய குடும்பம். இவர் தந்தை மேஜர் ஜெனரல் அமர்நாத் ஷர்மா ராணுவத்தின் மருத்துவப் பிரிவின் தலைவராக இருந்தவர். இவரது சகோதரர் லெஃப்ட்டினென்ட் ஜெனரல் சுரேந்தர்நாத் ஷர்மா ராணுவத்தின் பொறியாளர் பிரிவின் தலைவராகவும், மற்றொரு சகோதரர் ஜெனரல் விஸ்வநாத் ஷர்மா இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும், சகோதரி மேஜர் கமலா திவாரி ராணுவத்தின் மருத்துவத் துறையிலும் பணியாற்றியவர்கள்
இவர் நைனிடாலில் உள்ள ஷெர்உட் கல்லூரியில் பள்ளிக்கல்வி வரை பயின்றார். பிறகு டேராடூன் ராணுவக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கே சிறப்பான மாணவராக விளங்கியதால் ராஜாங்க ராணுவப் பயிற்சியகம், சாந்தர்ஸ்ட் (இங்கிலாந்து) என்ற அமைப்பில் படிக்க அனுப்பப்பட்டார்.
பிப்ரவரி 22, 1942ல் இவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் ஹைதராபாத் ரெஜிமெண்டில் அதிகாரியாக செகன்ட் லெஃப்டினெண்ட் பதவியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின்னர் இந்த படைப்பிரிவு இந்திய ராணுவத்தின் குமாவுன் ரெஜிமெண்ட் என்று பெயர் மாற்றம் பெற்றது. இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்று ஜப்பானியப் படைகளை பர்மாவில் எதிர்கொண்டது இவரது படைப்பிரிவு. அங்கே இவர் கர்னல் திம்மையாவின் தலைமையில் போரிட்டார். (திம்மையா பிற்காலத்தில் இந்திய ராணுவத்தலைவரானார்). ஷர்மாவின் வீரமும் செயல்திறமும் திம்மையாவால் பாராட்டப்பட்டு கமாண்டர் குறிப்புகளில் இடம் பெற்றன.
இவர் ஆங்கிலேயக் கல்விச்சாலைகளில் பயின்ற போதும் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடலாக இவரது தாத்தா சிறுவயதில் சொல்லித் தந்த பகவத் கீதை இவரது மனதில் பதிந்தது. அதுவே இவரது பல செயல்பாடுகளுக்கும் காரணமானது. இவரது மாமா வாசுதேவ் ஷர்மா மலேசியப் பகுதியில் உலகப்போரில் பங்குபெற்று உயிர்த்தியாகம் செய்தார். அவரைப் போலவே தாமும் வீரம் நிறைந்த தளபதியாக இருக்கவேண்டும் என்று சோம்நாத் ஆவல் கொண்டார்.
இந்நிலையில் நாடு விடுதலை பெற்று இந்திய ராணுவம் அமைந்த போது குமாவுன் ரெஜிமெண்டில் மேஜராக பொறுப்பேற்றார் சோம்நாத். அவரது படைப்பிரிவுக்கு கஷ்மீரத்தில் பணி தரப்பட்டது. அக்டோபர் 27, 1947 அன்று பாகிஸ்தானின் ஐந்து நாட்கள் முந்தைய ஆக்கிரமிப்பு முயற்சிக்கு பதிலடியாக இந்திய ராணுவம் அணிவகுத்து நின்றது. 31அக்டோபர் அன்று நான்காவது பட்டாலியன் சோம்நாத் தலைமையில் ஸ்ரீநகர் சென்றது. அப்போது ஹாக்கி விளையாடி கையில் அடிபட்டுக் கொண்டிருந்தார் சோம்நாத். இவரது உயரதிகாரிகள் இவரை ஒய்வெடுக்கும் படி பணித்தனர். எதிரியை விரட்டியபி ஓய்வெடுப்பேன் அல்லது அவனோடு போரிட்டு கட்டாய ஓய்வு பெறுவேன். இங்கே உட்கார்ந்திருக்க மாட்டேன் என்று சொல்லி படையோடு கிளம்பினார் சோம்நாத்.
நவம்பர் 3 ஆம் நாள் பட்காம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் இவரது படைகள். பாகிஸ்தானிகள் உள்ளே புகுந்துவிடாமல் தடுப்பது அவர்கள் நோக்கம். எதிரி நடமாட்டம் ஏதுமில்லை என்று மூன்று படைப்பிரிவுகளில் இரண்டு கம்பெனிப் பிரிவுகள் ஸ்ரீநகருக்கு மதியம் திரும்பிவிட்டன. சோம்நாத்தின் படைப்பிரிவு மட்டும் காவலுக்கு நின்றது. மூன்று மணிவரை பணி, பிறகு வேறொரு பிரிவு வந்துவிடும் என்று உத்தரவு. 2.30க்கு உள்ளூர்வாசிகள் வீடுகளுக்குள் இருந்து சுட ஆரம்பித்தனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று திருப்பிச் சுட சோம்நாத் உத்தரவு கொடுக்கவில்லை.
சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவு 100 பேர், ஆனால் தாக்குதல் நடத்தும் கூலிப்படையினர் 700 பேர். இந்நிலையில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம் என்று உணர்ந்தார் சோம்நாத். ஆனால் படைப்பிரிவு இடத்தை விட்டுவிட்டு நகர்ந்தால் ஸ்ரீநகர் போக்குவரத்து வழியும், விமான நிலையமும் எதிரிகளின் வசமாகும். நம் ராணுவம் மேற்கொண்டு படைகளை அனுப்பினாலும் வரவோ இறங்கவோ இடமிருக்காது. ஆகவே தம் படைப்பிரிவுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தவும் அதே நேரம் தற்காப்பாக இருக்கவும் உத்தரவிட்டார். முடிந்தவரை இடத்தை விட்டு அகலாது பாதுகாக்க உறுதிபூண்டனர் நூறுபேர்.
ஆனாலும் ஆட்குறைவும் அடிபட்டு விழும் வீரர்களும் இவர்களது பாதுகாப்பைக் குறைத்தது. சோம்நாத் தானே ஒவ்வொரு போஸ்டுக்கும் ஓடி ஓடி ஆயுதங்களையும், குண்டுகளையும் விநியோகித்தார். ஒருவர் அடிபட்டு விழுந்தால் மற்றொரு வீரர் அந்த இடத்துக்கு வரும்வரை அங்கே நின்று துப்பாக்கி பிடித்துச் சுட்டார். தலைவர் இப்படிச் செய்து அவருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று அவரை பாதுகாப்பான இடத்தில் இருக்கச் சொன்னார்கள் இவரது படைப்பிரிவினர். ஆனால் தலைவன் போர்க்காலத்தில் உட்கார்ந்து உத்தரவு போடமாட்டான். இறங்கி அடிப்பான், படை தொடர்ந்து அடிக்கும் என்றும் போர் என்று வந்த பிறகு தலைவனாவது தொண்டனாவது சொந்தமாவது பந்தமாவது. நம் பணி எதிரிகளிடமிருந்து இந்த இடத்தைக் காப்பது. அதற்கு என்ன செய்யவேண்டுமோ செய்வோம், மற்றது அவன் கையில் என்று கீதையை மேற்கோள் காட்டிப் பேசினார் சோம்நாத்.
தலைமையகத்துக்கு அவர் அனுப்பிய தகவல்” எதிரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நாங்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறோம். ஆனாலும் இங்கிருந்து பின்வாங்க மாட்டேன். எங்கள் படைப்பிரிவில் கடைசி குண்டு உள்ளவரை சுடுவோம், கடைசி மனிதன் உள்ளவரை அடிப்போம்” என்று செய்தி அனுப்பினார். தலைமையகம் உடனடியாக விமானத்தில் வேறு சில படைப்பிரிவுகளை அனுப்பியது. அவர்கள் ஸ்ரீநகர் விமானநிலையம் வந்திறங்கி பட்காம் வருவதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது.
சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவில் ஒருவர் கூட எஞ்சவில்லை. ஆனால் 700 பேரில் 200 பேர் சாவும், 250 பேர் காயமும் பட்டதில் பாகிஸ்தானிய கூலிப்படையினர் சற்றே பின்னடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்களைத் திரட்டிக் கொண்டு வந்த போது 500 பேர் கொண்ட வலிமையான ராணுவப்படைப் பிரிவு வரவேற்றது. வர இயலாமல் மலையிறங்கி பாதிப்பேர் ஓடினர். மீதிப்பேர் ஒரேடியாக மலையேறினர். ஸ்ரீநகர் போக்குவரத்துச் சாலையும் விமான நிலையமும் காப்பாற்றப்பட்டு நமது கஷ்மீரத்தைக் கைப்பற்ற வந்தவர்கள் தோற்று ஓட முக்கியக் காரணமான சோம்நாத் ஷர்மாவும் அவரது படையில் பணியாற்றிய 20 அதிகாரிகளும் 70 சிப்பாய்களும் வீரமரணம் எய்தினர். பத்துப்பேர் குற்றுயிரோடு மீட்கப்பட்டனர். அவர்கள் சொன்னது மூலமாகவே சோம்நாத் ஷர்மாவின் சாகசங்கள் தெரியவந்தன.
மூன்று நாட்கள் போருக்குப் பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. சோம்நாத்தின் சட்டைப்பையில் ஒரு சிறு பகவத் கீதை புத்தகம் இருந்தது. அவரது துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடியே உயிர்நீத்திருந்தார். அவர் அனுப்பிய செய்தியும் காட்டிய வீரமும் மேஜர் ஜெனரல் திம்மையாவால் ஆவணப்படுத்தப்பட்டது. தலைமைத்தளபதிக்கும் தெரியப்படுத்தி அந்தப் படைப்பிரிவுக்கு உரிய கௌரவம் அளிக்க முடிவு செய்தனர். ஆனால் அப்போது ஆங்கிலேயரின் உயரிய ராணுவ விருதான விக்டோரியா சிலுவைப் பதக்கத்துக்கு மாற்று நம் ராணுவத்தால் உருவாக்கப்படவில்லை.
நிலைமை சீராகும் வரை பொறுத்திருக்கச் சொன்னது அரசு, கஷ்மீரம் உள்ளிட்ட பல பகுதிகள் இணைக்கப்பட்டு நாடு ஒன்றானபின் ராணுவத்தின் மீது கவனம் வந்தது. விக்டோரியா சிலுவைக்குப் பதில் பரம் வீர் சக்ரா என்ற பதக்கமும் வேறு சில சிலுவைகளுக்குப் பதில் வேறு பல பதக்கங்களும் நிறுவினார்கள். பரம்வீர் சக்ராவை வடிவமைத்த சாவித்திரி கனோல்கர் என்ற அம்மையார் சோம்நாத் ஷர்மாவின் அண்ணனுடைய மாமியார் ஆவார்.
முதல் பதக்கம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது யோசிக்காமல் தலைமைத் தளபதி கரியாப்பா சொன்ன பெயர் மேஜர் சோம்நாத் ஷர்மா. இவருக்குப் பிறகு பல வீரர்கள் பரம்வீர் சக்ரா பதக்கம் பெற்றனர். நமது கப்பல் போக்குவரத்துக்கழகம் 15 பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரத்திருமகன்களின் பெயரில் 15 கப்பல்கள் விட்டுள்ளது. இன்று கஷ்மீரம் நமது என்று நாம் பெருமைப்படுவதற்கு அங்கே இது போன்ற பலரும் சிந்திய ரத்தமும் உயிர்த்தியாகமுமே காரணம்.
தாய்த்திரு நாட்டைத் தாயினும் மேலாக நேசிக்கும் வீரத்திருமகன்களை வணங்குவதில் பெருமை கொள்வோம். வந்தே மாதரம்.