புதுடெல்லி:
சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பாக , பக்தர்களும் மற்றும் சில இந்து அமைப்பினரும் தாக்கல் செய்துள்ள 51 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், கேரள அரசைக் கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த வலியோடு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனு உட்பட மொத்தம் 51 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஜனவரி 22ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மருத்துவ விடுப்பில் உள்ளதால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இவர் பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும், கோயில்களின் பாரம்பரியத்தை மாற்றி அமைக்கச் சொல்லவோ, மத வழிபாடுகளில் தலையிடவோ நீதிமன்றாம் அறிவுறுத்த இயலாது என்று தெரிவித்தவர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “சபரிமலை விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வில் இருக்கும் பெண் நீதிபதி இந்து மல்கோதரா விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பியுள்ளதால் சபரிமலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 51 சீராய்வு மனுக்கள், புதிய வழக்குகள் பிப். 6ல் விசாரணைக்கு வருகிறது ’’ என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, 51 சீராய்வு மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகிறது.