24 ஜனவரி – அணுவிஞ்ஞானி ஹோமி பாபா நினைவுதினம்
இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஹோமி ஜெஹாங்கிர் பாபா இன்று விமான விபத்தில் உயிரிழந்த தினம். 1909, அக்டோபர் 30ஆம் நாள் பம்பாயில் ஹோமி ஜெஹாங்கிர் பாபா பிறந்தார். இவரது தந்தை பிரபல வழக்கறிஞர் ஜெஹாங்கிர் ஹோமஸ்ஜி பாபா ஆவார். பள்ளிக்கல்வியை பம்பாயில் கற்றவர் எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் 15 வயதில் கேம்ப்ரிட்ஜ் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு பம்பாயில் உள்ள ராஜாங்க அறிவியல் மையத்தில் படித்தார். 1927ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள பையஸ் கல்லூரியில் சேர்ந்தார்.
இவரது மாமா டோரப் டாடா இவரை பொறியியல் படித்துவிட்டு டாடா இரும்பு உருக்காலைகளை கவனித்துக் கொள்ளச் சொன்னார். ஆனால் இவர் கணிதம் பயில விரும்பினார். இவரது தந்தை விஷயத்தைப் புரிந்து கொண்டு பொறியியல் அடிப்படைத் தேர்வில் முதல் வகுப்பில் தேறினால் கணிதப் படிப்பில் சேர பணம் கட்டுவதாகச் சொன்னார். பொறியியல் அடிப்படையில் முதல் வகுப்பில் தேறி கணிதம் படிக்கச் சேர்ந்தார் ஹோமி. இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டு கேம்ப்ரிட்ஜில் இருந்த இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
அப்போது அனைவரையும் ஈர்த்த அணு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிக்குச் சேர்ந்தார். அவருக்கு 1931-32ல் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் கணித அடிப்படையில் தேறியதற்காக பல பல்கலைக்கழகங்களுக்குப் போய்வரும் செலவுக்கான உதவித் தொகை கிட்டியது. 1933ல் இவருக்கு அணு இயற்பியலில் முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது.
ரால்ஃப் ஃபௌலர் என்ற பிரபல இயற்பியலாளரிடம் பயிற்சி மாண்வராக இருந்து தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி சமர்பித்தார். 1935ல் பாபா தம் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிப்பித்து வெளியிட்டார். 1937ல் மேலும் உயர் ஆராய்ச்சிக்கான உதவிபெற்று பணியைத் தொடர்ந்தார். 1939ல் உலகப் போர் தொடங்கிய போது பாபா இந்தியா வந்தார்.
பெங்களூரில் சர் சிவி ராமன் தலைமையில் இயங்கிய Indian Institute of Scienceல் விரிவுரையாளராகச் சேர்ந்தார். ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை இந்தியாவுக்கு அணு சக்தி தேவை என்று ஒப்புக்கொள்ளச் செய்தார் பாபா. டாடா நிறுவனத் தலைவர் ஜேஆர்டி டாடாவிடம் சொல்லி டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை (Tata Institute of Fundamental Research)தொடங்கினார். அதோடு அரசின் உதவியுடன் அணுசக்தி ஆராய்ச்சி மையம் ( Atomic Energy Establishment, Trombay (AEET))ஒன்றையும் ட்ராம்பே பகுதியில் நிறுவினார்.
அமைதிக்கான அணுசக்தி என்ற ஐநா சபையின் குழுவில் தலைவராக 1955ல் ஜெனிவாவில் பாபா தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க கலை அறிவியல் கழகத்தின் முதல் வெளிநாட்டு உறுப்பினர் ஆனார் பாபா. பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அணுசக்தி மூலம் பல மாற்றங்களைச் செய்ய உழைத்த பாபா அணு ஆயுத ஆராய்ச்சியிலும் ரகசியமாக ஈடுபட்டார். 1966ல் மாங் பிளாங் மலைத்தொடர் அருகே இவர் பயணம் செய்த ஏர் இந்தியா 101 விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் பாபா மரணமடைந்தார்.
இவரது மரணத்தில் பல சதித்திட்டங்கள் குறித்துப் பலர் பேசினாலும் இன்று வரை அது அதிகாரபூர்வமாக ஒரு விபத்தாகவே குறிக்கப்பட்டுள்ளது.
நமது புத்தர் சிரித்த போகரண் அணு ஆயுத சோதனைகளுக்கு பாபா முன்னோடியாக விளங்கினார். இன்றும் இவர் பெயரில் அரசின் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.