தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் – ஆகஸ்ட் 19
சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவராக விளங்கியவர் தீரர் சத்தியமூர்த்தி. பொய்யய்யே விதைத்து ஆட்சியைப் பிடித்த திராவிட சித்தாந்தத்தால் தவறாக சித்தரிக்கப்பட்ட வீரர்களில் முக்கியமான தலைவர் அவர்.
இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் என்ற ஊரில் சுந்தர சாஸ்திரிகள் – சுப்புலக்ஷ்மி அம்மாள் தம்பதியரின் மகனாக 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாள் பிறந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. இவர் தந்தை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சிறு வயதிலே சத்தியமூர்த்தி தந்தையை இழந்தார். எனவே தாயாரையும் சகோதரர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறும் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் முடித்து, சத்தியமூர்த்தி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அன்றய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரீனிவாச ஐயங்கார் கீழ் பயிற்சி பெற்று வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கினார்.
தனது கல்லூரி காலகட்டத்திலேயே மாணவர் தேர்தல்களில் பங்குகொண்டு சத்தியமூர்த்தி அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்து, தனது பேச்சாற்றலால் முக்கிய தலைவராக உருவானார். மாண்டேகு செமஸ்போர்ட் சீர்திருத்தங்களை எதிர்த்தும் ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு சென்று பாரதத்தின் குரலை ஒலித்த பண்டித மதன்மோகன் மாளவியாவின் தலைமையிலான குழுவில் இடம்பெற்றார். மதராஸ் ராஜதானியின் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இவர் சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் உருவாக்கியதுதான். கர்மவீரர் காமராஜரின் அரசியல் குரு சத்யமூர்த்திதான். பூண்டி நீர்தேக்கத்திற்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலக கட்டடத்திற்கும் சத்தியமூர்த்தியின் பெயரை காமராஜ் சூட்டினார். தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தில் கலந்து கொண்டு அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, தடையை மீறி தேசியக் கொடியை ஏற்றியதற்காக, அந்நிய துணிக்கடை முன்பாக மறியல் செய்ததற்காக என்று பலமுறை சத்தியமூர்த்தி சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு மத்திய நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.
தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்கு, தீண்டாமை, நிற பேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், மக்களின் அடிப்படை வசதிகள், பெண் கல்வி, பெண்ணுரிமை எனப் பல செய்திகளை விவாதித்து அலசியிருக்கிறார். பாரதியாரின் கவிதை நூல்களை அரசு தடை செய்தபோது, 1.10.1928ல் இவர் பேசிய பேச்சு சட்டசபை வரலாற்றில் தனித்த சிறப்புடையது. ‘பாரதி பாடல் எழுதிய ஏட்டை எரிக்கலாம்; அதை ப்பாடும் வாயை, கேட்டவர் மனத்து உணர்வை என்ன செய்ய முடியும்?’ என்றார். காந்தியடிகள் ‘இது போன்ற பல சத்திய மூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் என்றோ நாட்டை விட்டு ஓடியிருப்பர்” எனப் புகழ்ந்தார்.
தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இவரும் உதவினார். கே.பி. சுந்தராம்பாளை, கிட்டப்பாவை மேடைகளில், தேசியப்பாடல்கள் பாட வைத்தார். ‘மனோகரா’ நாடகத்தில் இவர் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாம். சென்னை மியூசிக் அகாடமி தோன்றவும் பெரிதும் உதவினார். உயர்ஜாதிப் பெண்கள் பரதநாட்டியம் ஆடுவது இழுக்கு என்ற நிலையை மாற்றிப் பலரையும் நாட்டியம் பயில வைத்தார்.
தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரை தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமல்ல, அவரது தலைமையின்கீழ் செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்
தேவதாசிகள் தடை சட்டம் ஒருமனதாக நிறைவேறியதை மறைத்து, அது தவறு என்று சத்தியமூர்த்தி பேசினார் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை மீண்டும் மீண்டும் பரப்பி வரலாற்றைத் திரித்து வைத்துள்ளது திராவிட இயக்கங்கள். மேலும் விவரங்கள் அறிய திரு விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களின் பதிவுகளைப் பார்க்கவும்.
https://www.facebook.com/vijayaraghavan.krishnan/posts/10220138703715253
https://www.facebook.com/vijayaraghavan.krishnan/posts/10220150558771622
https://www.facebook.com/vijayaraghavan.krishnan/posts/10220166688494855
தமிழும், ஆங்கிலத்திலும், வடமொழியிலும், இயல் இசை நாடகம் என்று முத்தமிழிலும் பெரும் புலமை பெற்றிருந்த தீரர் சத்தியமூர்த்தி சிறையில் ஏற்பட்ட முதுகுத் தண்டு காயத்தினால் 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் நாள் காலமானார்.