தமிழகக் கட்சிகளின் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை – பகுதி – 2 – நாஞ்சில் அரவிந்தன்
தமிழகக் கட்சிகளின் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை – பகுதி 2
நமது ஒரே இந்தியா தளத்திற்காக நாஞ்சில் அரவிந்தன் எழுதிய சிறப்பு கற்பனை கட்டுரை.
(சம்பவங்கள் யாவும் இந்த நிமிடம் வரை கற்பனையே. இவை வருங்காலத்தில் உண்மையாக நடந்தேறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை)
தமிழகக் கட்சிகளின் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை – பகுதி 1
தம்பியை இந்த வாட்டி துணை பிரதமர் ஆக்குறோம் என்று துரைமுருகன் சொன்னதும் அதிர்ச்சியான வைகோ, திரும்பி முத்தரசனைப் பார்த்ததும், அவர் பிஸ்கெட் தின்பதில் பிசியாக இருந்ததும் நாம் அறிந்ததே…
வைகோ, தன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, ஓரக்கண்ணால் ஸ்டாலினைப் பார்த்தபடியே, தம்பிக்கு எதுக்கு டெல்லி எல்லாம்… அங்கே ரொம்ப கஷ்டமாயிருக்கும்… ஹிந்தி, இங்கிலீஷ்ல எல்லாம் பேசணும்… சுதந்திர தினம் குடியரசு தினம் கதை எல்லாம் இங்கிலீஷ் நியூஸ்ல வந்தா நல்லாவா இருக்கும்? எவ்ளோ நாள்தான் டெவலப்மென்ட், டெவலப்மென்ட், டெவலப்மென்ட் ஒன்லிய வெச்சு சமாளிக்க முடியும் என்று சொல்ல, ஸ்டாலின் முகம் கடுகடுத்தது.
அதைக் கவனிக்காத வைகோ, வேணும்னா ஒண்ணு பண்ணலாம்… நம்ம கூட்டணிக்குதான் துணைப் பிரதமர் பதவின்னு கண்டிஷன் போடலாம்… அந்த பதவிக்கு, இருக்கிறதுலயே சீனியர் ஒருத்தரை நாமளே தேர்ந்தடுக்கலாம்… நம்ம திராவிடக் கொள்கையை வலியுறுத்துற அடையாளங்களோட இருப்பவரை, உதாரணமா, தோளில் கருப்புத் துண்டு…. அப்படி ஒருத்தரை நாமளே தேர்ந்தெடுத்து துணைப் பிரதமர் ஆக்குவோம்… என்று தன் ட்ரேட் மார்க் சிரிப்போடு சொல்ல, இப்போது துரைமுருகன் முகம் கடுகடுத்தது.
வைகோ, தோளில் கிடக்கும் தன் கருப்புத் துண்டை பெருமிதமாக இழுத்து விட்டபடி அந்தப் பக்கம் திரும்ப,
டீ கொஞ்சம் சூடு கம்மியா இருக்குல்ல… ஏசி போட்டதனாலயா இருக்கும் என்று திருமாவளவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் முத்தரசன்…
வைகோ முகம் கடுகடுக்க, தொலைபேசி ஒலித்தது…
போனை எடுத்த ஸ்டாலின், யா.. ஓகேஜி… ஷூர் ஜி… ஆவோஜி ஆவோஜி என ஆங்கிலமும் இந்தியும் கலந்தடிக்க, வைகோ முகம் பொலிவிழந்தது… துரைமுருகனைப் பெருமையாகப் பார்த்த ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்று சொல்ல, இடைமறித்த வைகோ, அது கேஎஸ் அழகிரி என்க, அது எனக்குத் தெரியும்.. அந்தப் பெயரை நான் சொல்ல மாட்டேன்னு உங்களுக்குத்தான் தெரியல என்றபடி,
நீங்க நாலு பேரும் கொஞ்சம் வெளில இருங்க…. நான் சிவகிரிகிட்ட பேசிட்டு உங்கள கூப்பிடுறேன் என்று திரும்ப, அது அழகிரி என்று திருத்தம் செய்தார் வைகோ… கடுப்பான ஸ்டாலின் முகத்தைப் பார்த்ததும், வாங்கய்யா போலாம் என திருமாவையும் முத்தரசனையும் அழைக்க, பிஸ்கட் தட்டோடு எழுந்தார் முத்தரசன்… திருமாவின் மனதிற்குள் ஆயிரம் கணக்குக் கூட்டல்கள் ஓடிக்கொண்டிருந்தன….
வெளியில் வந்த முன்னாள் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்க, திருமா யாரிடமோ போனில் பேசிவிட்டு, அண்ணே, ஒரு சின்ன வேலை… முடிச்சுட்டு ஒரு மூணு மணி நேரத்துல வந்துடறேன் என வைகோவிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்…
போற போக்கைப் பார்த்தால், நமக்கு இதயத்தில்தான் இடம் கிடைக்கும் என்பதை அறிந்த வைகோ, ஏதாவது செய்து கூட்டணியில் இடம் பிடிக்கவேண்டுமே என யோசிக்க ஆரம்பித்தார்…. அவரது சிந்தனையைக் கலைத்தது அந்தக் குரல்…..
மில்க் பிஸ்கட்டை விட டார்க் சாக்கலேட் பிஸ்கட்தான் டேஸ்ட்டா இருக்கும்… நாளைக்கு வரும்போது அது வாங்கி வைக்கிறீங்களா என, அறை வாசலில் நின்றிருப்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் முத்து…. அதைக் கேட்ட வைகோ மனதில் மின்னலடித்தது அந்த யோசனை….
அப்போது போர்டிகோவில் ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கியவரைக் கண்ட வைகோ ஓடிச் சென்று,
வாங்க சிவகிரி என்று சொல்ல, வாயில் இருந்த பாதி பிஸ்கட்டை வெளியில் எடுத்த முத்தரசன், அண்ணே அது அழகிரி என்று சத்தமாகச் சொல்ல, வைகோ முகம் மாறியது. அவரது தோளில் தட்டிக்கொடுத்த கேஎஸ் அழகிரி,
புரியுது… உள்ளேதான் இருக்காரா என்று கேட்க, வைகோ, ஆமாம் என்பதுபோல் தலையசைத்தார்.
– தொடரும்…