புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகள் சார்ந்த அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று (பிப்.18) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்கள் போராட்டம் அமைதியாக நடந்து வந்தது. அரசும் 100 நாட்கள் நடந்த போராட்டங்களை ஒடுக்கவில்லை. இந்த நிலையில் மே 22 அன்று மாபெரும் ஊர்வலத்தை முன்கூட்டியே கணித்த அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதி தடை உத்தரவு 144 ஐயும் பிறப்பித்தது. இருப்பினும் கடந்த மே மாதம் 22-ம் தேதி போராட்டக் குழுவினர் ஊர்வலம் சென்றனர். அமைதியாக சென்று கொண்டிருந்த ஊர்வலம் திடீரென கலவரமாக மாறிப்போனது. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதியில் உள்ள வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. காவலர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனைக் கட்டுப்படுத்த இயலாத காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்த ஆரம்பித்தது. . இதில் 13 பேர் பலி ஆனார்கள். அதைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்துக் கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் பசுமைத் தீர்ப்பாயமும் தீர்ப்பு வழங்கியது. ஆலையை மூட எந்த முகாந்தரமும் இல்லை என்றும், அதே வேளையில் சில கட்டுப்பாடுகளை ஆலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் நிர்வாகம் 100 கோடி மதிப்பீட்டில் அரசுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு, மரம் நடுதல், கிராம பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றல் ஆகியவற்றுக்காக 100 கோடி ஒதுக்குவதாக கோர்ட்டில் தெரிவித்தது..
இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை எனக் கூறி தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தாவும் வழக்கு தொடர்ந்தது.
இந்தச் சூழ்நிலையில், இந்த வழக்கில் பிப்ரவரி 18 அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளில் (ஆதரவு, எதிர்ப்பு) அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.