மேற்கு வங்க மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி கௌரவ் தத் என்பவர் தனது தற்கொலைக்கு மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிதான் காரணம் என்று கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌரவ் தத் ஐபிஎஸ் படிப்பை 1986-ஆம் ஆண்டு முடித்தவர் . இவர் மேற்கு வங்கத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி, தனது வீட்டில் கை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்து பதற்றமடைந்த அவரது மனைவி, தனது கணவர் கௌரவ் தத்தை மருத்துவமனையில் அனுமதித்தார்.
பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். அவர் தற்கொலைக்கு முன்பாக தனது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “எனக்கு பதவி எதுவும் கொடுக்காமல் காத்திருப்புப் பட்டியலிலேயே மம்தா வைத்திருந்தார். நான் டிசம்பர் 31-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகும் எனக்கு வந்து சேர வேண்டிய தொகைகளை நிறுத்தி வைத்துள்ளார். இதனை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை, ஆகையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மமதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கௌரவ் தத்தின் மனைவி, உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இது பற்றி பாஜக தலைவர் முகுல் ராய் கூறுகையில் அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய மம்தா பானர்ஜியை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.