லக்னோ: வரும் லோக்சபா தேர்தல் 2019 ல், உத்திரப் பிரதேசத்தில் எஸ்பியும் பிஎஸ்பியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று அறிவித்த கையோடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது வரை அறிவித்து விட்டார்கள். இந்தக் கட்சிகள் தற்போது மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் பாஜக, காங்கிரசை எதிர்த்துக் கூட்டணியாக போட்டி இடும் என்று அறிவித்து உள்ளன. உபியில் பிஎஸ்பி எஸ்பி கட்சிகள் முறையே 38, 37 இடங்களில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்து உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 29 லோக்சபா தொகுதிகளில் பிஎஸ்பி 26 இடங்களிலும், எஸ்பி 3 இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளன.
உத்தரகாண்டில் உள்ள 5 லோக்சபா தொகுதிகளில் , 4 தொகுதிகளில் பிஎஸ்பி கட்சியும், எஞ்சியுள்ள 1 தொகுதியில் எஸ்பியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை பாஜகவிற்கு இக்கூட்டணி சிம்ம சொப்பனமாக இருக்கும். அதே வேளையில் மூன்று மாநிலங்களிலும் காங்கிரசுக்கு இது பெருத்த தலைவலியையும், பெரிய தோல்வியையும் தரும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்துரைத்துள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தில் ஏற்கனவே காங்கிரஸ் வலிமையற்று காணப்படுகிறது. பிரியங்கா அரசியலுக்குக் கொண்டு வந்தால் பிஎஸ்பி எஸ்பி இரு கட்சிகளும் இறங்கி வருமா என்று எதிர்ப்பார்த்த காங்கிரசுக்கு அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. ஏனெனில் பிஎஸ்பி தலைவர் மாயாவதி தினந்தோறும் காங்கிரசைத் தாக்கி அறிக்கை விடுகிறார். ஆளும் மத்திய அரசுக்கு எதிரான வாக்குகளை காங்கிரசுக்கு செல்லவிடாமல் இக்கூட்டணி பெருமளவில் தடுக்கும்.
மோடியை எதிர்க்க மாநில கட்சிகள் காங்கிரசை நாடாமல் இருப்பதால் காங்கிரஸ் அச்சமும் கலக்கமும் கொண்டுள்ளது.