முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
ஐதராபாத்: இந்தியா ஆஸ்திரேலியா இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்று ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது இந்தியா. முதல் ஒரு நாள் போட்டியில் ஜாதவ், தோனி அரை சதம் விளாச 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜாதவ் ‘சுழலில்’ ஸ்டாய்னிஸ் (37) , கவாஜா (50) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். குல்தீப் ‘சுழலில்’ ஹேண்ட்ஸ்கோம்ப் (19) சிக்கினார். மேக்ஸ்வெல் 40 ரன்கள் எடுத்தார். டர்னர் (21) ஷமி பந்தில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட்டாகி வெளியேறினார்.
பும்ரா ‘வேகத்தில்’ கூல்டர் (28) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி (36) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி, குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணி துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆட்டத்தைத் துவக்கினர். ஷிகர்தவான் டக் அவுட்டாகினார். ரோகித், இந்திய அணி கேப்டன் கோஹ்லி எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். கோஹ்லி (44) அரை சத வாய்ப்பை இழந்தார். கூல்டர் பந்தில் ரோகித் (37) அவுட்டானார். ராயுடு (13) ஏமாற்றினார்.
பின், இணைந்த தோனி, கேதர் ஜாதவ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஜாதவ் அரை சதம் கடந்தார். தோனியும் அரை சதம் விளாச வெற்றி எளிதானது. ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்த தோனி, வெற்றி தேடித்தந்தார். இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்து வென்றது. ஜாதவ் (81), தோனி (59) அவுட்டாகாமல் இருந்தனர். ஜாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.