புதுடெல்லி; இன்று உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சினைக்கு மூவர் குழுவை மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் சீனியர் வக்கீல் ஸ்ரீ ராம் பஞ்சு உள்ளடிக்கிய குழுவை சமரச பேச்சு வார்த்தைக்கான குழுவாக நியமித்து உள்ளது உச்ச நீதி மன்றம். சமரச பேச்சு வார்த்தை உபியில் உள்ள பைஸாபாத்தில் வைத்து நடைபெறும் என்றும், சமரச பேச்சு வார்த்தை பற்றிய எந்தச் செய்தியையும் ஊடகங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்தப் பேச்சு வார்த்தையை எட்டு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
நிர்மொஹி அகாரா என்ற அமைப்பு உச்ச நீதி மன்றம் பரிந்துரைத்துள்ள மத்தியஸ்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சுன்னி வக்ப் போர்டும், ராம் லல்லா என்ற மற்ற இரு அமைப்புகளும் சமரச பேச்சு வார்த்தை முயற்சியை ஏற்றுக் கொண்டுள்ளன.
14 வழக்குகள் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளன. குறிப்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதுதான் பிரச்சினையின் மையப்புள்ளியாக உள்ளது.
இதுகுறித்து தலைமை நீதிபதி கருத்து தெரிவிக்கையில், இந்த சமரச பேச்சுவார்த்தை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் என்றும், மிக ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் கேமராக்கள் பொருத்தி என்ன நடந்தது என்பதும் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.