நடுத்தரவர்க்கத்தினர், விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள்;மோடி அடித்த மூன்று கோல்கள்; தேர்தல் முடிவுகளை மாற்றிப் போடுமா?
இந்தியாவின் 2019-20 க்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்தார். அனைத்துத் தரப்பினராலும் பாராட்டைப் பெற்றது இந்த பட்ஜெட். இதில் கவனிக்கத் தக்க அம்சம் என்னவெனில், இதை அடுத்து வரும் ஆட்சியால் மாற்றிப் போட இயலாது என்பதே!
பிரதமர் மோடி குறிப்பாக மூன்று தரப்பினரை அதிக அளவில் திருப்திப் படுத்தி உள்ளார். அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள்:
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என புதிய பென்ஷன் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்ற திட்டத்தின் கீழ் இது அமல்படுத்தப்பட உள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்கள் பங்கிற்கு 100 ரூபாயை அரசுக்கு முதலீடாக மாதந்தோறும் செலுத்த வேண்டும். அரசும் தன் பங்கிற்கு 100 ரூபாயை அந்தத் தொழிலாளர் கணக்கில் செலுத்தும். உதாரணமாக 30 வயது நிரம்பிய ஒருவர் இந்த பங்களிப்பைச் செய்யும் பட்சத்தில், அவர் 60 வயது அடைந்து விட்டார் என்றால், மாதந்தோறும்ரூபாய் 3,000 ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதன் மூலமாக 10 கோடி பேராவது பலன் அடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் வேலை வாய்ப்பைக் கணக்கில் எடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அரசுக்கு உதவும்.
விவசாயிகள்:
2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 வருமானமாக வழங்கப்படும் என்று நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் 6000 ரூபாயானது(2000/தடவை) ஆண்டுக்கு மூன்று தவணையாக வழங்கப்படும் என்றும், இதற்காக 75,000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை 2018 டிசம்பரிலிருந்தே அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. தேர்தலில் போதே இரு தவணையை விவசாயிகள் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. மோடி அடித்த மிக முக்கியமான தேர்தல் கோல் என்கிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த மாபெரும் பலன்:
மோடிக்கு கடந்த தேர்தலில் அதிக அளவு ஓட்டு போட்டவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்றால் அது மிகையல்ல. இந்தியாவின் கஜானா நிரம்புவதில் மிக முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். நேற்றைய பட்ஜெட்டின் ஹைலைட்டே தனி நபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு 5,00,000 ரூபாய் வரை கிடையாது என்ற அறிவிப்பே ! இதை அறிவித்து இருப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் மனதில் மாபெரும் இடத்தை இந்த அரசு பிடித்துள்ளது.
இனி இதை எந்த அரசு நினைத்தாலும் திரும்பப்பெற முடியாது என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டியது. நீங்கள் இரண்டாவதாக வீடு வாங்கினாலும், வரிக் கணக்கில் அதன் வருமானம் வராது என்பதும் முக்கியமானது. மேலும் 40,000 ரூபாயிலிருந்து 50,0000 ரூபாய் வரை படிநிலை குறைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. கிராஜுவிட்டி லிமிட்டும் 20 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
நீங்கள் எதையெல்லாம் வரிகட்டும் போது கணக்கில் கொண்டுவரலாம் என்று இருக்கிறதோ, அதன் அடிப்படையில் பார்த்தால் ஆண்டு வருமானம் 7.5 இலட்சம் வரை வரி விலக்கு பெறுவீர்கள். இதுதான் மோடி அடித்த மிக முக்கியமான கோல்.
கிட்டத்தட்ட ஆண்டு வருமானம் 8 இலட்சம் வாங்குபவர்கள் ஏழைகளா என்று பொதுப்பிரிவில் பலன் அனுபவிக்காத ஏழைகளுக்கு சட்டம் கொண்டுவந்த போது அரசை நோக்கி கேள்வி எழுப்பியவர்களுக்கு, தற்போதைய வருமான வரி உச்சவரம்பின் மூலமாக வரி செலுத்துவதில் விலக்கு பெரும் தொகையும் 8 இலட்சம் வரை உள்ளது என்று காண்பித்து உள்ளதன் மூலம் அவர்களின் வாயை அடைத்து உள்ளார் மோடி.
பாஜக இதன் மூலம் வாக்குகளைப் பெறுமா என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும். இன்னும் நான்கு மாதங்களில் அடுத்த ஆட்சியில் யார் அமர்ந்தாலும் இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளனர். அதுவே இந்திய விவசாயிகளுக்கு, நடுத்தர வர்க்கத்தினருக்கு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போகும் பலனாக இருக்கப்போகிறது. அந்த வகையில் அதற்கு அடிகோலிட்ட மோடியையும் , இந்த அரசையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.