உலகம்சிறப்புக் கட்டுரைகள்வரலாற்றில் இன்று

மார்ச் 15 – வங்கியாளர் உதய் கோடக் பிறந்ததினம்

எல்லா சவால்களையும் சரியாகப் பார்க்கத் தெரிந்தால் அதில் ஒரு அற்புதமான வாய்ப்பைக் கண்டுபிடிக்கலாம் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டு திரு உதய் கோடக் அவர்கள்.
1959ஆம் ஆண்டு ஒரு நடுத்தர வர்க்க குஜராத்தி துணி விற்பனையாளர்கள் குடும்பத்தில் பிறந்த இவர் இன்று இந்தியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவர். தனது மேலான்மைப் பட்டப் படிப்பை ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் படித்த இவர், பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்பை உதறிவிட்டு நிதித்துறையில் தனது தொழில் முயற்சிகளைத் தொடங்கினார்.
அன்றைய காலகட்டத்தில் வங்கிகள் மட்டுமே தொழில்முனைவோருக்கு கடன் அளித்து வந்தன. சேமிப்பாளர்களிடம் 6% வட்டி வழங்கிவிட்டு தொழில்செய்பவர்களுக்கு 18% வட்டி என்று வசூலித்து வந்தன. டாடா குழுமத்தின் அங்கமான NALCO நிறுவனத்திற்கான பணத்தேவையை பூர்த்தி செய்ததே இவரது முதல் முயற்சியாகும். கோடக் முதலீட்டு மேலாண்மை நிதி நிறுவனம் என்ற பெயரில் சீட்டுப் பிடிப்பதில் தொடங்கி, கடன் தருவது வரை தொழில்கள் தொடங்கினார். சில காலம் சென்ற பின்னர் அந்த நிறுவனத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா பெருமளவில் முதலீடு செய்தார். அதனால் கோடக் நிறுவனம் கோடக் மஹிந்திரா குழுமம் என்று அழைக்கப்படத் தொடங்கியது.
1986ஆம் ஆண்டு தொடங்கிய இவரது நிறுவனம் வாகனங்களை வாங்குபவர்களுக்கு கடன் வழங்க ஆரம்பித்தது. அதில் தொடங்கி காப்பீடு, பங்கு விற்பனை, பரஸ்பரநிதி ( Mutual Fund ) வங்கி என்று நிதித்துறையில் சாத்தியமுள்ள எல்லா பகுதிகளிலும் கிளை பரப்பியது.
1995ஆம் ஆண்டு அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இவரது நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்தது. இது உதய் கோடக் அவர்களின் மதிப்பை உயர்த்தியது. 2014ல் 13000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிறுவனமாக இந்தியா முழுவதும் 600 கிளைகளுடன் திகழ்ந்து மேலும் வளர்கிறது. 2015ல் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து சிறு தொகைகளைக் கையாளும் பேமெண்ட் பேங்க் எனும் தொழில் முயற்சியில் இறங்கினார். இன்றும் அது ஏர்டெல் நிறுவனத்தின் நிதியாளுமையில் முக்கியமான பங்கை வகிக்கிறது.
Image result for uday kotak
மத்திய அரசின் உள்கட்டமைப்பு நிதியாளுமை உயர்மட்டக் குழுவில் உதய் கோடக் உறுப்பினராக உள்ளார். சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் என்ற சட்ட நிறுவனத்தின் நிதி சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் ஆலோசனைச் செயல்பாடுகளில் உதய் கோடக் பங்குதாரராக உள்ளார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பான CII அமைப்பின் தேசிய நிர்வாக ஆலோசனைக்குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
இன்று இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக கோடக் மஹிந்திரா குழுமம் திகழ்கிறது. இந்தியர்களின் திறமைக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதய் கோடக் ஒரு சிறந்த உதாரணமாவார்.
எண்ணமும் எழுத்தும்: பி.கே.ராமச்சந்திரன்.
(Visited 20 times, 1 visits today)
+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close