டெல்லி: சரவணா பவன் கடையில் பணியாற்றியவரின் மகள் ஜீவ ஜோதி. ஜீவஜோதியின் கணவரை சரவண பவன் ஹோட்டல் ஓனர் ராஜகோபால் கொலை செய்த வழக்கில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக மக்களால் என்றுமே மறக்க முடியாத வழக்கு ஜீவஜோதி வழக்கு. அன்று சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவிதான் ஜீவஜோதி. சாந்தகுமார், கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது.
சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றது ராஜகோபால்தான் என்றும் சொல்லப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2009-ல் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. பெயிலில் வெளியில் வந்த ராஜகோபால் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்தப் பெயிலைக் கேன்சல் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது தமிழக அரசு.
இந்த மனுக்கள் மீதான விசாரணைதான் இன்று நடைபெற்றது. அப்போது, ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதுடன், சென்னை ஐகோர்ட்டின் தண்டனையையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.