விவேகம் போற்றுதும் ஆனந்தம் பாடுதும்
விவேகத்தின் வெள்ளியாம் வங்கத்தின் தங்கமாம்
விண்ணாளும் சநாதனம் வையமாள உழைத்தானாம்
வேற்றிசைத் தத்துவங்கள் வேராட்ட வந்தபோதில்
வேங்கையாய் எழுந்திங்கே வேதத்தை முழங்கியவன்
காலங்கள் கடந்திங்கே காலூன்றி வாழ்கின்ற
காவியங்கள் உபநிஷதம் வரலாறு வழக்கங்கள்
புராணங்கள் தத்துவங்கள் பார்போற்ற வகைசெய்து
மேற்றிசை நாடுகளில் மேதைமை நிறுவியவன்
கடலோடி அந்நியரின் கனம்நிறை தலைதட்டி
கனமான தத்துவங்கள் கம்பீரமாய் உரைத்தானே
கடவுளைக் கண்ணாறக் கண்டிங்கே கைதொழுத
கனவானாம் பரஹம்சர் கைப்படித்துக் கரையேறி
கவின்மிக்க சநாதனம் கைவிட்டு மேற்றிசையில்
கைகட்டிச் சேகவராய் கையறுந்த நிலைகொண்ட
கற்றறிந்த பாரதியர் கண்திறந்து வழிகாட்டி
கைகட்டி நிற்பதிலும் கம்பீரம் காட்டிவைத்தான்
இல்லையெனில் நாமில்லை இழந்துவிட்டால் இனியில்லை
இவ்வுலகில் நமையீன்ற அன்னையவள் புகழுரைத்தான்
பக்தியொடும் வீரத்தொடும் பரந்துபட்ட பண்புடனும்
பணிந்துநம் தாய்தேசம் புவிமெச்ச உயர்த்திடுவோம்
– பார்வதேயன்.