ஸ்டாலின் மேடையில் பேசும் போது மாற்றுக் கட்சித் தலைவர்களை மரியாதையோடு பேச வேண்டும். அப்படி மரியாதை கொடுத்து பேசாவிட்டால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காது ஜவ்வு கிழிந்து விடும் அளவுக்கு தம்மாலும் பேச முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது கொந்தளித்துப் பேசி உள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து ஒட்டன்சத்திரம் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்படுகிறார் எனவும், அவரை போன்றே அவரது தொண்டர்களும் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தாம் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறியவன் என்றும், தந்தையின் ஆதரவில் கொல்லைப்புறம் வழியாக அரசியலுக்கு வந்தவர் என ஸ்டாலினை கேவலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நாம் திருப்பி பேசினால் ஸ்டாலினுக்கு காது சவ்வு கிழிந்துபோய்விடும்” என்றும் தெரிவித்தார்.
முன்பாக கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து வேடச்சந்தூர் பகுதியில் பேசியபோது, திமுக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக சாடினார். அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் காவிரி-கோதாவரி நீர் இணைப்பு திட்டத்துக்காக குரல் எழுப்புவோம் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக. அக்கட்சியின் நிர்வாகிகள் ஒழுங்காக இருந்தாலே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற அவர், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தமிழகத்திற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்று சாடினார்.