திருவனந்தபுரம்: சபரிமலையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பாதுகாக்கும் வகையில் சபரிமலை கர்மா சமிதி என்னும் வலதுசாரி அமைப்பின் சார்பில் திருவனந்தபுரம் நகரில் உள்ள புத்தரிகன்டம் திடலில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயி பங்கேற்று பேசினார்.
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் விஷயங்கள் பின்பற்றப்படவேண்டும் என மாதா அமிர்தானந்த மயி வலியுறுத்தியுள்ளார்
மேலும் மாதா அமிர்தானந்த மயி கூறியதாவது:-சமுதாயத்தில் மாற்றங்கள் அவசியமானவை. ஆனால், அந்த மாற்றங்கள் பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையிலும் அமைய வேண்டும். கோவில்கள் நமது கலாச்சார அடையாளத்தின் தூண்கள் என்பதால் கோவில்களில் பாரம்பரிய மான பழக்கவழக்கங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்.சபரிமலையில் சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிப்பட்ட பாரம்பரியம் உள்ளதால் அந்த பாரம்பரியங்களை எல்லாம் மதித்து நடக்க வேண்டும் என்றார்.