ஏப்ரல் 20 – ஸம்ஸ்க்ருத அறிஞர் சுதாகர் சதுர்வேதி பிறந்ததினம்
ஆங்கிலம் வரும் முன்னர் நம் நாட்டில் பல்வேறு வட்டார மொழிகள் இருந்தாலும் இணைப்பு மொழியாக இருந்து மக்களைப் பண்பாட்டுப் பிணைப்பில் வைத்திருந்தது ஸம்ஸ்க்ருதம். கர்நாடகத்தில் இன்றும் ஒரு கிராமம் ஸம்ஸ்க்ருதத்தைப் பேச்சு மொழியாகக் கொண்டுள்ளது. ஸம்ஸ்க்ருத பாரதி உள்ளிட்ட அமைப்புகள் அம்மொழியைப் பேச்சு மொழியாகப் பரவலாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நம் நாட்டில் ஸம்ஸ்க்ருத அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் பணி வெளியே அதிகம் அறியப்படாது இருப்பதால் அவர்களும் குடத்தில் இட்ட விளக்குப் போலவே இருக்கின்றனர். அத்தகையவர்களில் ஒருவர் சுதாகர் சதுர்வேதி.
1897 ஏப்ரல் 20 அன்று கர்நாடகத்தில் துமக்கூர் மாவட்டத்தில் கியாத் சந்திரா என்ற ஊரில் பிறந்தார். இவருக்கு 122 வயதாகிறது. இவர் ஹரித்வாரில் ஸ்வாமி ஸ்ரத்தானந்தரின் காங்க்ரி குருகுல ஆஸ்ரமத்தில் படித்து வேத வாசஸ்பதி என்ற பட்டம் பெற்றார். இந்தப் பட்டம் முதுகலைப் பட்டத்துக்கு இணையானது. இவர் நான்கு வேதங்களையும் கற்கவேண்டும் என்று பட்டம் பெற்ற பின்னரும் பல பாடசாலைகளில் சேர்ந்து படித்தார்.
காந்திஜி ஒரு முறை காங்க்ரி குருகுலத்துக்கு வந்தபோது அவரைச் சந்தித்து உரையாடினார். காந்திய வழிகளைப் பின்பற்ற விழைந்தார். ஜாலியன்வாலாபாக் உள்ளிட்ட ஆங்கிலேயர் ஆஸ்ரமத்தின் கொடூரங்களைக் கண்டு கோபம் கொண்டார். ஆனாலும் ஆஸ்ரமத்தை விட்டு கல்வியின் காரணமாக வெளியேற இயலவில்லை. கல்வி கற்கும் காலத்தில் காந்திஜி கவர்னர்களுக்கும் வைஸ்ராய்களுக்கும் எழுதும் கடிதங்களைக் கொண்டு சேர்ப்பது சுதாகரின் பணியாக இருந்தது. காந்திஜி இவரை கர்நாடகி என்று அழைத்தார். காங்கிரஸ் வட்டாரங்களிலும் ஆங்கிலேயர் அலுவலகங்களிலும் சுதாகர் சதுர்வேதி காந்தியின் போஸ்ட்மேன் என்று அழைக்கப்பட்டார்.
இவரது வலது கை 1938ல் ரயில் பயணத்தில் ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. சுதாகர் சென்ற ரயில் சிம்லா மலைப் பகுதியில் செல்லும்போது மூன்று பெட்டிகள் அதிக எடையுடன் இருந்ததால் கழற்றிவிடச் சொன்னார்கள். கடைசி மூன்று பெட்டிகளில் இருந்த மக்களை இறக்கிவிட்டு இவர் உதவிக் கொண்டிருந்தார். அப்போது பெட்டிகள் கழற்றிவிடப்பட்டன. இவர் ரயிலில் இருந்தார். மோதி விபத்துக்குள்ளாகும் என்று இவர் குதித்ததில் வலது கை சேதமடைந்தது.
இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு காந்திஜிக்கு உதவி செய்தார் என்று 31 முறைகள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பெஷாவர் முதல் வேலூர் வரை நாட்டில் உள்ள அத்தனை சிறைகளிலும் இவர் சிறை வைக்கப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பிறகு சுதாகர் தம் சொந்த ஊருக்குத் திரும்பி அங்கே ஸம்ஸ்க்ருதம் கற்றுத்தந்து வாழ விரும்பினார். ஸர்தார் படேல் இவருக்கு மைசூர் மாகாண மந்திரிசபையில் அமைச்சர் பதவி தர விரும்பினார். ஆனால் சுதாகர் மறுத்துவிட்டார். தேச ஒருங்கிணைப்புக்கு மிகவும் பாடுபட்டார்.
சுதாகர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆர்ய மித்ரா என்பவரைத் தன் மகனாக தத்தெடுத்துக் கொண்டார். அவருக்கு மூன்று பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு முதல் ஆசிரியர் சுதாகர் சதுர்வேதி ஆவார். 2011ல் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார். பெங்களூரு ஜெயநகர் பகுதியில் வசித்து வருகிறார். தினமும் 8 மணி நேரம் வேலை செய்கிறார். காலை மூன்று மணிக்கு எழுந்து பூஜைளை முடித்து பின்னர் வேதம் குறித்த படிப்பும் ஆராய்ச்சியும், அதன் பிறகு ஸம்ஸ்க்ருதத்தில் கட்டுரைகள் எழுதுவார். பின்னர் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பார். மாலை 7 மணிக்கு ஓய்வுக்குச் சென்று விடுவார். வேதங்களில் சொன்னபடி வாழ்ந்தால் மகிழ்ச்சி தவிர வேறில்லை என்று சொல்கிறார் சுதாகர். ஒவ்வொரு சனிக்கிழமையும் வேதம், ஸம்ஸ்க்ருதம் குறித்து ஒரு மணி நேர உரை நிகழ்த்துகிறார்.
இவரது சேவைகளைப் பாராட்டி மோதிலால் பனாரஸிதாஸ் நிறுவனம் சுதாகர் சதுர்வேதியின் 100ஆவது பிறந்த தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடியது. கர்நாடக சாகித்ய அனுவாத ஆகாடமி இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. 2009ல் காசி ஸ்ரீ சேஷ சாஸ்திரி அறக்கட்டளை இவருக்கு சமூக பொருளாதார மேம்பாட்டு ஆசிரியர் விருது வழங்கியது. இவர் படித்த காங்க்ரி குருகுலம் 2010ல் பல்கலைக்கழகமாக உயர்ந்துள்ளது. 2010ல் இவருக்கு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. 2010 குடியரசு தினத்தன்று கர்நாடக அரசு இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து மரியாதை செய்தது.
2002ல் கன்னடத்தில் வேத பாஷ்யம் குறித்த 30000 பக்க புத்தகம் எழுதும் ஆரிய சமாஜத்தின் பணிக்கு சுதாகர் சதுர்வேதி தலைமை ஏற்றார். 2009ல் அதில் ரிக்வேதத்துக்கான ஆறு பாகங்கள் உள்ளிட்ட மூன்று வேதங்களுக்கான பணி முடிவடைந்துள்ளது. பெங்களூரு ஆரிய சமாஜத்தின் முக்கிய வழிகாட்டியாக இருந்து வருகிறார் சுதாகர் சதுர்வேதி.
வந்தே மாதரம்