ஆன்மிகம்இலக்கியம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

காதலென்றாகிக் கரம்நீட்டி அணைக்கும் மாதொருபாகன்! – ராஜாராமன்

நம்ம மக்கள்கிட்ட முற்றிலும் தவறா புரிஞ்சிக்கப்பட்ட ரெண்டு வார்த்தைகள் காதலும் ஆன்மீகமும்… பொண்ணோ ஆணோ கொஞ்சம் கண்ணுக்கு லட்சணமா இருந்துட்டா குபீர்ன்னு பொங்கியெழுந்து ஹார்மோன்களின் சித்து விளையாட்டில் அமிழ்ந்துவிடுவது மட்டுமா காதல்? கோயிலுக்கு போயி ”அப்பனே ஆண்டவா… எனக்கு இதைக் கொடுத்தேன்னா உனக்கு அதைச் செய்யிறேன்”ன்னு கும்பிட்டுட்டு பிரகாரம் சுத்தும்போதே லௌகீகத்துல கரைஞ்சி போறதா ஆன்மீகம்?! இரண்டுக்குமான பொருள் வேறொரு தளத்தில் காலூன்றி இருக்கின்றதல்லவா?! .. காதலும் ஆன்மீகமும் வேறு வேறில்லை. காதல் முற்றிய நிலைதான் ஆன்மீகம்.. சாரதாதேவியை இறைவியா வழிபட்ட ராமகிருஷ்ணரின் மனநிலை கொண்டு யோசித்தால் ஒருவேளை புரிந்துகொள்ள முடியும்.

இன்னிக்கு நானும் அண்ணன் கே.ஆர்.பி செந்திலும் பீச் ரொடு வழியா திருவான்மியூர் போயிட்டுருந்தோம்.. வழில ஒரு ஜூஸ் கடையில நிறுத்தி ஜூஸ் குடிச்சிட்டுருந்தோம். அப்போ ஒரு இளங்காதல் ஜோடியும் ஆளுக்கொரு ஜூஸை வாங்கிட்டு பைக்ல சாய்ஞ்ச வண்ணம் ஜூஸோட ஒருத்தரை ஒருத்தர் பார்வையாலும் பருகிகிட்டுருந்தாங்க… “இந்த பசங்களை பாக்குறப்ப எனக்கு பரிதாபமா இருக்கு தம்பி”ன்னாரு அண்ணன்.. நான் லேசா சிரிச்சேன்.. “ஏன் தம்பி சிரிக்கிறீங்க?”ன்னு அண்ணன் கேட்க, நானு “வாங்கண்ணே, அப்புறமா சொல்றேன்”னு சொல்லி கெளம்பினோம்… போன வேலையை முடிச்சிட்டு ரெண்டு பேரும் திருவான்மியூர் மருந்தீசர் கோயிலுக்கு போனோம். அற்புதமான, அழகான பெரிய கோயில்… கோயிலுக்குள்ளேயே நிறைய மரங்களும் பூக்களுமா அடர்ந்து கண்ணுக்கும் மனசுக்கும் நிறைவா மகோன்னதமா இருந்திச்சி. சுத்தி வரும் போது அண்ணங்கிட்ட சொன்னேன்..

“அண்ணே… நாம இன்னிக்கு மருந்தீசரை பாக்க வந்தமாதிரி கிட்டத்தட்ட ஆயிரத்தி முன்னூறு வருஷம் முன்னாடி ஒருத்தர் திருவையாறு ஐயாரப்பனைப் பாக்க போனாரு… அவரு எப்படி சிவனைப் பாத்தாருன்னு ஒரு பதினோரு பாட்டு எழுதி இருக்காரு…. பாடுனவரு அப்பர் அப்டீன்னு சொல்லப்படும் திருநாவுக்கரசர்… தேவாரப்பாட்டு…”அப்டீன்னு ஆரமிச்சி சொன்னேன்.

அப்பர் திருவையாறுக்கு “யாதும் சுவடு படாமல்” அதாவது எவ்வித எண்ணங்களின், அறிவினாற்பெற்ற முன் தீர்மானங்களின் சுவடுமில்லாமல் க்ளீன் சிலேட்டு மாதிரி போறார். ஜென் தத்துவத்துல ‘பாத்திரத்தை காலி செய்”னு சொல்வாங்க… இதுவரை சேர்த்துவைத்த அறிவு, அனுபவம், எண்ணக்குவியல் எல்லாத்தையும் உதறி ஒரு குழந்தையைப் போன்று, வெள்ளைக் காகிதம் போன்று அணுகும்போது தான் ஞானம் பெற முடியும்ங்கிறது கருத்து… இந்த “யாதும் சுவடு படாமல்” வரிக்கு நம்ம புலவர் பெருமக்கள் “சத்தமோ ஆர்ப்பாட்டமோ இல்லாம மெல்ல நடந்து போறார்”ன்னு எழுதி இருந்ததை பாத்து எனக்கு சிப்பு வந்துடிச்சி சிப்பு.

இதையே “குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் விண்ணரசு அவர்களதே (மத்தேயு: 19:14)” என்று ஏசுநாதர் சொல்வதாக பைபிள் கூறுகிறது… ஏதும் அறிவுச்சுமையின் கசடுகளின்றி குழந்தையைப் போன்று அணுகும்போது இறைவன் இருகரமேந்தி அணைத்துக் கொள்கிறான் நம்மை.

அப்போ அவர் கண்ணுக்கு உலகமே காதல்ஜோடிகளோட வரிசையா தெரியுது.. எல்லா ஜீவராசிகளும் ஜோடி ஜோடியா போகுது.. எல்லாத்தையும் பாத்துட்டு சிவனை பாத்தா… அவனும் மலையன் மகளொடு ஜோடியா நிக்கிறான். உலகம் காதல்மயமானதுங்கிறதை உணர்றார். ”கண்டறியாதன கண்டேன்”ன்னு பரவசமாகிப் பாடுறார்…

முதல் பாட்டு முழுசாவும், பதினோரு பாட்டுலேருந்தும் குறிப்பிட்ட ஒவ்வொரு வரியையும் மட்டும் எடுத்துப் போடுறேன் பாருங்க.

”மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,

காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.

கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்”

மாதர்ப்பிறை – அழகிய பிறைநிலா, கண்ணி – காம்புகள் மட்டும் ஒரு சைடாவும் பூ ஒரு சைடாவும் வெச்சி கட்டப்பட்ட பூமாலை. ரெண்டையும் சூடிய இறைவனை மலையன் மகளொடு துதிச்சு பாடி, போதொடு – போது அப்டீன்னா பூ, நீர் சுமந்து ஏத்தி – பூவும் அபிஷேக நீரும் கொண்டு போறவங்க பின்னாடி போறப்போ காதல் மடப்பிடி- பிடின்னா பெண்யானை.. பெண்யானையும் ஆண்யானை(களிறு)யும் ஜோடியா போறதை பாக்குறார். இறைவனைப் பாக்குறார்.. ‘கண்டறியாதன’ காண்கிறார்.

“காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்”

”கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்” (சேவலும் பெட்டையும் ஒன்றோடொன்று கூடிக் கலந்து குளிர்ந்து வர்றதை பாக்குறார்)

”வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்” (ஆண்குயிலும் பெண்குயிலும் காதலாடிக் களைத்துப் பின் இணைந்து வருது)

”சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்” ( இளம் பெண் அன்னமும், ஆண் அன்னமும் அசைந்தாடி வருது)

”பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்” ( பெண்மயிலும் ஆண்மயிலும் கூடி அணைச்சிக்கிட்டே வருதாம்)

”வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்” ( வெண்ணிற அன்றில் ஜோடி)

”இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்” (ஏனம் – மான், பன்றின்னு ரெண்டு அர்த்தம் உண்டு.. இடிகுரல் ஏனம்னு சொல்றாதால பன்றியாத்தான் இருக்கணும்)

”கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்” (கலைமான் ஜோடியும் கூடிக்களித்து பின் அந்த சந்தோஷத்துல ஆடி வருதாம்)

”நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்” ( நாரை காதல்ஜோடி)

”பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்” (கிளிக் காதலர்கள்)

”இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்” ( நாகு – பசு, ஏறு- காளை. பசுவும் காளையும் ஒன்னையொன்னு தழுவிக்கிட்டே வருதாம்)

இப்டி எல்லா காதல்ஜோடிகளும் சிவனை பாக்க போற அழகைப் பார்த்து உருகிட்டே இவரும் போயி சிவனைப் பாத்தா அங்கவனும் ஐயாரப்பனும் அறம்வளர்த்த நாயகியுமாய்க் காதலாடி நிக்கிறான். திருவையாறில கைலாசத்தைப் பார்த்து நிறைகிறார் அப்பர்பெருமான்.

இதைச் சொல்லிட்டு அண்ணன்கிட்ட சொன்னேன் “அண்ணே… நம்ம மரபே காதல்மரபு.. நம்ம ஆன்மீகமும் காதலாகிக் கசியும் ஆன்மீகம். நம்ம இறைவனும் மாதொருபாகன். அதுனால காதலர்களை வாழ்த்துவோம்.. காதலாகி நிறைந்து ததும்பும் இறைவனை வாழ்த்துவோம்.. காதலில் கரைந்து மூழ்கி ஆன்ம அனுபூதி எய்துவோம்”

”ஆதலினால் காதல் செய்வீர் மானிடரே” அப்டீன்னுதான் பாரதியும் சொல்றான்… தனியொரு ஆணும் பெண்ணுமாய் செய்யும் காதல் மொட்டவிழ்ந்து சகல ஜீவராசிகளின் மீதான காதலாய் விரியும் போது அது பெரும் ஆன்மீக அனுபவமாய் நிறைக்கின்றது. அந்தக் காதலின் வாசத்தில் தேனுக்கு வண்டென மயங்கி வந்து அங்கமர்கிறான் இறைவன்.

பன்னிரு திருமுறையில் நான்காம் திருமுறையில் அப்பர்பெருமான் பாடிய இந்த பதினொரு பாடல்களையும் கம்பீரமான குரலில் இசைப்பாடலாகப் பாடியிருக்கிறார் பா.சற்குணநாதன். கேட்டுக் கரையுங்கள்.

எண்ணமும் எழுத்தும்

விந்தைமனிதன் ராஜாராமன்

திருத்துறைப்பூண்டி

(Visited 325 times, 1 visits today)
+1
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close