ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் – நவம்பர் 19

பாரதப் பெண்களின் வீரத்திற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த குரலில் கூறும் பதில் ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்றுதான் இருக்கும். அந்த வீரத்தாயின் பிறந்ததினம் இன்று.

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு வாரணாசி நகரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மணிகர்ணிகா என்பதாகும். தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்திச்சண்டை போன்றவற்றில் பயிற்சி பெற்று இருந்தார்.
1842 ஆம் ஆண்டு ஜான்சியின் மஹாராஜாவாக இருந்த கங்காதர்ராவ் நிவால்கர் என்பவரை மணந்து கொண்டார். அதன் பிறகு லக்ஷ்மிபாய் என்று அழைக்கப்படலானார். இவர்களுக்கு 1851ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான், ஆனால் சில மாதங்களிலேயே அந்த மகன் இறந்துவிட்டான்.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி, லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து, ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற மாவீரன் தாந்தியா தோபேவை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். ராணியின் உடலைக்கூட எதிரிகள் கைப்பற்றி விடக்கூடாது என்று அவரின் வீரர்கள் ராணியின் உடலை எரித்து விட்டனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் அணிக்கு ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் அணி என்றுதான் பெயரிட்டார். காலங்களைக் கடந்தும் அந்த வீரப்பெண்மணியின் வரலாறு நாடு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

(Visited 24 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *