சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

சக்ரவர்த்தி திருமகன் – ராஜாஜி பிறந்தநாள் – டிசம்பர் 10.

புகழ் பெற்ற வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர், கருத்தியல் எதிரிகளால் மூதறிஞர் என்று போற்றப்பட்டவர், சமூக சீர்திருத்தவாதி, மேற்கு வங்க ஆளுநர், பாரதத்தின் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாணத்தின் முதலமைச்சர், எதிர்க்கட்சியை இல்லாமல் இருந்த காலத்தில் காங்கிரசுக்கு எதிராக சுதந்திரா கட்சியை கட்டமைத்தவர், முதல்முதலாக தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் செய்தவர், விற்பனை வரி என்ற புதிய வரியை அறிமுகம் செய்தவர் என்றெல்லாம் அறியப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு எழுத்தாளர் என்ற ஒரு முகமும் உண்டு. 

டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே வந்ததும் `சிறையில் தவம்’ எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, கதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்கு, கதைக்கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு, நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்துவைத்திருந்தார்.  

“சிறுகதை நெடுங்கதையைப்போல் நீடித்த ஒரு காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்திரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்திரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்பட மாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால், கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்செனத் தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப் படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும். இந்தக் கதைகளெல்லாம் நான் வெறும் பொழுதுபோக்காக எழுதவில்லை. என் நாட்டு மக்களுக்கு என்னுடைய எந்தக் கருத்து நன்மைபயக்குமோ, மக்களின் முன்னேற்றத்துக்கு எந்த அனுபவ உண்மை பயன்படுமோ அதைக் கதைபோலச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வெறும் கதையழகு, கலையழகுக்காக நான் இவற்றை எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட சில உண்மைகளை என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவே.” ” இது தனது கதைகளைப் பற்றி ராஜாஜியே செய்த திறனாய்வு. 

மதுவிலக்குப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு போன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் துணையாகப் பிரசாரம் செய்யும் நோக்குடன் நிறைய கதைகள் எழுதியவர் ராஜாஜி. அவர் எப்போதுமே ஓர் ஒழுக்கவாதி. ஆகவே, சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு நீதி இருக்க வேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். அதனால் அவருடைய கதைகளில் பிரசார தொனி சற்றுத் தூக்கி நிற்கும். ஆனால், அத்தகைய பிரசாரம் ஏதுமில்லாத வாழ்க்கைக் கதைகளையும் அவர் சுவைபட எழுதியிருக்கிறார். ராஜாஜி வக்கீலாக இருந்ததாலோ என்னவோ, அவருடைய பெரும்பாலான கதைகளில் ஒரு வக்கீல் வந்து நின்றுவிடுகிறார்.

ராஜாஜி கதைகள்’, `பாற்கடல்’, `பிள்ளையார் காப்பாற்றினார்’, `நிரந்தரச் செல்வம்’ ஆகிய தொகுதிகளிலும் தனியாகவும் என 60-க்கு மேற்பட்ட சிறுகதைகளை ராஜாஜி எழுதியிருக்கிறார். மணிக்கொடியும், ஆனந்த விகடனும் சிறுகதைக்கு இடம் கொடுக்கத் தொடங்கும் முன்னரே ராஜாஜி கதை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929-ம் ஆண்டில் மதுவிலக்குப் பிரசாரத்துக்காகவே அவர் தொடங்கிய `விமோசனம்’ இதழில் அவர் கதைகள் எழுதினார். 

ராஜாஜியின் அறிவு முதிர்ச்சிக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கே அவரது எழுத்துகளுக்கு மதிப்பைக்கொடுத்தது. அரசியலில் இருந்த புகழால் இலக்கியத் துறையில் பெரும்பெயர் பெற்ற ராஜாஜி, தமது எழுத்துத்திறனால் இலக்கியத் துறையிலும் தமக்கு நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டார். `சமீபகால இலக்கிய வரலாற்றில், அரசியலை இலக்கியத்துக்குள் கலந்தோருள் ராஜாஜி முதன்மையானவர்.

1954-ம் ஆண்டில் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது, ராஜாஜிக்கு வயது 76. அதன் பிறகு ராமாயணத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். . `கல்கி’ வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை `சக்கரவர்த்தித் திருமகன்’ எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைத் தொடராக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே, `சக்கரவர்த்தித் திருமகன்’ எனும் தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான். அந்தத் தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது, தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று, அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958-ம் ஆண்டில் கிடைத்தது. 

`குழந்தைகளுக்கான கதைகளும் எழுதினார் ராஜாஜி. சிறுவர்களை ஒன்றும் அறியாதவர்கள், அவர்களுக்குப் பெரியவர்களின் உபதேசம் தேவை என்ற எண்ணத்தை, முற்றிலும் இந்தக் கதைகளில் உடைத்துவிட்டார் ராஜாஜி. நன்கு புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமுடையவர்களை வைத்துக்கொண்டே கதைகளைச் சொல்லியிருக்கிறார்’ என்று ராஜாஜியைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் எழுதிய ஆர்.வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

சேலத்தில் இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கியச் சங்கத்தை நிறுவி, அதன்மூலம் தொடர்ந்து கூட்டங்களை நடத்தியவர் ராஜாஜி. Tamil Scientific Terms Society என்ற அமைப்பை நிறுவி தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்க காரணமாக இருந்தார். 

மஹாபாரதத்தை வியாசர் விருந்து என்ற பெயரிலும், கண்ணன் காட்டிய வழி என்று பகவத் கீதையை, திருமூலர் திருமொழி, சோக்கிரதர், உபநிடதப் பலகணி, குடி கெடுக்கும் கள், திக்கற்ற பார்வதி, ராஜாஜி கதைகள், ராஜாஜி கட்டுரைகள் என்று பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். 

ராஜாஜி-கல்கி-சதாசிவம்-எம்.எஸ்.சுப்புலட்சுமி-ரசிகமணி ஆகியோர் நட்சத்திர நண்பர்களாக அன்றைய நாள்களில் மதிக்கப்பட்டவர்கள். ராஜாஜி கவிஞர் அல்லர். ஆனால், சில பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதி இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு பாடல் `குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…’ என்ற பக்திப்பாடல்.

ராஜாஜி, தம் 37-ம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைசி மகள் லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது, மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது, மகள் லட்சுமிக்கு 45 வயது. இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்தவண்ணம் இருந்த அவரால், `குறை ஒன்றும் இல்லை…’ என்று எப்படிப் பாட முடிந்தது என்பது அதிசயம்தான். 

சில பத்தாண்டுகளைத் தாண்டிப் பார்க்கும் அறிவாற்றல் மிக்க தலைவரை இன்று மரியாதையுடன் ஒரே இந்தியா தளம் நினைவு கொள்கிறது. 

(Visited 385 times, 1 visits today)
Tags

One Comment

  1. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ராஜாஜியைப் பற்றிய எளிய அருமையான அறிமுகம்.
    ஒரே இந்தியாவின் தொண்டு வாழியவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close