சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

பாரத ரத்னா C N R ராவ் பிறந்தநாள் – ஜூன் 30

சி வி ராமன், அப்துல்கலாம் ஆகியோரைத் தொடர்ந்து அறிவியல் துறைக்கான பங்களிப்புக்கு பாரத நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது இந்தியரான திரு சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று

பெங்களூரு நகரைச் சார்ந்த ஹனுமந்த நாகேஸ ராவ் – நாகம்மா தம்பதியினருக்கு 1934ஆம் ஆண்டு பிறந்தவர் திரு ராவ். ஒரே மகனான அவருக்கு தாய் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் தந்தை ஆரம்பநிலை அறிவியல் மற்றும் ஆங்கிலத்தை வீட்டில் இருந்தவாறே கற்பித்தனர். நேரடியாகவே ஆறாம் வகுப்பில் சேர்ந்த திரு ராவ் 1947ஆம் வயதில் தனது பதின்மூன்றாம் வயதில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனது பதினேழாம் வயதில் வேதியல்துறையில் இளங்கலை பட்டத்தை மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்தும், முதுகலைப் பட்டத்தை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இருந்தும் அதன் பின்னர் தனது இருபத்தி நான்காம் வயதில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

அதன் பிறகு பாரதம் திரும்பிய ராவ் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ( Indian Institute of Science – Bangalore ) விரிவுரையாளராகவும் அதன் பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ( Indian Institute of Technology – Kanpur ) பேராசிரியராகவும், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சிறப்பு அழைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.

பல்வேறு அறிஞர்களோடு இணைந்து திரு ராவ் ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் ஐம்பதிற்கும் மேலான நூல்களையும் எழுதி உள்ளார். பாரத பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும் திரு ராவ் பணியாற்றியுள்ளார். இவரது பங்களிப்புக்காக ஐம்பதிற்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.

1968ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாயக் விருது, 1974ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 1985ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.  இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தது போல 2014ஆம் ஆண்டு பாரதத்தின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது திரு ராவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்றய காலகட்டத்தில் நாட்டிற்கு பல்வேறு துறை விற்பன்னர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. திரு ராவ் போன்று திறமையான அறிஞர்கள் நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் வரட்டும். அவர்களுக்கு ராவ் போன்றவர்களின் வாழ்கை உந்துசக்தியாக இருக்கட்டும்.

(Visited 67 times, 1 visits today)
+1
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close